| சரிதச்சுருக்கம்: காரி நாயனார் புராணம் ;- திருக்கடவூரில் அவதரித்தவர் காரிநாயனார். அவர் வண் தமிழின் துறைகளின் பயன் தெரிந்து சொல்விளங்கிப் பொருள் மறையத் தமது பெயராற் காரிக்கோவை என்ற நூலினை இயற்றித் தமிழ் மூவேந்தர்களிடமும் சென்று நட்பினைப் பெற்றனர். அவர்கள் மகிழும்படி உரைநயமாக்கினார். |
| அவர்கள் தந்த பெருநிதிக் குவைகளைக் கொண்டு சிவனுக்குப் பல கோயில்கள் சமைத்தனர்; எல்லாருக்கும் மனமகிழும் இன்பமொழிப் பயனை இயம்பினர்; சிவனடியார்களுக்குப் பெருஞ் செல்வங்களை மிக அளித்தனர்; இறைவரது திருக்கயிலை மலையினை என்றும் மறவாதிருந்தனர்; தமது புகழ் எங்கும் பரவ விளங்கி இடையறாத அன்பினாலே சிவனருள் பெற்று வடகயிலை மலையினைச் சேர்ந்தனர். |
கற்பனை: (1) இனிய தமிழ்த் துறைகளின் பயன் தெரிந்து சொல்விளங்கப் பொருள் மறையக் கோவைபாடுதல் அரிய வண்டமிழ்த் திறமாம். |
(2) அரசரும் மதிக்கப் பயில்வது பெருங் கல்வி வளத்தாலாவது. |
(3) அரசர்பாற் றம் கல்வித் திறத்தாற் பெற்ற செல்வங்களைச் சிவனுக்கும் சிவனடியார்க்கும் ஆக்குவது பேரன்பின்றிறமாம் |
(4) இன்பமொழி கூறுதல் யாவர்க்கும் மனமகிழ்ச்சி தருவதொன்று; இன்ப மொழிப் பயனாவது சிவனைச் குறித்துக் கூறுதலேயாம் |
(5) இறைவரது திருக்கயிலைமலையினை மறவாத கருத்துடையரா யிருத்தல் செய்தற்கு அரியசெயல்; மனத்தினைக் கயிலையில் சேரவைத்ததுபோல உடம்பும் அங்குச் சேர்தல் பேரன்பின்றிறத்தாலாவது. அயரா அன்பு சிவப்பேற்றைத் தருவது. |
தலவிசேடம்: திருக்கடவூர் ;- III பக்கம். 417 பார்க்க. |
| காரி நாயனார் புராணம் முற்றும் |