பக்கம் எண் :

பெரியபுராணம்333

ஆராய்ச்சிக் குறிப்புக்கள்
 

     இவர் முடியரசரா யிருந்தும் நிலையாமை கண்டு அதனைத் துறந்து தொண்டு
செய்து சிவன் பதிகள் தோறும் சென்று வழிபட்டார் என்ற சரிதத்துக்கு இவர் நூல்
அகச்சான்றாகும். இதுபற்றிச் சிறப்பாக 10, 22, 23 பாட்டுக்கள் பார்க்கத் தக்கன;
அவற்றுள் 10-வது பாட்டினையே எடுத்துக்காட்டித் திருத்தொண்டர் திருவந்தாதியினுள்
(56) நம்பியாண்டார் நம்பிகள் இவரது சரிதத்தினைக் கூறிப் போற்றுதல் காண்க.
“சூழ்வேலை யுலகின்கண், அண்டர்பிரா னமர்ந்தருளு மாலயங்க ளானவெல்லாங்,
கண்டிறைஞ்சி....வழுத்துவார்” (4) என்றும், “பன்னெடுநா ளாற்றியபின்” என்றும் (7)
ஆசிரியர் பெருமான் சரிதங் கூறி யருளுமாற்றால் இவர், பற்பல நாடுகளில் பற்பல
காலம் தல யாத்திரை செய்து வாழ்ந்திருந்தனர் என்பது துணியப்படும்; ஆயின்
இப்போது கிடைத்திருக்கும் இந்நூல் வெண்பாக்களி னின்றும் காணும்போது
இந்நாயனார் சோழ நாட்டினும், தொண்டை நாட்டினும் பெரும்பான்மை சென்று
வழிபட்டமை கருதப்படும். சோழர்களே தொண்டை நாட்டினையும் பல காலங்கள்
அரசாண்டமை நாட்டுச் சரிதம் பேசும். உஞ்சேனை மாகாளம் (13) என்ற பதியினை
இவர் பாடியிருத்தலின் தமிழ்நாட் டெல்லையினையும் தாண்டிச் சென்றமையும்
கருதப்படும். உஞ்சேனை மாகாளம் என்பது விக்கிரமாதித்தனது தலைநகரம். அங்கு
விளக்கமாயுள்ள காளியினால் பூசிக்கப்பட்ட பதியாதலின் இது மாகாளம் எனப்படும்.
தலம் பற்றாத பொதுப்பாடல்களும் உண்டு. (10 - 23)
 
     இனி, இப்பாட்டுக்கள் யாவருக்கும் விளங்கும் எளிய இனிய நடையில்
அமைந்தனவாய், மெல்லோசையுடைய மேம்பட்ட போக்கினை யுடையனவாய்ச்,
சொற்சுவை பொருட்சுவை மிகவுடையனவாய், நகைச்சுவை பெருமிதச்சுவை முதலிய
சுவைகளையும் உடையனவாய்ப், படித்துப் பயில்வோர்க்கு அவற்றாற் கருதப்பட்ட
உறுதிப் பயனை உள்ளூற உறுத்தி ஊட்டும் திட்பமுடையனவாய் விளங்குகின்றன.
சேரமானாரையும் இதனாசிரியரையும் போன்ற இத்தகைய தெய்வத் தமிழ்ப்பெரும்
புலவர்களாகிய முடி அரசர்களையும் கொண்டு விளங்கிய பெருமை தமிழகம் ஒன்றிற்கே
உரியது. உண்மை நாயன்மார்களுள் ஒருவராகிய ஆசிரியரால் அருளப்பட்டமையால்
இதனை 11-ம் திருமுறையில் கோவை செய்தருளினர், இராசராச தேவர் சபையில்,
நம்பியாண்டார் நம்பிகள். இவரை “இயற்றமிழ் வல்லோர்” (புரா - வர - 46) என்று
வகுத்தருளினர் உமாபதி சிவாசாரியார்.
 
     இதனுள் “தென்னிடைவாய்” (7) என்ற பதி இதுவரை இன்னதென்று
விளங்காதிருந்தது. அணிமையில் 25 ஆண்டுகளின்முன் அப்பதியில் திருமதிற் சுவரில்
பிள்ளையார் தேவாரப் பதிகம் முழுதும் வெட்டப்பட்டிருந்தமை கண்டெடுக்கப்பட்டது.
அதனால், அஃது ஆளுடைய பிள்ளையார் பாடல்பெற்ற பதியென்பதும், அதன் பெயர்
விடைவாய் என்பதும், சோழநாட்டுத் தலமென்பதும், முன்பதிப்புக்களிற் கண்ட பாடல்
பெற்ற தலக்கணக்கினுள் அகப்படாத தொன்றென்பதும் தெரியவந்தன. இப்போதுள்ள
பதிப்புக்களில் (சமாசம்) இப்பதிகமும் சேர்த்து அச்சிடப்பட்டுள்ளது.