கடி - மணம்; தோடு - பூவிதழ்; சோதி - ஞானவொளி யுருவினராகிய சிவபெருமான். “சோதியே சுடரே சூழொளி விளக்கே”. (திருவா) |
தொண்டுபட்டு - தொண்டாகி அமைந்து; படுதல் - உண்டாதல். |
இத்திருப்பாட்டின் கருத்தினைப் போற்றி அதுவேயாறாக இந்நாயனாரது சரிதங் கூறியருளினார் நம்பியாண்டார் நம்பிகள்; “முடியரசா, மத்திற்கு மும்மை நன் றாலரற் காயைய மேற்றலென்னும், பத்திக் கடலையடிகள்” (திருத்தொண்டர் திருவந்தாதி - 56). |
இவ்வெண்பாக்கள் எல்லாம் உலக நிலைபே றின்மையினையே குறித்துப் பாசநீக்கத் தன்மை காட்டுதலின், “அற்றது பற்றெனி லுற்றது வீடு” என்றபடி, இவற்றை “முத்திப் பதமொரொர் வெண்பா” (திருத்தொண்டர் திருவந்தாதி - 56) என்று அருளினர். |
ஓடேந்தி உண்பது வீடுபெறும் வழி என்பதாம். “நிரந்தர மாக நினையு மடியார், இரந்துண்டு தன்னடி யெட்டச்செய் தானே” - (திருமந்); அரச செல்வம் பற்று விளைத்துப் பிறவிக்கேதுவாகும்; சோதிக்குத் தொண்டுபட்டு ஓடேந்தி உண்பது வீட்டுக் கேதுவாகும்; ஆதலின் அதனினும் இது மும்மை உறும் என்றபடி. |
மும்மை - பன்மடங்கு பெரிது என்னும் பொருட்டு. 10 |
11. திருஆனைக்கா |
| | குழீஇயிருந்த சுற்றங் குணங்கள்பா ராட்ட வழீஇயிருந்த வங்கங்க ளெல்லாந் - தழீஇயிருந்து மென்னானைக் காவா விதுதகா தென்னாமுன் றென்னானைக் காவடைநீ சென்று. 11 | |
(இ-ள்) குழீஇ யிருந்த....பாராட்ட - சுற்றிக் கூடியிருந்த சுற்றத்தார்கள் குணங்களை எடுத்துப் பாராட்டிக்கூற; வழீஇயிருந்த....தழீஇயிருத்தும் - நழுவிக் கிடந்த அங்கங்களை எல்லாம் தழுவிச் சேர்த்து இருந்து கொண்டும்; என்....முன் - எனது ஆனைபோன்ற இவருக்கு இவ்வாறு நேர்ந்தது தகாது என்று சொல்லித் துக்கப்படாத முன்னே; தென்....சென்று - அழகிய திருவானைக்காவினை நீ சென்று அடைவாயாக. |
(வி-ரை) குழீஇயிருந்த சுற்றம் - ஒருவரது மரண நிலையின்போது சுற்றத்தார் சுற்றிலும் கூடிப் பரிதவிக்கும் தன்மை பற்றிக் கூறியது. |
வழீஇயிருந்த அங்கங்கள் - மரணத்தின்பின் நிலைகுலைந்து கிடந்த அங்கங்கள். |
ஆனைக்கு - ஆனைபோன்ற ஆண்மையுடைய இவனுக்கு. தோற்றமும் நடையும் உவமை. இது - இக்கதி - சாவு. |
தென் - அழகிய; தென்றிசையில் உள்ள என்றலுமாம். |
திருவானைக்கா - சோழநாட்டில் காவிரி வடகரை 60-வது பதி. 11 |
12. திருமயிலை |
| | குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல் பயிலப் புகாமுன்ன நெஞ்சே - மயிலைத் திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாயின் இருப்பின்னை யங்காந் திளைத்து. 12 | |