பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்360

     களப்பாளர் என்ற சோழநாட்டு ஊர் ஒன்றில் முற்காலத்தில்
வாழ்ந்துகொண்டிருந்த அரசியல் தலைவன் ஒருவன் களப்பாளன் என்று சிறப்பித்து
வழங்கப்பட்டமையால், அவன் வழியினர் களப்பாளர் எனவும், களப்பாளராயர்
எனவும் குடிப்பெயர் பெற்று பெருமையோடு வாழ்வார் ஆயினர். எனவே, தமிழராகிய
களப்பாளரும் ஏதிலராகிய களப்பிரரும் ஒருவரே ஆம் என்னும் முடிவு எவ்வாற்றானும்
ஒத்துக்கொள்ளத் தக்கது அன்று.
 

10. சாசனத் தமிழ்க்கவி சரிதம் - பக்கம் 64-65

(by பண்டிதர் M. இராகவ அய்யங்கார்)
 

     பண்டிதர் அய்யங்கார் கூறுவதாவது :- "நெற்குன்றவாண முதலியார் என்பவர்
புலியூர்க் கோட்டத்து, போரூர்நாட்டு, நெற்குன்றம் என்ற நத்தத்து, களப்பாள
கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்றும், கூற்றுவ நாயனாரும் இம்மரபைச் சேர்ந்தவர்
என்றும், நடுநாட்டுப் பெண்ணாகடத்து - அச்சுதன் களப்பாளர் (மெய்கண்டாரின்
தந்தை) என்று வரும் களப்பாள கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்றும், எல்லோரும்
தொண்டைமண்டல வேளாண் முதலிமார் மரபைச் சேர்ந்தவர் என்றும்
கூறப்பட்டுள்ளது.
 
     திருப்புகலூர் சிவாலயத்துள் முதலாம் குலோத்துங்கனுடைய 49ம் ஆட்சிக்
கல்வெட்டு ஒன்றில்:- "களப்பாளர் என்பார் பண்டைக் காலம் தொட்டே தமிழ் நாட்டில்
சிற்றரசு உரிமை பெற்ற தலைவர்களாக விளங்கியவர் என்பது நூல்களாலும்
சாசனங்களாலும் அறியக் கிடக்கின்றது."
 
     மேற்படி புத்தகம் பக்கம் 143ல் - "அரிதாதன் என்றோது நாமக் களப்பாளன்"
என்று இருசமய விளக்கம் என்னும் நூலில் தம்மைக் கூறுதலால், அவர் களப்பாளர்
குடியில் உதித்த வேளாண் மரபினர் என்பது தெரியலாம்" என்று கூறுகிறார்.
 
     இன்னும், தொண்டைநாட்டுக் ஈக்காட்டுக் கோட்டத்து, திருஎவ்வளூர் நாட்டு
நாகலாபுரத்திலும் களப்பாள கோத்திரத்தை உடைய தொண்டைமண்டல வேளாண்
முதலிமார்கள் இருந்ததாக அக்கோவில் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. "அரிதாதருடைய
அண்ணன் வடமலை முதலியார் என்பவர் கிருஷ்ணதேவராயர் காலத்தில்
அமைச்சராக இருந்தார்" என்று பக்கம் 150 - 151-ல் கூறுகிறார். இவ்வாறு பண்தர் M.
இராகவைய்யங்கார் கூறியிருக்க, திருவாளர் நீலகண்டசாஸ்திரியார் வேறு விதமாகப்
பொருள் கொண்டு களப்பாளரை களப்பிரர் என்று அய்யங்கார் கூறுவதாக தம்முடைய
‘பாண்டியர் வரலாறு’ பக்கம் 49-ல் கூறியுள்ளார். சாஸ்திரியாரை ஒட்டிப் பண்டிதர்
இராசமாணிக்கமும் வழுக்கினார். இதுவரை ஆராய்ந்தவற்றால் களப்பிரர் வேறு -
களப்பாளர் வேறு என்பது கண்டாம்.
 

11. களப்பிரர் பாண்டிநாட்டைக் கைப்பற்றிய காலம்
 

     பண்டிதர் இராசமாணிக்கம் பிள்ளை எழுதிய பல்லவர் வரலாறு பக்கம் 36-ல்
"களப்பிரர் ஏறக்குறைய கி.பி.250-ல் பாண்டிநாட்டைக் கைப்பற்றினர்" என்றும், பண்டிதர்
T.V. பண்டாரத்தார் எழுதிய ‘பாண்டியர் வரலாறு’ பக்கம் 33-ல் "கி.பி. மூன்றாம்
நூற்றாண்டில் களப்பிரர் பாண்டிநாட்டைக் கைப்பற்றினர்" என்றும் கூறப்பட்டுள்ளன.