பக்கம் எண் :

பெரியபுராணம்371

     தீர்ந்தன. பிறர்பால் இரத்தலை அஞ்சினார்; தமது உடல் முயற்சியால் அரிந்து
கொண்டுவந்த கணம் புல்லினை விலைப்படுத்தி அப்பொருளினால் விளக்கெரித்து
வந்தனர்.
 
     ஒரு நாள் அவர் கொண்டுவந்த புல் எவ்விடத்தும் விலை போகாதாயிற்று, அப்
புல்லையே மாட்டி விளக்கெரித்தார். ஆனார், அது, தாம் நியமமாகவே மேற்கொண்ட
யாம அளவுரை எரிக்கப் போதாதாயிற்று. அன்பினால் எலும்பும் உருக அந்நாயனார்
தமது திருமுடியினையே விளக்காக மாட்டி எரித்தனர்; இருவினைத் தொடக்கையும்
எரித்தொழிந்தார். இறைவர் அவருக்கு மங்கலமாம் பெருங்கருணை வைத்தருளினர்.
அவர் சிவலோகத்தில் இறைஞ்சி இன்பமுடன் அமர்ந்தனர். அவர் செய்த திருப்பணி
காரணமாக அவருக்குக் கணம்புல்லர் என்று பெயராயிற்று.
 
     கற்பனை - (1) செல்வம் பெற்ற பயன் சிவன் பணி செய்தலேயாம்.
 
     (2) சிவன் கோயிலி்ல் திருவிளக் கெரித்தல் சிறந்த சிவபுண்ணியம்.
 
     (3) வறுமை வந்த காலத்தும் தாம் நியமமாகக் கொண்ட சிவன் பணியை விடாது
எவ்வகையானும் செய்வது பெரியோர்க்கே கூடுவது.
 
     (4) சிவன் பணிக்கென்றேனும் இரத்தல் அஞ்சத்தக்கது.
 
     (5) மனையில் உள்ளனவற்றை மாறியும், காய முயற்சியால் அரிந்த புல்விற்றும்
பணிசெய்தனர் கணம்புல்ல நாயனார்; இது பெரியோர் தன்மை.
 
     6) தம் உடம்பின் முடியினையே விளக்காக எரித்தலும் சிவன்றிருப்பணியின்
உறைப்புடையார்க்குச் சாலும். கலியநாயனாரது வரலாறு காண்க.
 
     தலவிசேடம்; இருக்குவேளூர் :- கொங்கு நாட்டில், சேலம் சில்லாவில்
வடவெள்ளாற்றுத் தென்கரையில் உள்ளது. பேளூர் என வழங்குவது. 4055 - ன் கீழ்
உரைத்தவை பார்க்க.
 

48. கணம்புல்ல நாயனார் புராணம் முற்றும்