பக்கம் எண் :

பெரியபுராணம்335

சிக்கப்பட்டவரைத் - தம் வயமாக்கும் கருத்து; சிற்றம்பலமே - ஏகாரம் பிரிநிலை;
நல்லச் சிற்றம்பலமே - ஏகாரம் தேற்றமும் பிரிநிலையுமாம். (கோடுகின்றார் -
குறுகிற்று - ஆதலின்) முன் - சேர் என்று காரண காரியமாக உரைத்துக்கொள்க.
அச்சில் - என்பதற்கு - உடம்பில் என்றும், தம்பலம் நண்ணுதல் வாயிலுள்ள தம்பலம்
மார்பில் வடிதல் என்றும் கூறுவாரும் உளர். நெஞ்சே - சேர் - நினைத்தலேனும்
செய் என்ற குறிப்பு.
 
     இத்தலம் சோழ நாட்டில் காவிரி வடகரை 1-வது பதி; கோயில் என்று சிறப்பாக
வழங்கப் பெறுவது. இங்கு நாயனார் இதனைத் தில்லைச்சிற்றம்பலம் என்று
வழங்குகிறார்.                                              1
 
2.    திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்.
 
 
“கடுவடுத்த நீர்கொடுவா; காடிதா”வென்று
நடுநடுத்து நாவடங்கா முன்னம் - பொடியடுத்த
பாழ்க்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.                               2
 
     (இ-ள்) கடு அடுத்த....என்று - குடிநீர் கொண்டுவரா, காடியினைக்கொடு என்று
கூறி; நடுநடுத்து....முன்னம் - நடுநடுங்கி நாச்சொல் அடங்காத முன்னே; பொடி....முன் -
சாம்பல் நிறைந்த சுடுகாட்டிலே சேராத முன்னமே; பன்....கிட - பல மாடங்களையுடைய
தென் குடந்தையில் உள்ள திருக்கீழ்க் கோட்டத்தினைத் துதித்துக் கிடப்பாயாக.
 
     (வி-ரை) கடுவடுத்த நீர் - கடு - கடுக்காய்; இங்கு அதனையுள்ள மருந்துப்
பண்டங்களுக்குக் குறியீடாகிய பொருளில் வந்தது. அடுத்த - இட்டுச் சுருங்கக்
காய்ச்சிய; நீர் - குடிநீர்; காடி - புளிங்கஞ்சி நீர். இவற்றைக்கேட்டல்
நாவறட்சியாலாகுவது; நடுநடுத்து நாவடங்குதல் - பேச்சுக்குழறி யடங்குதல்;
உயிர்போந் தறுவாயில் நிகழும் குறிகளுள் ஒன்று; “பவனமாய்ச் சோடையாய் நாவெழா”
(தேவா - பிள் - திருவாரூர்); பொடி - (சுடலைச்) சாம்பரைக் குறித்தது;
பாழ்க்கோட்டம் - சுடுகாடு; ஈமம்; செப்பிக் கிட - முன்கூறிய குறிகள்
தொடரும்போது செப்பிக்கிடத்தலன்றி வேறொன்றும் செயல் வலியின்மையாகுமாதலின்
கிட என்றார். முன்பாட்டில் சேர் என்றார் அதனுட் குறித்தது மூப்புக் குறுகும்
காலமேயாதலின் அது முடுகுமுன்பு சென்று சேரும் வலியுண்மை கருதி. குடந்தைக்
கீழ்க்கோட்டம்
- இது திருநாகேசுவரசுவாமி கோயில் என வழங்குவது. பாடல்
பெற்றதலம். “கூத்தனார்” என்று இதன் இறைவரை அரசுகள் பாடியருளினர். 2
 
     இது சோழநாட்டில் காவிரித் தென்கரை 27-வது பதி.
 
3.    திரு ஐயாறு
 
 
குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி
நொந்திருமி யேங்கி நுரைத்தேறி - வந்துந்தி
யையாறு வாயாறு பாயாமு னெஞ்சமே
யையாறு வாயா லழை.                                           3
 
     (இ-ள்) குந்தி....ஊன்றி - (வலியின்மையால்) குந்திக் குந்தி நடந்து உடல்
வளைந்து ஒரு கையில் கோலினை ஊன்றி; நொந்து....பாயாமுன் - வருந்தி இருமி