பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்342

(அரசு. க்ஷேத் - கோ - 8) மத்திய இந்தியாவில் மாளவம் (மால்வா - Malwa) என்ற
நாட்டின் தலைநகரம். சோதிலிங்கத் தலங்கள் பனிரண்டனுள் ஒன்று.    13
 
14.      திருவளைகுளம்
 
    
இல்லும் பொருளு மிருந்த மனையளவே;
சொல்லு மயலார் துடிப்பளவே; - நல்ல
கிளைகுளத்து நீரளவே; கிற்றியே நெஞ்சே
வளைகுளத்து ளீசனையே வாழ்த்து.                         14
 
     (இ-ள்) இல்லும்....மனை அளவே - (உயிர் பிரிந்த நிலையில்) மனைவியும்
பொருள்களும் குடியிருந்த மனையின் அளவே நின்று விடுவன;
சொல்லும்....துடிப்பனவே - அயலார்களின் சொல்லின் துணையும் உயிர்ப்புத் துடிப்பு
உள்ள அளவேயாவன; நல்ல....நீரளவே - நல்ல சுற்றத்தார்களது தொடர்ச்சியும்
பின்தொடர்ந்து வழிவிட்டு நீர்மூழ்கும் குளத்தின் மட்டுமேயாம்; கிற்றியே....வாழ்த்து -
வல்லையாயின் திருவளைகுளத்துள் எழுந்தருளியிருக்கும் இறைவரையே
வாழ்த்துவாயாக.
 
     (வி-ரை)   இல் - மனைவி; பொருள் - உடற்றொடர்பற்ற ஏனைப் பொருள்கள்;
உயிர் பிரிந்தபின் உடலைப் புறங்காட்டுக்கு எடுத்துச் செல்லும்போது நிகழும் நிலை
பற்றிக் கூறுவது இத்திருப்பாட்டு; மனையின் எல்லை யளவில் நின்று படுதலின், உயிர்ச்
சார்புகளுள் மனைவியும் ஏனைப் பொருட் சார்புகளையே ஒத்தலின் அவற்றினுடன்
சேர்த்துக் கூறினார்; “அத்தமும் வாழ்வு மகத்துமட்டேவிழி யம்பொழுக, மெத்திய
மாதரும் வீடுமட்டே” (பட்டினத்தார்) என்றதும் காண்க; சொல் - துணைச்சொல்;
தேறுதல் மொழி; அயலார் சொல் - என்க.
 
     துடிப்பு - நாடி நடக்கும்நிலை; இறந்த நிலையில் அயலார் படும் துன்பக் குறி
என்றலுமாம்.
     நல்லகிளை - பிணத்தின்பின் ஈமத்தளவும் சென்று நீர்மூழ்கித் திரும்பவும்
வாராத சுற்றத்தாரு முளராதலின் அவருள் அம்மட்டிற் றொடர்வோரை நல்லகிளை
என்றார். நல்ல - பிறிதினியைபு நீக்கிய விசேடணம்; குளத்துநீர் - நீர்க்குளம் என்க;
பின்றொடர்ந்து நீர்மூழ்கித் திரும்பும் வழக்குக் குறித்தது; “நீரினின் மூழ்கி
நினைப்பொழிந் தாரே” (திருமந் - 1 - 3); கிற்றியே - வல்லாயாயின்; வல்லவாறு
என்றலுமாம்; கில் - ஆற்றலுணர்த்துவதோ ரிடைச்சொல்; வளைகுளம் - தேவார
வைப்புத் தலங்களுள் ஒன்று; சோழநாட்டில் உள்ளது “வளைகுளமு மறைக்காடு
மன்னினானை” (தேவா); “வளைகுளமுந் தளிக்குளமும்” (அடைவு திருத்தாண்டகம்).  14
 
15.      திருச்சாய்க்காடு
 
    

 

அஞ்சனஞ்சேர் கண்ணா ரருவருக்கு மப்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் - னெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.                               15
 
     (இ-ள்) அஞ்சனம்.....அப்பதமாய் - மைதீட்டிய கண்களையுடைய பெண்கள்
அருவருக்கும் அந்தநிலை கூடி; குஞ்சி வெளுத்து - மயிர் நரைத்து; உடலம்