பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்332

பிற்சேர்க்கை : 1
 


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

க்ஷேத்திரத் திருவெண்பா
_ _ _ _ _
 

முன்னுரை
 

     இது பதினோராந் திருமுறையிற் கோவை செய்யப்பட்ட தெய்வப் பிரபந்தங்களுள்
ஒன்று. இதன் ஆசிரியர்: ஐயடிகள் காடவர்கோன் நாயனார்; இவர் திருத்தொண்டத்
தொகையுள் போற்றப்பட்ட அறுபத்து மூன்று உண்மை நாயன்மார்களுள் ஒருவர். இவர்
காடவர் என்னும் பல்லவ அரச மரபினர். ஏறக்குறைய 1500 ஆண்டுகளின்முன்
வாழ்ந்தவர். இம்மரபினர் காஞ்சிபுரத்தைத் தம் தலைநகராகக் கொண்டு அரசு
புரிந்தனர். தமிழிலும் வடமொழியிலும் வல்லவர்; வேற்றுப் புலங்களை வென்று
சைவமும் வைதிகமும் விளங்க அரசளித்தார்; அரசாட்சி துன்பந் தருவது என்று
துணிந்து, அதனைத் தமது மகன்மேல் இழிச்சித், திருத்தொண்டு செய்யத்
தொடங்கினார். சிவபெருமான் அமரும் ஆலயங்களெல்லாம் சென்று வணங்கி ஏற்ற
திருப்பணி செய்து, பதிதோறும் ஒவ்வோர் வெண்பாப் பாடித் துதிப்பாராகித்,
திருத்தில்லையினை அடைந்து வணங்கித் திருவெண்பாப் பாடியருளினார். அங்குச் சில
நாள்கள் தங்கிப், பின்னர், இறைவரது பிற பதிகளிலும் சென்று வணங்கி அவ்வாறே
ஓரோர் தலத்துக்கு ஓரோர் வெண்பாவாகப் பாடி அருளிச்செய்து, பலநாள்கள் வாழ்ந்து
சிவபெருமானது திருவடி நிழற்கீழே சிவலோகத்தில் அன்பர் கூட்டத்துடன்
அணைந்தனர்.
 

நூல்
 

     இஃது ஒவ்வோர் தலத்துக்கு ஒவ்வொரு வெண்பாவாக அங்கங்கும் சென்று
வழிபடும்போது அருளப்பட்டது. ஆதலில் ஒரு காலத்து ஓர் இடத்துச் செய்யப்பட்ட
நூலன்று, இப்போது கிடைத்துள்ளவை 24 வெண்பாக்களேயாகும். இவை யாவும்
நேரிசை வெண்பாக்களேயாம். ஆசிரியர் இதனை ஒரு நூலாகவேனும்
மாலையாகவேனும் எண்ணிப் பாடினாரல்லர். அவர் சென்று வணங்கிய பல்வேறு
பதிகளிற் பல்வேறு காலத்துப் பாடிய ஒவ்வோர் தனி வெண்பாக்களை
உடனிருந்தோரும் பிறரும் சேமித்தவாறு கிடைத்தவையே பிற்காலத்தவராற் கோவை
செய்யப்பட்டு இந்நூலாகத் திகழ்கின்றது என்பது கருதப்படும். பதியொன்றுக்கு ஓரோர்
வெண்பாவே ஆசிரியர் ஓதியருளியது ஒரு சிறப்பு. இஃது ஊர் வெண்பா என்னும்
இனத்தைச் சேர்ந்ததாகும்.
 

நூல் நுதலிய பொருள்
 

     பாட்டுக்கள் முழுதும், யாக்கை, செல்வ முதலியவற்றின் நிலையாமையே பற்றிய
காஞ்சித்திணையைச் சார்ந்தன. “பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும், நில்லா வுலகம்
புல்லிய நெறித்தே” (தொல் - புறத்.78). சில நாளில் உடல் மூத்துக் கீழே விழும்; சாவு
வரும்; அரசு செல்வம் முதலியவை நிலையா; ஆதலின் உலகீர்! உடனே
சிவபெருமானைத் தொழுது உய்மின்; அவரைத் தொழுதடைவதற்கு அவர்
ஆன்மாக்களின்மீது வைத்த கருணையினாலே வெளிப்பட வீற்றிருந்தருளும் பதிகளை
அடைந்து வணங்குவதே வழியாம் என்பது இந்நாயனார் இதனால் உலகருக்குச் செய்யும்
நல்லுபதேசம்.