ஏங்கி நுரைகொண்டு மிக்கு வந்து வலிந்து தள்ளி - ஐ (கோழை) ஆறுபோலத் தொடர்ந்து வாயின் வழியே பாய்ந்து ஒழுகாத முன்னம்; நெஞ்சமே....அழை - நெஞ்சே! இறைவரது திருவையாற்றினை வாய் திறந்து கூறி அழைப்பாயாக. |
(வி-ரை) குந்தி நடந்து - தொடர்ந்து நடக்க வலியின்மையால் அடிக்கடி குந்திக்குந்தி நடந்து; குந்துதல் - உட்காரு நிலை; குனிந்து - உடல் வளைந்து; கூன்கொண்டு; கோல் - ஊன்று கோல்; கோலினாற்றாங்கும் துணையின்றி உடல் தாங்கி நடக்க இயலாமை; நொந்து இருமி - நெஞ்சு வருந்தி இருமல் கொண்டு; ஏங்கி - வருந்தி முயன்று; உந்தி - உட்காற்றினால் வலிந்து தள்ளப்பட்டு; உந்தி - உந்தப்பட்டு எனச் செயப்பாட்டு வினையெச்சம்; ஐ - கோழை - (கபம்); “ஐமிகுத்த வாயராய்”, “ஐமேலுந்தி” ஐ உந்தி வந்து ஆறு (போல) வாயின் ஆறு (வழி) பாயாமுன் என்க. ஐயாறு - திருவையாற்றினை; இரண்டனுருபு விரிக்க. வாயால் அழை - அழைத்தல் வாயின் றொழிலேயாதலின் வாயால் என்றது மிகையாம் போலுமெனின்?” அற்றன்று; வாயின்றொழில் ஐ வந்து கெடா முன்னம் அதனைத் தொழிற்படுத்துக என்றதாம்; ஐயாற்றை அழை என்றது திருவையாற் றப்பனையேயன்றி, அப்பதியினை அழைத்தலே பயன் தரு மென்றதாம்; “ஐயாறே! யையாறே! என்பீ ராகி லல்லறீர்ந் தமருலக மாள லாமே” (தேவா). |
இது சோழநாட்டில் காவிரி வடகரை 51-வது பதி. 3 |
4. திருஆரூர் |
| | காளை வடிவொழிந்து கையறவோ டையுறவாய் நாளு மணுகி நலியாமுன் - பாளை யவிழ்கமுகம் பூஞ்சோலை யாரூரர்க் காளாய்க் கவிழ்கமுகங் கூம்புகவென் கை. 4 | |
(இ-ள்) காளை வடிவு ஒழிந்து - காளைபோன்ற குமாரப்பருவத்தின் வடிவம் நீங்கி; கையறவோடு....முன் - துன்பத்தினோடு ஐ பொருந்தி நாளும் கூடி வருந்தாத முன்னே; பாளை....ஆளாய் - பாளைகள் அவிழ்கின்ற கமுகம்பூஞ்சோலைகள் நெருங்கிய திருவாரூரில் எழுந்தருளிய பெருமானுக்கு ஆளாகி; கவிழ்க....கை - என் முகம் கவிழ்ந்து வணங்குக; என் கை கூப்பித் தொழுக. |
(வி-ரை) காளை வடிவு -காளைபோன்ற வடிவு; காளை என்பது மிடுக்குடைய குமாரப்பருவத்தைக்குறித்து நின்றது; கையறவு - துன்பம்; செயலின்மை; ஐ உறவு - கபம் பொருந்துதல்; ஐயுறவு - உயிர் நிற்குமோ என்னும் ஐயப்பாடு என்ற குறிப்புமாம். முகம் கவிழ்க! கைகூம்புக! என்க. தன் வினையாற் கூறியது இச்செயல்கள் இயல்பாகத் தாமே நிகழ்க என்றது. முகம் கவிழ்ந்து வணங்குக. அவிழ்க முகம் - கவிழ்க முகம் - திரிபணி. |
இது சோழ நாட்டில் காவிரித் தென்கரை 87-வது பதி. தென்றிருவாரூர் எனப்படுவது. 4 |
5. திருத்துருத்தி |
| | வஞ்சியன நுண்ணிடையார் வாட்டடங்க ணீர்சோரக் குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து - கஞ்சி | |