பக்கம் எண் :

பெரியபுராணம்331

திருச்சிற்றம்பலம்

     பொன்பெற வல்லவன் - செங்கல்லே செழும் பொன்னாகப் பெறும்
வன்மையுடையவர் என்றது நம்பிகளது சரிதவரலாறு; மாணிக்கவண்ணர் -
திருநாட்டியத்தான் குடியின் இறைவர் பெயர். எண்ணும்மைகள் தொக்கன.
சொல்லவனும் - வல்லவனும் - நல்லவனும் - ஆகிய நம்பிகளின் பதி என்க.
 
     விரி: 4054. (இ-ள்) உலகுய்ய...முதுகுன்றர் தரும் - உலகமுய்யும் பொருட்டு
விடமுண்டதனால் இருள் கொண்ட கண்டத்தினையுடைய திருமுதுகுன்ற வாணர் தந்த;
கனகம்.......குளத்தில் எடுத்தார் - பொன்னைத் திருமணி முத்தாற்றில் இட்டுப், பின்
வளத்தினால் மலிந்து ஏழுலகங்களும் வணங்கும் பெரிய திருவாரூரிற் கமலாலயத்
திருக்குளத்தில் எடுத்தவராகிய நம்பிகள்; வினையின்.......எடுத்தார் - வினையாகிய
பெருங்குழி வாயினின்றும் என்னைமேல் எடுத்தார்; (ஆதலின்), உளத்தில் ஒரு
துளக்கமிலோம் - உள்ளத்தில் ஒரு சிறிதும் நடுக்கமில்லோம்.
 
     (வி-ரை) எனை எடுத்தார் - (ஆதலின்) துளக்கமிலோம் என்று கூட்டுக.
 
     துளக்கம் - நடுக்கம்; “வஞ்சநமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும்,
அஞ்சி யுனையடைந்தே னையா பராபரமே ” (தாயுமானார்) என்றபடி பிறவியால் வரும்
கேட்டுக்கு அஞ்சியமையால் வருவது நடுக்கம்; வினைக்குழியினின்
றெடுக்கப்பட்டமையால் வினை காரணமாக வரும் பிறவி யில்லையாகும். ஆதலின்
அதன் பொருட்டு வரும் துளக்கமு மில்லையாயிற்று. நம்பியாரூரர் திருவடிச்
சார்ந்தார்க்குப் பிறவியில்லை என்பது கருத்து. சார்ந்தாரைக் காக்கும் தன்மை பற்றி
நம்பிகளைப் போற்றியவாறு.,
 
     வினையின் குழி - வினை செய்தாரை ஆழமாகிய பிறவியின் அழுத்துதலால்
குழி எனப்பட்டது.
 
     உலகுய்ய இருண்ட - இருண்ட - விடமுண்டமையால் இருள் உடையதாயிற்று;
விடமுண்டது தேவர்களுய்தற் பொருட்டு; தேவர்கள் உய்ய உலகம் காவல் பெறுதலின்
உய்குய்ய என்றார்; தேவர்களைக் காத்த அடையாளங் கண்டு, பற்றி, வந்தடைந்து உலக
முய்யும்படி என்றலுமாம்.
 
     முதுகுன்றர் தரும்.....குளத்தில் எடுத்தார் - திருமுதுகுன்றத்தில் இறைவர் தந்த
12000 பொன்னையும் அங்குத் திருமணி முத்தாற்றில் இட்டு, இங்குத் திருவாரூர்க்
குளத்தில் வரப்பெற்றனர் நம்பிகள் என்பது சரிதம். (ஆற்றிலிடுதல் - முன், 3261 -
3264 திருப்பாட்டுக்களிலும், குளத்தில் எடுத்தல், 3281 - 3292 - திருப்பாட்டுக்களிலும்,
உரைக்கப்பட்டன.) எடுத்தார் - நம்பிகள்; ஆறு - திருமணிமுத்தாறு; குளம் -
கமலாலயம்.
 
     ஏழுலகு மருவுபெறும் என்பது பாடமாயின் பிருதுவித் தலமாதலின் ஏழுலகிற்கு
மூலமாதலை விளக்கினார் எனப் பொருள் கொள்க என்றனர் முன் உரைகாரர். எல்லா
உலகத்துயிர்களும் முத்தி பெற வந்து வணங்கும் என்றலுமாம்.                9
 

சுந்தரமூர்த்தி நாயனார் துதி முற்றும்.
 

பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் முற்றிற்று.