9. குழித்தண்டலை (திருக்கடம்பந்துறை) |
| | அழுகு திரிகுரம்பை யாங்கதுவிட் டாவி யொழுகும் பொழுதறிய வொண்ணா - கழுகு கழித்துண் டலையாமுன் காவிரியின் றென்பாற் குழித்தண் டலையானைக் கூறு. 9 | |
(இ-ள்) அழுகு....விட்டு - அழுகும் இயல்புடைய திரிதற்கிடமாகிய உடம்பை விட்டு; ஆவி....ஒண்ணா - உயிர் நீங்கும்போது அறிய வொண்ணாது; கழுகு....முன் - கழுகு உண்டு கழித்துச் சிதைந்து உடல் அலைபடாத முன்னம்; காவிரியின்....கூறு - காவிரியின் தென் கரையில் உள்ள குழித்தண்டலையின்கண் எழுந்தருளியுள்ள இறைவரைச் சொல்வாயாக. |
(வி-ரை) அழுகு திரிகுரம்பை - அழுகுதல் - கெடுதல் - அழுகு குரம்பை - திரிகுரம்பை என்று தனித்தனி கூட்டுக. திரிதல் வேறுபடுதல் - “வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப”; கணந்தோறும் வளர்தலும் பின் தளர்தலும் விகாரம். குரம்பை - இருப்பிடம் - கூடு - உடல்; அழுகுதிரி - புண் அழுகி ஏறாமல் வைக்கும் மருந்துத் திரியினையுடைய என்ற குறிப்புடன் உரைப்பதுமாம். ஒழுகும்பொழுது - ஓட்டைக் குடத்தினின்றும் நீர் ஒழுகிக் காணமுடியாது வழிந்துவிடுவது போல, ஓட்டை மாடமாகிய உடலினின்றும் காணலாகாதவாறு ஆவி நீங்கி விடும்பொழுது என்க. உண்டு கழித்து அலையாமுன் என்க. குழித்தண்டலை - குழித்தலை என்று வழங்குவது. கடம்பர் கோயில் என விளக்கமாய் அறியப்படுவது. கடம்பந்துறை என்பது பதிகத்துட் கண்டது. சோழ நாட்டுப்பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று. காவிரித் தென்கரை 2-வது பதி. கீழ் கொங்கு நாட்டின் கிழக்கெல்லை என்பர். 9 |
10. பொது |
| | படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலா மாண்ட முடியரசர் செல்வத்து மும்மை - கடியிலங்கு தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட் டோடேந்தி யுண்ப துறும். 10 | |
(இ-ள்) படிமுழுதும்....செல்வத்து - உலகமெல்லாம் தமது வெண்கொற்றக் குடையின் கீழே தங்கும்படி எல்லா உலகங்களையும் ஆட்சி புரிந்த முடிமன்னர்களது செல்வத்தினும்; கடியிலங்கு.....உண்பது - மண மிகுந்த இதழ்களையுடைய கொன்றை மலர் மாலையினை அணிந்த சோதியாகிய சிவபெருமானுக்குத் தொண்டுசெய்து ஓடேந்தி இரந்து உண்பது; மும்மை - மும்மடங்கு; உறும் - பொருந்துவதாகும். |
(வி-ரை) அரசர் செல்வத்திலும் - தொண்டு பட்டு ஓடேந்தி உண்பது உறும் என்று கூட்டுக. |
உறுதல் - மிக்குப் பெரிதாய்ப் பொருந்துதல். |
செல்வத்து - செல்வத்தினும் - செல்வத்தைவிட. உம்மை விரிக்க. |
மும்மை உறும் - மூன்றுமடங்கு பெரிதாய்ப் பொருந்தும். |
| படிமுழுதும் குடைக்கீழ் (அமரப்) பாரெலாம் ஆண்ட என்க. |