பக்கம் எண் :

பெரியபுராணம்341

     (இ-ள்) குயிலொத்து....முன்னம் - குயிலின் நிறம் போன்று இருண்ட கரிய
தலைமயிர் கொக்கின் நிறம் போன்று நரைத்து வெண்மயிராகவும், இருமல் மிக்கு
விரவவும் உள்ள மூப்புப் பருவம் வராத முன்னே; மயிலை....ஆயின் -
திருமயிலாப்பூரின்கண் உள்ள திருப்புன்னையங்கானற் பதியினை நினைக்க
மாட்டாயாயின்; இரு....இளைத்து - பின்னர் வாய்திறந்து இளைப்படைந்து இரு.
 
     (வி-ரை) குயில் - குயிலின் கருநிறமுங், கொக்கு - கொக்கின் வெண்ணிறமுங்
குறித்தன; ஆகுபெயர்.
 
     குஞ்சி - குயிலொத்து - கொக்கொத்து - என்பன முறையே மயிர்
கருமையாயுள்ள இளமைப் பருவத்தையும், அது வெண்மையாய் மாறிய மூப்புப்
பருவத்தையும் குறித்தன. இரண்டற்கும் முறையே உரிய பறவைகளை எடுத்து
உவமித்தது தமிழ் நயம்; குஞ்சி - ஆண் மக்களின் மயிர்; இனம் பற்றிப் பெண்மயிரும்
கொள்ளப்படும்.
 
     இருமல் பயிலப் புகுதல் - இருமல் மிகுதல். மூப்பின் விளைவுகளுள் ஒன்று;
பயிலுதல் - மிகுதல். மூப்பில் இருமல் புகும் என்றதனால் இளமையில் நோயின்மை
குறித்தவாறு. இளமைகுறிக்கக் குஞ்சியின் தன்மை யொன்றே பற்றிக் கூறியதும் காண்க.
 
     திருமயிலைப் புன்னையங் கானல் - என்க. புன்னை - தலமரம்; கடற்கரைப்
பதியாதலின் நெய்தற் கருவாதலும் காண்க; “மட்டிட்ட புன்னையங் கானல்
மடமயிலை” (தேவா). புன்னையங் கானல் - ஈண்டு அத்திருக்கோயிலைக் குறித்தது.
 
     பின்னை அங்காந்து இளைத்து இரு - என்க.
 
     அங்காந்து - வாய் திறந்து; மூப்பின் குறி.
 
     மயிலை - திருமயிலாப்பூர். தொண்டை நாட்டில் 24-வது பதி.       12
 
13.     திரு உஞ்சேனைமாகாளம்
 
    

 

காளையர்க ளீளையர்க ளாகிக் கருமயிரும்
பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து - சூளையர்கள்
ஓகாளம் செய்யாமு னெஞ்சமே யுஞ்சேனை
மாகாளங் கைதொழுது வாழ்த்து.                               13
 
     (இ-ள்) காளையர்கள்....ஆகி - காளைப் பருவமுடையவர்கள் ஈளை
நோயுடையவர்களாகி; கருமயிரும்....பொலிவழிந்து - கரிய மயிரும் பூளைப்பூப் போல
வெண்மயிராக மாறித் தோற்றம் அழிந்து; சூளையர்கள்....முன் - தோழியர் பெருமூச்சு
விட்டு அழாத முன்னே; உஞ்சேனை...வாழ்த்து - உஞ்சேனை மாகாளத்தினை நீ கைதொழுது வாழ்த்துவாயாக.
 
     (வி-ரை) காளையர் - காளைப் பருவத்தர்; காளையர் - காளை போன்ற
பருவமுடையோர்; ஈளை - இருமலும் கபம் மேலிட்டு இளைப்புடன் உள்ள நோயும்;
பூளை - பூளைப்பூ; வெண்ணிறமுடையது; பொலிவு - நல்ல தோற்றம்; சூளையர்கள் -
நோயில் உழையிருந்துதவும் ஊழியர்கள்; பரத்தையர் என்றலுமாம். ஓகாளம் -
விசனத்தால் பெருமூச்சு விட்டழுதல்; அருவருத்தலுமாம். உஞ்சேனை - மாகாளம் -
வடநாட்டில் உள்ளதோர் பதி; காளி பூசித்த பதியாதலின் மாகாளம் எனப்பட்டது; இது
விக்கிரமாதித்தனது தலைநகரென்றும், இந்நகர்க் காளி அவனது வழிபடு கடவுள்
என்றும் கூறுப; இப்பதி தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. “நளிர்சோலை
உஞ்சேனை மாகாளம்” (பிள். க்ஷேத் - கோவை - 9); “உஞ்சேனை மாகாளம்”