பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்338

     (இ-ள்) மாண்டு....முன்னம் - உயிர் பிரிந்து வாய்திறந்து போகாத முன்பு;
மடநெஞ்சே - மடமையுடைய நெஞ்சமே; பாண்டவாய்....திருநாமம் - விரிந்த
வாயினையுடைய, தெற்கில் உள்ள, திரு இடைவாயின்கண் எழுந்தருளிய
சிவபெருமானது திருநாமத்தினை; வேண்டுவாயாகி விரைந்து ஒல்லை -
விருப்பமுடையையாகி மிக விரைவாக; நின்னிடைவாய் வைத்து நினை - உனது
மனத்துள்ளே பதிய வைத்து நினைவாயாக.
 
     (வி-ரை) மாண்டு - இறந்து; வாய் அங்காத்தல் - வாய் திறந்திருத்தல் உயிர்
பிரிந்த உடலின் நிலை; பாண்டவாய் - மட்பாண்டம் போன்றகன்ற வாயினையுடைய
காவிரித்துறை என்பது பொருள் போலும். இடைவாய் - பதியின் பெயர்.
கல்வெட்டிலிருந்து இத்தலத்துத் (ஆளுடைய பிள்ளையார்) திருப்பதிகம்
கண்டெடுத்தெழுதப்பட்டது. பதிகத்தினுள் விடைவாய் என்று இதன் பெயர்
காணப்படுகிறது. இடைவாய் - மனத்தினுள்; வைத்து - ஊன்றவைத்து.
 
     இது சோழ நாட்டுப்பதி. திருவிடை வாசல் என்று வழங்குவது, கொரடாச்சேரி
நிலயத்தினின்றும் 3 நாழிகை யளவில் உள்ளது.                         7
 
8.      திருநெடுங்களம்
 
    
தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
யெடுங்களத்தா வென்னாமுன் னேழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாத நினை.                                 8
 
     (இ-ள்) தொட்டு....காணாது - தொட்டுப் பார்த்தும் தடவியும் நாடியின் துடிப்பு
ஒரு சிறிதும் காணாமையால்; பெட்ட....பேரிட்டு - வறிய பிணம் என்று பேர் சூட்டி;
கட்டி....என்னாமுன் - அத்தா ‘கட்டி எடுங்கள்’ என்று சொல்லாத முன்னம்;
ஏழை...நினை - உறுதுணையில்லாத மடநெஞ்சமே திருநெடுங்களத்தில்
எழுந்தருளியுள்ள இறைவரது திருவடிகளை நினை.
 
     (வி-ரை) தொட்டு....காணாது - கண் செவிகெட்டுப் பேச்சும் மூச்சு மின்றி
உணர்விழந்து கிடக்குநிலையில் உயிர் இருக்கிறதா என்று பார்க்க உலகவர் கையாளும்
முறை. கை நாடியின் துடிப்புப் பார்த்தல். துடிப்பின்மை உயிர் பிரிந்த நிலைக் குறிப்பு.
துடிப்பு - இரத்த ஓட்டத்தினால் உளதாவது. இரத்த ஓட்டம் நின்ற போது துடிப்பும்
நிற்கும். அதனுடன் உயிரும் பிரியும் - என்பர்.
 
     பெட்ட....பேரிட்டு - பெட்டப் பிணம் - பெட்ட - வறிய - வெறுவிய - என்ற
பொருள் தருவதோ ரிடைச்சொல். பிணம் என்று பேரிட்டு - அவ்வுடலுக்கு அது
வரை சூட்டியிருந்த பெயரினை மாற்றிப் பிணம் என்றதோர் பொதுப் புதுப்பெயர்
சூட்டி. “பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு” (திருமந்). உயிருள்ளபோது
ஒவ்வோருடம்புக்கும் ஓரோர் வெவ்வேறு பெயர். உயிர் பிரிந்தபின் எல்லா
உடம்புகளுக்கும் பிணம் என்றதொரே பெயர். கட்டி எடுங்கள் அத்தா - கட்டுதல் -
உடலை பாடையில் வைத்துக் கட்டுதல்; “ஆசந்தி மேல் வைத்து” (திருமந்); எடுங்கள்
- எடுத்து நடவுங்கள்; நெடுங்களம் - சோழ நாட்டுத் திருப்பதி; காவிரித் தென்கரை 8-வது பதி; ஆளுடைய பிள்ளையாரது இத்தலத் திருப்பதிகம், பயில்வோர்க்கு வரும்
பலவகை இடையூறுகளையும் நீக்கிக் காக்க வல்லது.                       8