பக்கம் எண் :

பெரியபுராணம்345

     தான் - இரண்டும் உறுதிப்பொருள் குறித்த இடைச் சொற்களாய் நின்றன;
கள்ளிட - திருடுதல் போல அறியாதவாறு கொண்டுபோக; கள்ளம் செய்ய; கலத்தல் -
தொழில் செய்யக் கூடுதல்; ஆப்பாடி - சோழ நாட்டு காவிரி வடகரை 40-வது பதி;
மண்ணியாற்றின் தென்கரையில் உள்ளது; சண்டேச நாயனார் பசுக்களை மேய்த்த
இடமாயும், அங்கு இறைவர் வெளிப்பட்ட இடமாயும் உள்ளதால் இப்பெயர் பெற்றது;
இரண்டும் காவிரியின் பிரிவுகளாதலானும், காவிரியின் கிளையாதலானும், மண்ணி,
கொள்ளிடம் என்றுபசரிக்கப்பட்டது. அன்றிக் கொள்ளிடத்தின் தெற்கில் உள்ளது
ஆப்பாடி என்பதும் பொருந்தும். தென் - அழகிய என்றலுமாம்.
 
     வாய்ப் பாடியான் - வாயினாலே பாடியவர்.                  19
 
20.      கச்சித் திரு ஏகம்பம்
 
    

 

என்னெஞ்சே யுன்னை யிரந்து முரைக்கின்றேன்
கன்னஞ்செய் வாயாகிற் காலத்தால் - வன்னெஞ்சேய்
மாகம்பத் தானை யுரித்தானை வண்கச்சி
யேகம்பத் தானை யிறைஞ்சு.
                             20
     (இ-ள்) என்னெஞ்சே - எனது நெஞ்சமே; கன்னம் செய்வாயாகில் -
கேட்பாயாகில்; உன்னை இரந்தும் உரைக்கின்றேன் - உன்னைக் கெஞ்சியும் வேண்டிச்
சொல்கின்றேன்; வன்னெஞ்சேய்....ஏகம்பத்தானை - வலிய கொடிய நெஞ்சினையுடைய
பெரிய அசைகின்ற யானையினை உரித்தவரை, வண்மையுடைய திருக்கச்சி ஏகம்பத்தில்
எழுந்தருளிய திருவேகம்ப நாதரை; காலத்தால் - உயிருள்ள கால முண்டாகவே;
இறைஞ்சு - வணங்குவாயாக.
 
     (வி-ரை) கன்னம் - காது; கன்னஞ் செய்தல் - செவிசாய்த்துக் கேட்டல்;
இரந்தும் - மிகக் கெஞ்சியும்; காலத்தால் - உயிரும் ஆற்றலுமுள்ள காலத்திலே;
"காலமுண் டாகவே காதல்செய் துய்மின்" (திருவா); காலத்தால் - இறைஞ்சு என்று
கூட்டுக; வன்னெஞ்சு - மாறுபட்ட வலிய கொடிய நெஞ்சு; மா - பெரிய; உருவுடைய;
கம்பத்து ஆனை - கம்பம் - அசைவு; எப்போதும் அசைவுடனிருக்கும் யானையினது
இயல்பு குறித்தது; கம்பம் - நடுக்கம் என்று கொண்டு பெரிய நடுக்கத்தை விளைக்கும்
என்றலுமாம்; கம்பம் - கட்டுத்தறி என்றலும் பொருந்தும். வண் - வளப்பமாவது முத்தி
நல்கும் ஏழு பெருந்தலங்களுள் ஒன்றாதலும் எல்லா அறங்களையும் வளர்க்கும்
அம்மைக் கிருப்பிடமாதலுமாம்.
 
     ஏகம்பம் - திரு ஏகம்பம்; இறைவர் எழுந்தருளியுள்ள இடம். "கருவார் கச்சித்
திருவே கம்பம்" (தேவா.) தொண்டை நாட்டு 1-வது பதி.

20

21.     திருப்பனந்தாள் - தாடகேச்சரம்
 
 
கரமூன்றிக் கண்ணிடுங்கிக் கால்குலைய மற்றோர்
மரமூன்றி வாய்குதட்டா முன்னம் - புரமூன்றுந்
தீச்சரத்தாற் செற்றான் றிருப்பனந்தாட் டாடகைய
வீச்சரத்தான் பாதமே யேத்து.                                 21

 

     (இ-ள்) கரம் ஊன்றி....முன்னம் - கையை ஊன்றிக், கண்கள் குழிந்து, கால்கள்
தடுமாறி, ஆதரவுக்கு மற்றும் ஒரு ஊன்றுகோலினைப் பற்றி ஊன்றி, வாய்