4073. (இ-ள்) வயப்பரியின்.......பல்லிய ஒலியும் - வெற்றி பெற்ற குதிரைகளின் களிப்பால் உண்டாகும் ஒலியும் வீரர்களின் ஆயுதங்களின் ஒலியும், யானைகளாகிய மலைகளின் பிளிற்றின் முழக்க ஒலியும், பலவும் கூடி எழுந்து ஒலிக்கும் பல இடங்களின் ஒலியும்; வியக்கும்......முழக்கென - அதிசயிக்கும் ஊழி முடிவு காலத்தில் பெருகும் மேகங்களின் முழக்கமோ என்று சிந்தித்து; மீள......தயங்க - முன்போல (உக்கிரகுமாரர் விட்டது போல்) வீரத் தொடர்பினை உடைய விலங்கினையும் மீட்டும் இன்று தாம் விடுக்கும்படி ஒலிக்க; 5 |
4074. (இ-ள்) தீ உமிழும்...செருக்களத்து - தீயைச் சிந்துகின்ற படைகளை வீசியும் எறிந்தும் போர்புரியும் போர்க்களத்தில்; முருக்கும் உடல்...ஆடி - வெட்டுண்ட உடல்கள் தோய்ந்து கிடக்கும் குருதி நிறைந்த மடுவிற் குளித்து நிணங்களை உண்டு கூத்தாடி; போய....அன்றி - முன்னாளில் பணிகொண்ட பூதங்களேயல்லாமல்; பேயும்.....பிறங்க - பேயும் உரிய அரிய பணி செய்யும்படி அவற்றுக்கு உணவு அளித்ததாகும் என்று சொல்லும்படி விளங்க; 6 |
4075. (இ-ள்) இனைய.....பறந்தலையில் - இத்தன்மைத்தாகிய கொடிய போர் மூளும்படி பொருத போர்க்களத்தில்; பனை....சரிய - பனைபோல நீண்ட துதிக்கையினைப் பொருந்திய மதயானைச் சேனையினையுடைய பாண்டியனாரது சேனைகளுக்குத் தோற்றுப் போரிலழிந்த முதன்மை பொருந்திய வடபுலத்தரசனுடைய சேனைகள்சிதைந்து ஓடிப்போக; புனையும்...புனைந்து - வெற்றித்துறையிற் புனையப்படுகின்ற மணமுடைய வாகைமாலையினைப் பாண்டியருக்குரிய வேப்பமாலையுடனே தரித்து; |
7 |
4076. (இ-ள்) வளவர்பிராண்...கவுரியனார் - சோழர் பெருமானாரது திருமகளாராகிய மங்கையர்க்கரசி யம்மையாரது கலவைச் சாந்தணிந்த தனங்கள் மூழ்கப்பெற்ற அகன்ற மார்பினையுடைய பாண்டியராகிய நின்ற சீர் நெடுமாறனார்; இளஅரவு....அரசளித்தார் - இளநாகத்தினையும் வெள்ளிய பிறையினையும் அணிந்த பெருமானாருக்கு ஏற்ற திருத்தொண்டுகளை யெல்லாம் அளவில்லாத புகழ் பெறும்படி விளங்கச் செய்து சிவனருள் பெருகும்படி அரசாட்சி செய்தனர். 8 |
இவ்வேழு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன. |
4070. (வி-ரை) முன்பாட்டினாலும் இப்பாட்டினாலும் இந்நாயனாரது சரித வரலாற்றினையும் பண்பினையும் பற்றிய முற்பகுதியினை ஆசிரியர் கூறியருளிய கவிநயமும் காவியப்பண்பின் சிறப்பும் கண்டுகொள்க. இவை முன் ஆளுடைய பிள்ளயார் புராணத்தினுள் விரித்துக் கூறியருளியமையால் ஈண்டுச் சுருக்கிச் சுட்டிக்கூறிய அளவில் அமைந்தார். அந்த முற்பகுதியினுள்ளும் ஆளுடைய பிள்ளையாரது திருவருள் பெறும்முன் நிகழ்ந்த நிலையினை முன் ஒரு பாட்டினாலும், அதன் பின் நிகழ்ந்துள்ள நிலையினைப் பின் ஒரு பாட்டானும் வகுத்துரைத்த கவிச்சிறப்பும் காண்க; இங்குத் தொகைநூலுள் இந்நாயனார் “நெல்வேலி வென்ற” தன்மை பற்றியே போற்றப் படுதலால், அதுபற்றியே விரிநூலாகிய இப்புராணத்தினுள்ளும் ஈண்டும மேல் போட்டுக்களால் விரித்துக்கூறி முடித்த தகுதியும் கண்டுகொள்க. முன் பாட்டுச் சமணர் தொடக்கும் அதினின்றும் விடுபடும் நிலையும் கூறியது. இப் பாட்டு அவ்வாறு விடுபட்டபின் சைவத்திறத்திற் சிறந்த தன்மைபற்றிக் கூறியது. மேல்வரும் ஆறு பாட்டுக்கள் நெல்வேலி வென்ற திறம்பற்றி விரித்துரைத்தன. |