| எவ்வுயிரும் பெருமையுடன் இனிதமர - மக்களே யன்றி எல்லா உயிர் வருக்கங்களும், அரசனது காவல்பெற்றுக் குறைவின்றி இனிது வாழ; கழறிற்றறிவார் நாயனாரது வரலாறு இங்கு நினைவுகூர்தற்பாலது. அமர - விரும்பி வாழ. |
| பிறபுலங்கள் - திறம்பி நின்ற பகைப் புலங்கள்; அடிப்படுத்து - பகைவரால் வரும் துன்பங்களை நீக்கி அவர்களை அடக்கித் தம் வயப்படுத்தி. |
| தரும நெறி - இஃது உலகியற் றருமநீதி முறை, |
சைவமுடன் அருமறையின் துறை - சைவநெறியும் வேதத்துறையும்; “வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க” (1899); இங்குச் சைவத் திறத்தினை முன்கூறியது இந்நாயனார் பற்றி ஒழுகிய சைவ ஒழுக்கத்தினைச் சிறப்பாகக் குறித்தற்கு. சிறப்புப் பற்றி உடன் உருபைச் சைவத்துடன் புணர்த்தி ஓதினார். 2 |
4048. (வி-ரை) வடநூல்...பணிசெய்ய - என்றது இந்நாயனார் வடமொழி தென்றமிழ்மொழி யிரண்டிலும் வல்லவராய் அவ்விரு கலைகளின் றிறத்தினையும் உறுதிப் பொருளின்கட் செல்லும்படி செலுத்துதலை உணர்த்தற்கு. இப்பண்பு இந்நாயனாரருளிய க்ஷேத்திர வெண்பாவினால் அறியப்படும். இந்நாயனார், கழறிற்வார் நாயனார்போல முடிமன்னரா யிருந்தும் கலைகளினும் வல்லவராயினார். இது தமிழரசர்களின் சிறப்பு. கலை - கலைகள் பலவும்; பணி செய்தல் - கலைகளிற் றேர்ச்சி யுறுதல். |
அரசாட்சி இன்னல் என இகழ்ந்து - உலக அரசாட்சி துன்பந் தருவதேயாம் என்று அதனை இகழ்ந்து ஒதுக்கி; தன்கீழ் வாழும் எல்லா வுயிர்களுக்கும் ஐந்து வகைப் பயமும் தீர்த்து அறங்காக்கும் அருமைப்பாடு பற்றியும், தம் தம் உயிர்க்கு வீடுபேற்றுக்கு வழியாதலின்றிப் பெருந் தொடக்குக்கே வழியாகிப் பிறப்புக்கு ஏதுவாகும் நிலைபற்றியும் இன்னல் என்று துணிந்தார். “இருளுடை யுலகங் காக்குமின்னல்” என்பது கம்பன் பாட்டு. |
இழிச்சி - இகழ்ச்சிக் குறிப்புப்படக் கூறியது கவிநயம்; தாம் இகழ்ந்த ஒன்றைத் தம்குமரனுக்கு ஆக்கியது தகுதியாமோ, எனின், உலகத்தின, இக்காவலுக்கு ஒருவன் வேண்டும் என்ற கடமையினைச் செய்யும் அளவேயன்றி, அஃதுயர்வான பொருள் என்பதனாலன்று என்பது குறிப்பு; இழிச்சுதல் - இறங்குதல். |
நன்மைநெறித் திருத்தொண்டு - அரசாட்சி போலன்றி நன்மை வழியிலே சென்று நன்மையே பயக்கும் என்பது.. |
தொண்டு நயந்தளிப்பார் - முன்னர்த் தொண்டுநெறி அரசளிப்பார் அதனை விட்டு திருத்தொண்டொன்றினையே அளிப்பார். |
ஆயினார் - ஆக்கச்சொல் மேம்பாடு குறித்தது. 3 |
| 4049. | தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை யுலகின்கண் அண்டர்பிரா னமர்ந்தருளு மாலயங்க ளானவெலாங் கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடனேற்ற பணிசெய்தே வண்டமிழின் மொழிவெண்பா வோரொன்றா வழுத்துவார்; 4 |
| 4050. | பெருத்தெழுகா தலில்வணங்கிப் பெரும்பற்றத் தண்புலியூர்த் திருச்சிற்றம் பலத்தாடல் புரிந்தருளுஞ் செய்யசடை நிருத்தனார் திருக்கூத்து நேர்ந்திறைஞ்சி நெடுந்தகையார் விருப்பினுடன் செந்தமிழின் வெண்பாமென் மலர்புனைந்தார். 5 |