பக்கம் எண் :

கறைக்கண்டன் சருக்கம்370

     கணம்புல்லர் - இவர் செய்த திருத்தொண்டு காரணமாகப் போந்த காரணப்
பெயர்; இவரது இயற்பெயர் விளங்கவில்லை; இவரது திருமரபும் குறிக்கப்பட வில்லை.
                                                                8
 
4063.     மூரியார் கலியுலகின் முடியிட்ட திருவிளக்குப்
பேரியா றணிந்தாருக் கெரி்த்தார்தங் கழல்பேணி
வேரியார் மலர்ச்சோலை விளங்குதிருக் கடவூரிற்
காரியார் தாஞ்செய்த திருத்தொண்டு கட்டுரைப்பாம்.               9
 
     (இ-ள்) மூரி ஆர்கலி.....கழல்பேணி - பெரிய கடல் சூழ்ந்த உலகில் தமது
முடியினையே திருமுன்பு இட்ட விளக்காகக், கங்கையாகிய பெரிய யாற்றினை அணிந்த
சிவனுக்கு எரித்த நாயனாரது திருவடிகளைத் துதித்து; வேரி ஆர்...கட்டுரைப்பாம் -
தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்து விளங்கும் திருக்கடவூரில்
அவதரித்த காரிநாயனார் செய்த திருத்தொண்டினைச் சொல்வோம்.
 
     (வி-ரை) இது கவிக்கூத்து; ஆசிரியர் தமது மரபின்படி இதுவரை கூறிவந்த
சரிதத்தை முடித்துக்காட்டி, மேல் வருஞ் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார்.
 
     மேல்வருவது தமிழ்புலமையன்பராகிய காரி நாயனாரது புராணம். அக்குறிப்புப்பட
இங்குத் தமிழ்க்கவி நயம்பட அரவது பெயரைத் திரிபு என்னும் சொல்லணியில்
வைத்துத் தொடங்கியது ஆசிரியது கவிமாண்பின் நுட்பம்; இவ்வாறு தொடங்கியது
மன்றி இவர்தம் புராண முடிப்பிலேயும் இவ்வாறே வைத்துக் காட்டியருளிய கவிநயக்
குறப்பும் (4068) கண்டுகளித்தற்பாலது.
 
     மூரி ஆர்கலி - மூரி - பெருமை ; வலிமை; ஆக்கல், காத்தல், அழித்தல்
ஆகிய முத்தொழிலும் புரியும் வன்மை; ஆர்கலி - கடல்.
     உலகில் - எதித்தார் என்று இயையும்; இவ்வாறு செய்யவல்லார் உலகிற் பிறர்
இலர் என்பது குறிப்பு. எரித்தார் வினையாலணையும் பெயர்.
 
     இட்ட முடித்திருவிளக்கு எரித்தார் - என்க. இட்ட - நியமமாக இட்ட-எரித்த.
 
     பேர்யாறு - கங்கையாகிய பெரிய நதி.
 
     வேரி - ஆர் - வேரி - தேன் - ஆர்; பொருந்திய; நிறைந்த; வேரி ஆர்
மலர் என்க.
 
     காரியார் - நாயனாரது பெயர்; திரிபணியிற் கூறிய சொற்கவி நயத்தால் இவர்
சொல் விளங்கப் பொருண்மறையத் தமிழ்க்கோவை பாடும் தொண்டர் என்பது
குறிப்பிலுணர்த்தப்பட்டது. திருக்கடவூர் என்று ஊரும், காரியார் என்ற பெயரும்
பண்பும் கூறியது கவிநயம்.                                        9
 
     சரிதச்சுருக்கம் - கணம்புல்ல நாயனார் புராணம் ;- வட வெள்ளாற்றுத்
தென் கரையில்
உள்ளது இருக்குவேளூர் என்னும் செழும்பதி. அதில்
குடிமுதல்வர்க்குத் தலைவராய்ப, பெருஞ் செல்வத்தராய், நற்குண மேம்பாடுடையவராய்,
இறைவர் திருவடியே மெய்ப்பொருள் என்ற துணிவுடையவர் ஒரு பெரியார். அவர்
செல்வப் பயன் இதுவே என்று துணிந்து சிவன்கோயில் நீங்காமல்
விளக்கெரித்துவந்தார் செல்வங் குறைந்து வறுமை வந்தது. அவர் அவ்வூரைவிட்டுத்
திருத்தில்லையினைச் சேர்த்து அங்குத் திருப்பூலீச்சரத்தில் விளக்கெரிக்கும் நியமம்
பூண்டார். பொருளின்மையால் தம் இல்லத்தில் உள்ள பொருள்களை மாறி
விளக்கெரித்தார். அவையும்