தென்னாடு - பாண்டியநாடு; பரதநாட்டின் தெற்கிருத்தலால் தென்னாடெனப்படும். தென் - அழகிய என்றலுமாம். |
சிவம்பெருக - சிவமணங்கமழ என்க; சைவநெறி சிவம் எனப்பட்டது உபசாரம்; சிவம்பெருக - மங்கலம் பொலிய என்றலுமாம். |
அறம் அளித்தல் - உலகியல் தருமநீதி செலுத்துதல். |
நாமநெறி போற்றல் - சிவாகம சைவநெறியினைப் பற்றிச் சிவநாமமாகிய திருவைந்தெழுத்தின் நெறியினைக் காத்தல். |
சிவம் பெருக - இதுபற்றி அரசாட்சியில் உலகம் முழுதும் சிவநெறி நின்றுய்ந்து பெருகும்படி “கிளரொளித் தூய்மை செய்தே, வாழியப் பதிக ளெல்லாம் மங்கலம் பொலியச் செய்தார்” (2770) “மதுரை வாழ்வார், துன்னிநின் றார்க ளெல்லாந் தூயநீறணிந்து கொண்டார்” (2755) என்று முன் கூறியவை காண்க. |
சொல் நாமநெறி போற்றி - முன் கூறியது உலகத்தைப்பற்றியது; இங்குக் கூறியது அரசர் தம்மைப்பற்றியது; நாமம் - சிவனாமமாகிய திருவைந் தெழுத்து; போற்றுதல் - கைவிடாது அவ்வழி ஒழுகுதல்; நாமநெறி - சிவனாமம்பற்றியநெறி; சொல் - சொல்லாகிய; சொல் - முறைகளால் எடுத்துச் சொல்லப்பட்ட என்றலுமாம். |
சுரர்...பொன்னார மணிமார்பில் - சுரர் நகர்க்கேரன் - இந்திரன் ஒரு காலத்தில், தமிழ் நாட்டில் மழைமறுக்க, அகத்திய முனிவர் அருளியவாறே சோமவார விரத நியமம் பூண்டு உக்கிரகுமாரபாண்டியர், மழையினைவேண்டிச் சோழ சேர மன்னர்களுடனே இந்திரன் சபையினை அடைய, அவ்விருவரும் அவன் காட்டிய ஆதனத்தினிலமரத், தாம் அவ்வாறிராது அவனுடன் ஒருங்கே இருந்தபோது, அவன் பொறாமை கொண்டு அவருக்குப் பரிசு தருவானைப்போலத் தாங்குதற்கரிய பொன்னாரத்தை அளிக்க, அனைப் பூமாலைபோல எளிமை பெறத்தாங்கினார் என்பது வரலாறு. திருவிளையாடற் புராணத்துட் பார்க்க; உக்கிரகுமார பாண்டியர் செய்த அரிய செயல்போலவே அவர்பின் வருவாரும் அவ்வாரந் தாங்குதலின் இவ்வாறு கூறப்பட்டது. அன்றியும் மரபின் முந்தையோர் பண்பு அவர்பின் வருவோர்க்கும் கூட்டி உரைப்பதும் மரபாம். மேல் “வடிவேல் வாங்கிட” ( 4072) “சயத் தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும்படி” (4073) என்ற வரலாறுகளும், உக்கிரகுமார பாண்டியர் கடல்சுவற வேல்விட்டதும், மேகங்களைச் சிறையிட்டதும் ஆகிய திருவிளையாடற்புராண வரலாறுகளைக் குறித்தன. தனை - தன்பால். |
பொலிகின்றார் - கடக்கின்றாராய்ப் (4071), பெருக (4072), தயங்கப் (4073) பிறங்கப் (4074), புனைந்து (4075) அரசளித்தார் (4076) என்று இவ்வேழுபாட்டுக்களையும் கூட்டித் தொடர்புபடுத்தி முடித்துக் கொள்க. |
பொலிகின்றார் - பொலிகின்றாராகி; முற்றெச்சம். 2 |
4071. (வி-ரை) அளிப்பார் - வினையாலணையும் பெயர்; சேயபுலத்தெவ்வர் - வடபுல மன்னவர்; தென்னாட்டுக்குச் சேய்மை வடபுலமாதலின் வடபுலத்தை சேயபுலம் என்றார். நன்மைக்குச் சேய்மையார் என்ற குறிப்புமாம். |
அமர் வேண்டிவந்தேற்ற.....செருக்களத்து - வேண்டி - விரும்பி; இந்நாயனார் போரினை விரும்பிச் சென்றாரலர்; வடபுலமன்னன் வலிந்து வந்து மண்ணாசையாற் போரேற்றன னாதலிற், போரில் முனைந்து அவனை வெல்லவேண்டியதாயிற்று. இந் நெல்வேலிப் போர் நாட்டுநடப்புச் சரிதத்துள் சிறந்த பேர்பெற்ற நிகழ்ச்சியாம். மூர்த்தி நாயனார் புராணவரலாறும் காண்க. இவர் போரினைவிரும்பிச் சென்றார் |