| புல்லன - புல்லியன; அற்பமானவை; புணர்ந்தன - பொருளாகி உள்ளே பொருந்தியன. சொல்லின - அப்பொருளைப் புலப்படுத்துச் சொல்லிய சொற்கள்; நயமாக்குதல் - விரும்பும்படி இயற்றுதல்; காரியை - நயமாக்கி - வாழ்த்திப் - புக்கான் என்பர் என்று முடிக்க. கல்லின - கல்லாற் செய்யப்பட்டன; மதிற் கடவூர் - “எயிற்பதி” (831). |
உலகத்துப் புணர்ந்தனவும் - உலகு வழக்குச் சொல்லையும்; சொல்லினவும் - தன்னாற்சொல்லப்பட்டவைகளையும்; சொற்பொருள் அமைந்த அந் நூலையும் அந்நூல் அரங்கேற்றுழிச் சொல்லும் உரையையும் (உலகத்துப்) புல்லனவாகா வகை - நயமாக்கி; (இவை ந.சிவப்பிரகாசக் குருக்களையா குறிப்புக்கள்). தொகை நூல் பெயரை உரைத்தது. வகை நூல் பெயரையும் ஊரையும் திருத்தொண்டின் பண்பினையும் வரலாற்றையும் வகுத்தது. இவை விரித்தபடி விரிநூலுட் கண்டுகொள்க. |
விரி: 4064. (இ-ள்) மறையாளர் திருக்கடவூர் வந்துதித்து - மறையோர்கள் மிக்கு வாழ்கின்ற திருக்கடவூரில் வந்து தோன்றி்; வண்டமிழின்.....தொகுத்தமைத்து - வளப்பமுடைய தமிழது இனிய துறைகளிலாகிய பயனைத் தெரிந்து சொல்விளங்கி உட்கிடையான பொருள் மறையும்படி குறைவில்லாத தமிழ்க் கோவையினைத் தமது பெயராலே விளங்கும்படி முறைப்படத் தொகுத்து இயற்றி; மூவேந்தர்பாற் பயில்வார் - தமிழ் முப்பெருவேந்தர்களிடத்தும் சென்று பயில்வாராகி. 1 |
4065. (இ-ள்) அங்கவர்தாம்.....நயமாக்கி - அங்கு அம்மன்னவர்கள் மகிழும் வகையாலே பொருளுக்கேற்ற சொற்களை நயம்பெறச் செய்து; கொங்கலர்......கொண்டு - மணம் விரிகின்ற பூமாலை யணிந்த அரசர்களிடம் பெற்ற செல்வக் குவியல் களைக் கொண்டு; வெங்கண்.....சமைத்தார் - வெவ்விய கண்ணையுடைய பாம்புடனே கிடந்தும் விளங்குகின்ற இளம்பிறையினையணிந்த சென்னியையுடைய சங்கரனார் இனிதாக வீற்றிருந்தருளும் கோயில்கள் பலவற்றை அமைத்தனர். 2 |
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
4064. (வி-ரை) மறையாளர் திருக்கடவூர் - மறையவர்கள் மிக்குவாழும் பதி; “ஏய்ந்தசீர் மறையோர் வாழு மெயிற்பதி ” (831). |
தமிழின் துறையான பயன் - துறை - இவை அகமும் புறமுமாம். இன் - இனிய; ஆன பயன் - உயிர்க்கு ஊதியமாகிய பயன்; அகப்பொருட்டுறைகளில் இறைவன் - அடியார்பாற் கூட்டமும், புறப்பொருட்டுறைகளில் பாசங்களை எறியும் ஞான வெற்றியும், இவற்றால் வீடுபேறு பெறுதலுமாம். இவரது நூல்கள் இவர் வீடு பெறச் சாதனமாயினமை காண்க. வண் தமிழ்த்துறையாகிய மெய்ப்பொருளுணர்ந்து; |
சொல் விளங்கிப் பொருள்மறைய - சொற்கள் விளக்கமாகி உள்ளுறை பொருளாகிய வீடு பேற்றின் நிலை வெளித்தோன்றாது கிடக்க “அறிவனூற் பொருளு முலக நூல் வழக்குமென, விருபொருளு நுதலி எடுத்துக் கொண்டனர். ஆங்கவ் விரண்டனுள், ஆகம நூல் வழியி னுதலிய ஞான யோகநுண் பொருளினை யுணர்த்துதற் கரிது” என்று திருக்கோவையாருரை முகத்துப் பேராசிரியர் உரைத்தவை ஈண்டு நினைவு கூர்தற்பாலன; திரிபு முதலிய சொல்லணிகளை உடைய செய்யுட்கள் சொல்விளங்கிப் பொருண் மறைய உள்ளன; இக்கருத்தை ஆசிரியர் இப்புராணத் தோற்றுவாயினும் (4063), முடிப்பி்னும் (4069) காட்டியருளுதல் காண்க. இறைவர் புகழை உள்ளுறையாகக்கொண்டு பாடும் அகத்துறை, புறத்துறைப் பாட்டுக்களின் உள்ளுறைகளும் அவ்வாறேயாம். |