| தொகை: ஐயடிகள் காடவர்கோன் நாயனாரது அடியார்க்கும் நான் அடியேனாவேன். |
| பேரும் மரபும் தொகைநூல் தொகுத்துக் கூறியது. |
| வகை: சத்தி.....மொழிந்து - ஞான சத்தியாகிய வேலாயுதத்தை ஏந்திய வலிய கையினையுடைய குமாரக் கடவுளின் தாதையாராகிய இறைவரது பதிகள் எங்கும் முத்திப் பதத்தினையே குறிக்கோளாகக் கொண்ட ஒவ்வோர் வெண்பாப் பாடி; முடியரசாம்.......என்னும் - அரனுக்காக ஐயமேற்றல், முடிசூடிய அரசராகும் அத்தன்மைக்கு மும்மையாலும் நன்றாகும் என்று எடுத்துக்கூறிய; ஐயடிகளாகின்ற பல்லவனே - ஐயடிகள் என்னும் பெயரினையுடைய பல்லவரே; பத்திக்கடல் - பத்தியின் கடல் போன்றவர். |
சத்தி - குமரக்கடவுளின் ஞானசத்தி எனப்படும் வேல். தானமெல்லாம் - பதிகள் பலவற்றிலும்; முத்திப்பதம் - முத்தி காதலிக்கும் குறிப்புடைய; க்ஷேத்திர வெண்பா என்னும் இந்நூலில் வெண்பாத்தோறும் யாக்கை நிலையாமையினைப் பலவாறும் இடித்து எடுத்துக் கூறி, வீடுபேற்றின் சாதனமாகிய சிவவழிபாட்டினை வற்புறுத்தியுள்ள நிலை குறித்தது. |
ஓரொர் வெண்பா - ஒரு பதிக்கு ஒரு வெண்பாவாக; “முடியரசாம்......ஏற்றல்” என்னும் - இது அந்நூலின் 10 - வது வெண்பாவின் பொருள். அதன் பெருமையும், ஓரரசர் சொல்லாதலும், இந்நாயனாரது அடிமைப் பண்பின் மேன்மையும் ஒருங்கே விளங்கவுள்ளது, அவ்வெண்பாவாதலின் அதனை ஈண்டெடுத்து விதந்தோதினார். |
| | “படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலா மாண்ட முடியரசர் செல்வத்து மும்மைத் - தொடியிலங்கு தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட் டோடேந்தி யுண்ப துறும்” (க்ஷேத்திர வெண்பா - 10) | |
என்பது அத்திருப்பாட்டு, அதற்கு என்பது எதுகை நோக்கி அத்திற்கு என வந்தது. |
அரற்காய் ஐயம் ஏற்றல் - அரற்காய் - அரனுக்குத் தொண்டுபட்டு அதற்காக -அதுவே பற்றாக என்க. அரற்காய் என்பது பிறிதினியல்பு நீக்கிய விசேடணம்; இரத்தல் இழிவு என்பது நீதியாதலின் ஐயமேற்றுண்ணல் எவையும் விரும்பத் தக்கனவல்ல; அவை இகழ்ச்சியே; ஆனால் அரனுக்குத் தொண்டுபட்டு ஐயமேற்றல் முடியரசினும் மும்மைச் சிறப்புடையது என்பதாம். |
கடல் - கடல் போன்றவரைக் கடல் என்றார்; பெயரும் பண்பும் வரலாறும் வகைநூல் வகுத்துரைத்தது. |
விரி: 4046. (இ-ள்) வையநிகழ்.....தோன்றி - உலகில் புகழ் சிறந்து அரசியற்றும் பல்லவர்களது மரபிலே முறைமையாக அவதரித்து; வெய்ய.....அடக்கி - கொடிய வறுமையும் பகையும் அவற்றால் வரும் துன்பங்களும் நீங்கும்படி அடக்கி; செய்ய....அரசளிப்பார் - சிவந்த சடையினையுடைய இறைவரது சைவத் திருநெறியின்வழியே நின்று அரசாட்சி செய்வாராகி; ஐயடிகள்.....செங்கோலார் - ஐயடிகள் காடவர்கோன் என்னும் அரசர் அரசநீதி முறையினாலே உலகமெல்லாம் தம்மடியின்கீழ் வாழும்படி செய்யும் செங்கோ லாணையினை யுடையராய்; 1 |