பக்கம் எண் :

பெரியபுராணம்321

     சாய - வீழ; பொல்லாங்கு ஒழிய. நா - அரியப்பட்டமையால் இனி இகழ்ச்சி கூற
ஆற்றவிலராவார் ஆதலின் ஒழிய என்றார்.
 

     ஆயமாதவத்து ஐயடிகள் - அரசாட்சியைத் துறந்து திருத்தொண்டு
நயந்தாராதலின் ஆய மாதவத்து என்றார். மாதவம் - பெருந்துறவு - ஆய -
மகத்தாகிய; பெரிதாகிய; திறம் - திருத்தொண்டின் சிறப்பினை.
 

     காடவர் - சோழ மரபுகளுள் ஒன்று.
 

     இது கவிக் கூற்று; ஆசிரியர் தமது மரபுப்படி இதுவரை கூறிவந்த புராணத்தை
முடித்து வடித்துக் காட்டி மேல்வரும் புராணத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார். 7
 
     சரிதச் சுருக்கம்: சத்தி நாயனார் புராணம் :- சோழ நாட்டில் வரிஞ்சையூரில்
வாய்மை வேளாண் குலம் விளங்க அவதரித்தவர் சத்தி நாயனார். அவர் சிவனுக்
காட்செய்யும் திறத்தினர். யாவரேனும் தம்முன்பு சிவனடியார்களை
இகழ்ந்துரைப்பாராயின் அவர்களது நாவினைத் தண்டாயத்தினால் வலித்துக் கத்தியால்
அரிந்து தூய்மை செய்வார். அன்பினாற் செய்யும் இந்த அரிய ஆண்மைத்
திருப்பணியைப் பல காலம் வீரத்தாற் செய்திருந்து சிவன் றிருவடி சேர்ந்தனர்.
 
     கற்பனை : 1. வேளாண் குலம் இயல்பின் அமைந்த வாய்மையாற் சிறந்தது.
 
     2. சிவன் அடியார்களை இகழ்ந்து பேசியவர்களது நாவினை வலித்து வாங்கி
ஆண்மை யுடன் அரிந்து தூய்மை செய்தல் அரிய வீரத் திருப்பணியாகும்.
 
     3. சிவனையும் சிவனடியார்களையும் இகழ்ந்து பேசக் கேட்டால் அவ்வாறு
பேசியவர்களைத் தக்கவாறு தண்டித்தல் வேண்டும் என்பது சிவாகம விதி;
அஃதியலாதாயின் சிவ சிவ என்று காது பொத்திக்கொண்டு அவ்விடம் விட்டு
விரைந்தேகுதல் வேண்டும். இவ்விரண்டு மின்றி வாளா கேட்டிருத்தல் சிவாபராதமாம்.
 
     தலவிசேடம் :- வரிஞ்சையூர் - கீழ்வேளூர் என்னும் நிலையத்தினின்றும்
தெற்கில் மட்சாலையில் 3 நாழிகை யளவில் உள்ளது திருக்கீழ் வேளூர்; அதன் தென்
கிழக்கில் இரண்டு நாழிகை யளவில் திருவரிஞ்சையூரினை அடையலாம்.
திருக்கோயிலில் இந்நாயனாரது திருவுருவம் தாபித்து வழிபடப்பட்டு வருகிறது.
 

     சத்திநாயனார் புராணம் முற்றிற்று.