| பெருஞ் செல்வராயிருந்த இந் நாயனார்க்கு வறுமை வந்து வேற்றிடம் புக நேர்ந்தபோது அன்பு பெருகிற்று; இஃது உலகியலின் மேம்பட்ட இறைபாலின் அன்புநிலை. |
திருப்புலீச்சரம் - "திருப்புலீச்சுரத்து முன்னர்" (396) என்றதும், ஆண்டுரைத்த தல வரலாறும் பார்க்க. (I பக்கம் 482); இறைவர் கோயிலில் விளக்கெரிக்கும் பணி செய்யும் நியமமுடைய இந்நாயனார் அந்நியமமுடித்தற்குத் தில்லையம்பதியில் உள்ள கோயில்கள் பலவற்றுள்ளும் திருப்புலீச்சரத் திருக்கோயிலைத் தேர்ந்து எடுத்து அங்கு அப்பணியினைச் செய்தனர் என்க. |
இல்லிடை உள்ளன மாறி - வறுமையால் தமது ஊரினின்றும் போதுவார் அங்கு எஞ்சிய சில பொருள்களைத் தம் சீவனத்துக்காக உடன் கொண்டு போந்தனராக, அப் பொருள்களையும் விற்று; மாறி - விற்று; பண்டமாற்றாக விற்றலுமாம். இல்லிடை உள்ளன - முரண் அணிச்சுவைபடக் கூறியது கவிநயம்; இன்மையின் கண்ணும் உள்ள சிலவற்றை என்பதுமாம். வறுமையிற் செம்மை. |
எரித்து - விளக்கெரித்து. 4 |
4059. (வி-ரை) ஆயசெயல் - இல்லிடை உள்ளன மாறி எரிக்கும் செயல்; ஆய் - முன்கூறிய அவ்வாறு ஆகிய. |
மாண்டதற்பின் - செயல்மாறுதலாவது செய்ய வியலாதொழிதல்; மேலும் மாறுதற்குரிய பொருள்கள் இல்லாமையால் அச் செயலும் ஒழிந்தது என்க. அயலவர்பால் இரப்பு அஞ்சி - திருக்குறள் "இரவச்சம்" என்ற அதிகாரத்துட் கூறியவை ஈண்டுக் கருதற்பாலன; "ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற், கிரப்பி னிளிவந்த தில்" என்பது முதலியவை காண்க; "இதனால் அறனும் முயன்று செய்வதல்லது இரந்து செய்யற்க என்பது கூறப்பட்ட"தென்பது பரிமேலழகருரை; இதனால் எந்தம் பெருமக்கள் தமது முயற்சியான் வரும் பொருளை உட்கொண்ட மேம்பாடு காணத்தக்கது; கலிய நாயனார் வரலாறும், பிறவும் காண்க. இனி, இப்பெரியோர்கள், செய்த இச்செயல்களும், மேற்கொண்ட கொள்கைகளும், தாம் உயிர் வாழ்தற் பொருட்டன்றிச், சிவன் பணி மேற்கொண்ட நிலையில் வருவன என்பதை உணர்ந்தபோது, இவர்க்கீடாவார் உலகில் வேறிலர் என்பது இனிது விளங்கும். |
காயமுயற்சி - இதுவரை ஏனைப்பொருள்களின் சார்பினையே பற்றிச்செய்த அறத்தினை, இனித் தம் உடல் முயற்சி துணையாகச் செய்ய மேற்கொண்டனர்; "செல்வந் தலைநின்ற பயனிது" என முன்னர்த் துணிந்து, பொருட்பற்றிப் பூசனை செய்த இவர், இப்போது உடல்பெற்ற பயனும் இதுவே யாம் என்று உடலால் வருந்தி முயன்று அதன் பயனாற் பணி செய்யலாயினர். |
கணம்புல் - ஒருவகைப்புல்; மெல்லிதாய் வீடு வேய்தல் முதலியவற்றுக்குப் பயன்படுவது; இது சிறு காடுகளிலும் குன்றிடச் சாரல்களிலும் மிகுதியாய்க் கிடைப்பது; இப்புல் பச்சைமலை கொல்லிமலைச் சாரல்களில் பெரும்பான்மை காணப்படும். இப்புல்லினை அரிந்து கொடுவந்து விற்கும் தொழிலினை இந்நாயனார் வறுமை வந்தபோது தமது ஊரில் (இருக்கு வேளூரில்) செய்து பழகினர்; அன்றிப், பிறர் செய்தலைக் கண்டறிந்தனர் என்பது கருதப்படும். |
விலைப்பொருளால் - புல் விற்ற விலைப்பொருளினால்; துளக்கு அறும் - அசைவில்லாத; பிறழாத; துளக்கம் - சலிப்பு; 5 |
| 4060. | இவ்வகையாற் றிருந்துவிளக் கெரித்துவர வங்கொருநாண் மெய்வருந்தி யரிந்தெடுத்துக் கொடுவந்து விற்கும்புல் |