| 4049. (இ-ள்) தொண்டு உரிமை புரக்கின்றார் - திருத்தொண்டினது உரிமைச் செயல்களை வழுவாமற் காத்து வருகின்ற நாயனார்; சூழ்வேலை...இறைஞ்சி - கடல் சூழ்ந்த இந்நில உலகத்திலே தேவர் பெருமானாராகிய சிவபெருமான் விரும்பி விளங்க எழுந்தருளிய ஆலயங்க ளெல்லாவற்றையும் சென்று கண்டு வணங்கி; திருத்தொண்டின்........செய்தே - திருத்தொண்டுக் கேற்ற கடமையாகிய பணிவிடைகள் எல்லாவற்றையும் செய்தே; வண்டமிழின்......வழுத்துவார் - ஒவ்வோர் பதியிலும் வளப்பமுடைய தமிழின் வெண்பா ஒவ்வொன்றாகச் சேர்த்தித் துதிப்பாராகி; 4 |
| 4050. (இ-ள்) பெருத்தெழு காதலில் வணங்கி - பெருகி எழுகின்ற காதலால் வணங்கி; பெரும்பற்ற.....நேர்ந்திறைஞ்சி - தண்ணிய பெரும் பற்றப் புலியூரில் திருச்சிற்றம்பலத்தின்கண் திருக்கூத்தியற்றும் சிவந்த சடையினையுடைய கூத்தரது திருக்கூத்தினை நேர்பட்டுக் கும்பிட்டு; நெடுந்தகையார்.....புனைந்தார் - பெருந்தகைமை யுடையார் விருப்பத்துடனே செந்தமிழினிய, வெண்பாவாகிய மெல்லிய மலரைப் புனைந்தருளினர். 5 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
4049. (வி-ரை) உரிமை - உரிமைச் செயல்கள் புரத்தல் - வழுவாமற் காத்தல்; முட்டாது செய்தல். |
அண்டர்பிரான்.....கண்டிறைஞ்சி - தேவ தேவராகிய சிவபெருமானுடைய பதிகள் தோறும் யாத்திரையாகச் சென்று வணங்கி. எல்லா(மு)ம் - அனைத்தையும் முற்ற என்பது குறிப்பு; முற்றும்மை தொக்கது. “கோயில்களெல்லா மெய்தி” (4051) என மேலும் கூறுதல் காண்க. |
அண்டர்பிரான்.........ஆன எலாம் - இவ்வடி முற்றுமோனை. உலகின்கண் - ஆலயங்கள் - சிவனை வணங்கி நலம் பெறும் வாய்ப்புக்கள் இந்நிலவுலகில்தான் உள்ளன என்பது குறிப்பு. “புவனியிற்போய்” (திருவா). |
திருத்தொண்டின் கடன் ஏற்றபணி - இவை ஏனைய சரியைத் தொழில்களும் அடியார் வழிபாடும் ஆம். ஏகாரம் தேற்றம். கடன் - முறைமை. |
வழுத்துவார் - வழுத்தும் நியமம் பூண்டாராகி; ஓரொன்றா - ஒவ் வோர் பதிக்கு ஓர் ஓர் வெண்பாவாக; வழுத்துவார் - துதித்தலை மேற்கொண்டனராகி. |
இந்நியமத்தினை முதலிற் றொடங்கி ஆற்றின் இடம் தில்லைச் சிற்றம்பலமாம் என்பது மேல்வரும் பாட்டாலுணர்த்தப்படும். 4 |
4050. (வி-ரை) பெருத்தெழு காதல் - மேன்மேலும் வளர்ந்தோங்கும் பெருவிருப்பம். ஆராமையால் மிகுகின்ற; “ஆராமை” (3570); காதலால் - அன்புடன். |
பெரும்....சிற்றம்பலத்து - “தில்லைச்சிற்றம்பலமே” என்ற திருவெண்பாவை விரித்தது. |
நேர்ந்து - சேர்ந்து கண்டு முற்பட்டு வணங்கி; “சேர்” என்பது வெண்பா |
மென்மலர் - நுண்ணிய பொருளுடைமையால் மென்மலல்ர் என்றார். மலர் போன்றதை மலர் என்றார். மலர் - மலர்களாலாகிய மாலைக்கு ஆகுபெயர்; அது போன்ற பாமாலைக்கு உவமையாகுபெயர்; நால்வகைப் பூக்களால் இயன்ற மாலை போல நால்வகைச் சொற்களால் தொகுப்பது பாமாலை; க்ஷேத்திரக் கோவைத் திருப்பதிகம் முதலியவை காண்க. |
இன் வெண்பா - இன் - இனிய சொல்லும் பொருளும் உடைய; நேரிசை வெண்பா என்ற யாப்பின் பாகுபாடும் குறித்தது. “இன்மொழி வெண்பா” (4049); ழுஇன்றமிழ் வெண்பா” (4051). 5 |