பக்கம் எண் :

பெரியபுராணம்337

 
யருத்தொருத்தி கொண்டுவா வென்னாமு னெஞ்சே
திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.                    5

 

     (இ-ள்) வஞ்சியன....சோர - வஞ்சிபோன்ற நுண்ணிய இடையினை உடைய
பெண்கள் வாள்போன்ற நீண்ட கண்களினின்றும் நீர்வழிய; குஞ்சி....இருந்து -
தலையினைத் துடையின் மேல்படிய வைத்துத் தாங்கிக்கொண்டு; கஞ்சி....முன் -
கஞ்சியினை அருத்த ஒருத்தியைக் கொண்டுவா என்று சொல்லாத முன்னே;
நெஞ்சே....சேர் - நெஞ்சமே! திருத்துருத்தியில் எழுந்தருளியுள்ள இறைவரது
திருவடியையே சேர்வாயாக.
 
     (வி-ரை) வஞ்சி - கொடி; வஞ்சிக்கொடி என்றலுமாம்; கண் நீர் சோர -
நோயின் நிலையினை எண்ணி வருந்திக் கண்ணீர் வார; குஞ்சி - மயிர்; தலையைக்
குறித்தது; கஞ்சி அருத்த - கஞ்சியினை உண்பிக்க. திருத்துருத்தி - சோழநாட்டில்
தேவாரப் பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று; காவிரித் தென்கரை 37-வது பதி. அருத்த
ஒருத்தி என்பது அருத்தொருத்தி என நின்றது. அருத்து ஒருத்தி என்று கொண்டு
பணியாளரைக் காவல் செய்யும் தாதி என்றலுமாம்.                        5
 
6.     திருக்கோடிகா
 
காலைக் கரையிழையாற் கட்டித்தங் கையார்த்து
மாலை தலைக்கணிந்து மையெழுதி - மேலோர்
பருக்கோடி மூடிப் பலரழா முன்னந்
திருக்கோடி காவடைநீ சென்று.                   6

 

     (இ-ள்) காலை....கட்டி - காலினைத் துணியின் கரையைக் கிழித்த இழையினாலே
கட்டி; தம்கை ஆர்த்து - தமது கையினையும் அவ்வாறே கட்டி; மாலை.....முன்னம் -
தலைக்கு மாலையணிந்து (கண்களுக்கு) மைஎழுதி (உடலின்) மேல் ஒரு பரிய
கோடித்துணியினால் மூடிப் பலரும் அழாத முன்னம்; திருக்கோடிகா....சென்று - நீ
சென்று திருக்கோடிகாவினை அடைக.
 
     (வி-ரை) காலை....ஆர்த்து - இறந்தவுடன் அவனது காற்பெருவிரல்களையும்
கைப்பெருவிரல்களையும் துணியின் கரையினைக் கிழித்து அதனாற்கட்டுதல் வழக்கு;
உயிர் பிரிந்தபின் சில நாழிகையளவினுள் உடல் விரைத்துக் கைகால்கள் ஒழுங்காக
ஆசந்தியிலும் சிதையிலும் அமைக்க வாராஆதலின் அவற்றை உடனே கரையிழையாற்
கட்டிவைப்பர்;கரையிழை துணியின் வலுவுடைய பகுதி; மை எழுதி - “மையினாற்
கண்ணெழுதி” (தேவா). மாலை தலைக்கணிந்து - “மாலை சூட்டி” (தேவா). இவையும்,
பருக்கோடி மூடுதல் முதலியனவும் பிண அணிவகைகள். பருக்கோடி - பரிய கோடி
வேட்டி; கோடி - புதுத்துணி; திருக்கோடிகா - காவிரிக்கு வடகரையில் பாடல்பெற்ற
பதிகளுள் ஒன்று. (17-வது பதி.)                                       6
 
7.      திருவிடைவாய்
 
 
மாண்டுவா யங்காவா முன்ன மடநெஞ்சே
வேண்டுவா யாகி விரைந்தொல்லைப் - பாண்டவாய்த்
தென்னிடைவாய் மேய சிவனார் திருநாமம்
நின்னிடைவாய் வைத்து நினை.                  7