பக்கம் எண் :

கறைக்கண்டன் சருக்கம்364

புல்லினால் திருவிளக்கு எரித்தார்; கல் நவில்....கணம்புல்லனே - கல்போன்ற வலிய
தோள்களையுடைய எமது தாதையும் தாதையின் முதல்வனுமாகிய கணம்புல்லர் என்ற
பெரியோரே யாவர்.
 

     எந்தை தந்தைபிரான் - எமது தாதையும் அவரது தாதையும் மூதாதைகளும்
வழிவழி அடிமை செய்ய அவர்க்கெல்லாம் பிரானாவார். அடியார்பால் வைத்த பேரன்பு
குறித்தது. ஆதி சைவர் சிவனுக்கே யாளாவார்; அற்றாக, நம்பிகள் திருத்தொண்டத்
தொகையினுள் அடியார்க ளெல்லாருக்கும் அவரடியார்க்கும் தாம் ஆள் என்றருளினர்.
அக்கருத்தினையே தொடர்ந்த ஆதி சைவராகிய நம்பி யாண்டாரும் இவ்வாறு
அருளினர். எல்லாக் குலங்கட்கும் மேம்பட்ட இச் சிவக்குலத்தவரே அடியார்க்கு
அடியவர் என்றால் ஏனையவரும் அவ்வண்ணமே ஆளாவார் என்பதற்குத்
தடையில்லை என்பதாம். திருத்தொண்டத் தொகையினை, நம்பிகளை இங்கு
அவதரிக்கச் செய்து அவர் மூலம் ஓதுவித்த திருவருட் குறிப்பு மிது போலும். "தீதி
லாத் திருத் தொண்டத்தொகை தரப் போதுவார்." பொன்னகர் - பொன்னம்பலம்.
 
     எந்தை தந்தைபிரான் - மூதாதையர்களை எல்லாம் குறிக்க இவ்வாறு கூறுதல்
மரபு. "என்றனது சென்றுநிலை யெந்தைதன தந்தையம ரின்ப நகர்தான்" (பிள் - சாதாரி
- தேவூர் - 7); "எம்பி ரா னெந்தை தந்தை தந்தையெங் கூட்ட மெல்லாந், தம்பிரா
னீரே யென்று வழிவழிச் சார்ந்து வாழும், இம்பரின் மிக்க வாழ்க்கை" (3546); "கொற்றத்
திறலெந்தை தந்தைதன்றந்தை யெங்கூட்டமெல்லாந், தெற்றச் சடையாய் நினதடியேம்"
(திருத்தொண்டர் திருவந்தாதி 35); கல்நவில் - நவில் உவமவுருபு. "கன்னவில் தோட்
சிறுத்தொண்டன்" (பிள் - தேவா). ஊரும் பெயரும் வரலாறும் பண்பும் வகை நூல்
வகுத்தது.
 
     விரி: 4055. (இ-ள்) திருக்கிளர்....நெருங்கி - செல்வங்கள் மிகும்
சிறப்பினையுடைய மாடங்களில் எங்கும் திருத்த முடைய பெருங்குடிகள் நெருங்கி;
பெருக்கு....கரைப்பால் - வளம் பெருக்கும் வட வெள்ளாற்றின் தென் கரையில்; பிறங்கு
பொழில்....விளைக்கும் - விளக்க முடைய சோலைகளில் உள்ள பலாப்பழங்களின்
நீண்ட சுளைகளினின்றும் பொழியப்பட்ட தேன், மடுவினை நிறைத்தலால் வயல்களை
விளையச் செய்யும்; இருக்குவேளூர்....பதி - இருக்குவேளூர் என்ற பெயருடையது
இவ்வுலகத்தில் விளங்கும் பதியாகும்.
 
     (வி-ரை) பெருங்குடிகள் நெருங்கி - பெருங்குடிகள் நெருங்கி யிருத்தல்
நகரச்சிறப்பு; பெருக்கு - வளம் பெருக்கும் நீர்ப்பெருக்கையுடைய.
 
     வடவெள்ளாறு - சேலம், தென் ஆற்காடு் சில்லாக்களுக்கும், தஞ்சைச்
சில்லாவுக்கும் இடையில் சோழ நாட்டின் வடக்கெல்லையாய் ஓடிப் பறங்கிப்
பேட்டையருகு கடலில் விழும் ஆறு.
 
     தென் வெள்ளாறு வேறு - அது மதுரை சில்லாவுக்கும் தஞ்சாவூர்ச் சில்லா
(சோழநாடு) வுக்கும் இடையில் சோழநாட்டின் தெற்கு எல்லையாக ஓடி மீமிசலின்
அருகில் கடலில் விழுவது.
 
     வருக்கை நெடுஞ் சுளை - பலாவின் நீண்ட சுளைகள்.சிலவகைப்
பலாமரங்களின் பழம் நிலத்துக்குள் வேரில் பழுத்து நிலம் வெடித்துத் தேன் மேலே
நிலத்தில் ஊறி வரும் இயல்புடையன. இவை வேர்ப்பலா எனப்படும். மடு - நீர்
தங்கும் குழி.
 
     இருக்குவேளூர் - இப்போது பேளூர் (Belur) என வழங்குவது. சேலம்
விருத்தாசலம் கிளை இருப்புப்பாதையில் ஆற்றூர் நிலையத்தினின்றும் தெற்கில்
மட்சாலை வழி நான்கு நாழிகை யளவில் அடையத்தக்கதாய்ப் பச்சை மலையின்