| சரிதச் சுருக்கம்: ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் :- இப்பெயருடைய நாயனார் சோழ மரபில் பல்லவர் குலத்தில் அவதரித்துக் காஞ்சிபுரத்திலே அரசாண்டவர்; உலகில் வறுமையும் பகையும் துன்பமு மின்றி, எல்லா உயிர்களும் ஒருங்கு நன்கு வாழவேண்டு மென்னும் கொள்கை யுடையவராய் நீதியினால் பகைகளை அடக்கிக் சைவத் திருநெறியில் அரசளித்தார். இவர் வடமொழி தென்றமிழ் என்ற. இரண்டிலும் கலைஞானங்களிலும் வல்லவர். |
அரசாட்சி துன்பந் தருவதாகும் என்று துணிந்து, அதனை இகழ்ந்து, தமது மகனை முடி சூட்டினர். தாம் தில்லைத் திருச்சிற்றம்பலம் முதலிய சிவதலங்களிற் சென்றிறைஞ்சித் தலங்கள் தோறும் ஓரோர் வெண்பாப்பாடி வழிபட்டு வந்தனர்; தமக்கு ஏற்றபணிகளையும் செய்தனர்; அடியார்கள் இன்பமுற அடியவர்களின் வழிபாடும் செய்தனர். இவ்வாறு பணிசெய்து சிவலோகத்தில் வழியன்பர் மரூங்கணைந்தார். |
| குறிப்பு : இவர் பாடியருளிய வெண்பாக்கள் யாவும் யாக்கை நிலையாமையை வற்புறுத்தி இறைவரைத் தலந்தோறும் சென்று வழிபட்டு முத்திக்கு வழிதேடும் கருத்தினை உபதேசிக்கும் வகையில் அமைந்துள்ளன; இவை க்ஷேத்திரத் திருவெண்பா என்ற பெயரால் தொகுத்து வகுக்கப்பட்டுப் பதினோராந் திருமுறையினுள் நம்பியாண்டார் நம்பிகளாற் சேர்க்கப்பட்டுள்ளன. |
கற்பனை ;-1. கலியும், (வறுமை - பிணி முதலியன) பகையும் மிகை யொழியும் வகையடக்கி அரசு ஆளுதலும், எல்லா உயிர்களும் இன்பமுற வாழ்தலும் நீதியரசர் மேற்கொள்ளும் குறிக்கோள்களாம். |
2. பிறவாகிய பகைப்புலங்களை அடிப்படுத்தும் செயல் நீதிமுறையில் மேற்கொள்ளத்தக்கது. |
| 3. சைவத் திருநெறியால் அரசளித்தல் சிறப்புடையது. |
4. சிறந்த அரசர்கள் உலகில் தரும நெறி தழைக்கவும், அதனோடு சைவமும் வைதிகத் துறையும் விளங்கவும் அரசளிப்பர். |
5. அரசாட்சி இன்னல் தருவது என்று இகழ்ந்து அதனைத் துறந்து சிவன் பணியிற் செல்லும் அரசர்களையுடைய மேன்மை தமிழ்நாட்டுக்கே உரியது. |
6. வடமொழி தென்மொழிகளிலும் கலைகளிலும் வல்லராய்த் தெய்வப் பெரும் புலமை பெற்றிருத்தல் அரசர்க்குப் பெருஞ் சிறப்பு. அம்மேன்மையும் அரசர்களுள் தமிழரசர்க்கே யுரியது. கழறிற்றறிவார் நாயனார் வரலாறும், இளங்கோவடிகள் வரலாறும், புறநானூற்றில் பாடினோராகிய அரசர் வரலாறுகளும் காண்க. |
7. சிவதல யாத்திரை செய்தலும், மற்றும் பணி செய்தலும் , அடியார் மகிழ வழிபடுதலும் முத்தி சாதனங்களாம். |
தலவிசேடம்;- காஞ்சிபுரம் - முன் உரைக்கப்பட்டது; II - பக் 1547; திருமேற்றளி III - பக்கம் 550 பார்க்க. திருக்கச்சி மேற்றளி இந்நாயனாரது வழிபடு தலம் என்பர். |
| ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் முற்றும். |