575 முதல் கி.பி. 600 வரை அரசாண்ட பல்லவ சிம்ம விஷ்ணு என்பவன் களப்பிரரை முறியடித்த பெருவீரன் என்று வேலூர்ப்பாளையம் பட்டயம் கூறுகிறது (Vide S. I. I. vol.I. Page 152). சிம்ம விஷ்ணுவின் பேரனான முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 625 - 650) களப்பிரரோடு போரிட்டான் என்று தெரிகிறது (S.I.I. Vol.II Page 356). | கூற்றுவ நாயனார் காலத்தில் அடங்கி, மறைந்து, இருந்த களப்பிரர், அவர் காலத்துக்குப் பின் ஒரு நூற்றாண்டு வரை பல்லவ அரசர்களுக்குத் தொல்லை விளைத்து வந்ததாகப் பல்லவர் சரித்திரம் கூறுகிறது. | கி.பி. 7-ம் நூற்றாண்டில் முதலாம் நரசிம்மவர்மன் எஞ்சி நின்ற களப்பிரரை எல்லாம் விரட்டி அடிக்க, அவர்கள் வடக்கே ஆந்திரநாடு சென்றார்கள். அங்கே அப்போது அரசாண்டவன் மேலைச்சளுக்கிய அரசனான முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 642 - கி.பி. 680) ஆவான். அவனும் அவன் மகன் விநயாதித்தனும் (கி.பி. 680 - 686) களப்பிரரோடு பொருது வெற்றி பெற்றார்கள். கி.பி. 3-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட களப்பிரர் தொல்லை கி.பி. 7-ம் நூற்றாண்டோடு முடிவுற்றது. | கூற்றுவ நாயனார் வேளாளராக இருந்தும் உமாமதிசிவம் சேக்கிழார் நாயனார் புராணத்தில் இவரை "வேளாளர் பதின்மூவரில்" சேர்க்கவில்லை; "குறுநில மன்னவர் ஐவர்" என்பதில் சேர்த்துள்ளார். குறுநிலமன்னர் ஐவரில் மூவர் பல்லவர்; ஒருவர் மலை மன்னர்; ஒருவர் வேளாளர் எனத் தெரிகிறது. | | 9. களப்பிரர் வேறு - களப்பாளர் வேறு | சேக்கிழார் கூற்றுவநாயனார் புராணத்தில் நாயனாரை "களந்தை முதல்வனார்" என்றும், "அரசர் திருவெல்லாம் உடையர் ஆயினார்" என்றும் கூறினாரேயொழிய, அவர் வேளாளர் என்றாவது, வேறு வகுப்பைச் சேர்ந்தவர் என்றாவது கூறவில்லை. களப்பாளர் கோத்திரத்தார் என்று நம்பியாண்டார் நம்பிகள் சொன்னதைக் கூடச்சொல்லாமல் விட்டுவிட்டார். அதனால், சில ஆராய்ச்சிப் புலவர்கள் கூற்றுவ நாயனாரைக் களப்பிர அரசன் என்று வாய் கூசாது சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். இதனைக் குறித்துத் திருவாளர் T.V. பண்டாரத்தார் "பாண்டியர் வரலாறு" பக்கம் 33ல் கூறுவது வருமாறு:- "கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியரில் வலிகுன்றிய அரசன் ஆட்சிபுரிந்தபோது, களப்பிர அரசன் பாண்டி நாட்டின் மீது படைகொண்டு சென்று, அதனைக் கவர்ந்து அரசாண்டான்.......சங்க நூல்களில் களப்பிரர் என்ற பெயர் காணப்படாமையானும், வராகமிரர் தென்னாட்டவரின் வரிசையில் களப்பிரரைக் கூறாமையானும், அன்னோர் பிராகிருதம், பாளி, ஆகியவற்றைத் தமக்குரிய மொழிகளாகக் கொண்டு ஆதரித்துள்ளமையானும், அம்மரபினர் தமிழர் அல்லர் என்பதும், வடபுலத்தினின்றும் போந்த ஏதிலர் ஆவர் என்பதும் நன்கு தெளியப்படும். எனவே, களப்பிரர் தென்னிந்தியர் என்னும் சில ஆராய்ச்சியாளரின் கொள்கை1 பொருந்தாமை காண்க. அன்றியும், தமிழ்நாட்டுக் குறுநிலமன்னர் குடியினராகிய முத்தரையர் என்போரை களப்பிரர் என்று கூறுவதும்2 சிறிதும் ஏற்புடைத்தன்று. _____________________ 1 பல்லவர் வரலாறு பக்கம் 34. by பண்டிதர் இராசமாணிக்கம். 2 பல்லவர் வரலாறு by பண்டிதர் இராசமாணிக்கம் - பக்கம் 300. "Epigraphy and Tamil Literature by pandit M. Ragava Iyyangar, quoted by K.A. Neelakanta Sastriar in his "Pandyan Kingdom" Page 49. | | |
|
|