பக்கம் எண் :

கறைக்கண்டன் சருக்கம்372


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

49. காரி நாயனார் புராணம்
 

தொகை
 

    

 

“ ‘கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்குங்’ காரிக்கு மடியேன் -”
 

- திருத்தொண்டத் தொகை - 8
 

வகை
 

“ புல்லன வாகா வகையுல கத்துப் புணர்ந்தனவுஞ்
சொல்லின வுந்நய மாக்கிச் சுடர்ப்பொற் குவடுதனி
வில்லனை வாழ்த்தி விளங்குங் கயிலைபுக் கானென்பராற்
கல்லின மாமதில் சூழ்கட வூரினிற் காரியையே
 

- திருத்தொண்டர் திருவந்தாதி - 59
 

விரி
 

4064. மறையாளர் திருக்கடவூர் வந்துதித்து வண்டமிழின்
றுறையான பயன்றெரிந்து சொல்விளங்கிப் பொருண் மறையக்
குறையாத தமிழ்க்கோவை தம்பெயராற் குலவும்வகை
முறையாலே தொகுத்தமைத்து மூவேந்தர் பாற்பயில்வார்;             1
 
4065. அங்கவர்தா மகிழும்வகை யடுத்தவுரை நயமாக்கிக்
கொங்கலர்தார் மன்னவர்பாற் பெற்றநிதிக் குவைகொண்டு
வெங்கணரா வொடுகிடந்து விளங்குமிளம் பிறைச்சென்னிச்
சங்கரனா ரினிதமருந் தானங்கள் பலசமைத்தார். 2
 
     புராணம்: இனி, நிறுத்த முறையானே, ஆசிரியர், ஒன்பதாவது கறைக் கண்டன்
சருக்கத்திற் போற்றப்பட்ட ஐந்து நாயன்மார்களுள், இரண்டாவது காரிநாயனார்
புராணங் கூறத்தொடங்குகிறார்; காரியார் என்ற பெயருடைய நாயனாரது வரலாறும்
பண்பும் கூறும் பகுதி.
 
     தொகை: முன் புராணத்தில் உரைக்கப்பட்டது.
 
     வகை: கல்லின...காரியையே - கல்லாலமைந்த மதில்சூழ்ந்த திருக்கட வூரில்
அவதரித்த காரியார் என்பவரையே; புல்லன ஆகாவகை - தமது நூல்கள் உலகத்தில்
புன்மையனவாகிக் கழியாதபடி; உலகத்து....நயமாக்கி - உலகத்தில் பொருந்தும்
பொருளும் சொல்லும் நயப்புடையனவாகச் செய்து; சுடர்....வாழ்த்தி ஒளிபொருந்திய
பொன்மலையாகிய ஒப்பற்ற வில்லினை உடைய இறைவரைத் துதித்து; கயிலை....என்பர்
- கயிலையினை அடைந்தார் என்று சொல்லுவர். (ஆல் - அசை)