பக்கம் எண் :

பெரியபுராணம்385

     புகலிகாவல ரடிக்கீழ்ப் புனிதராம்.......மாறனார் - இந்நாயனாரது சரிதசாரம்;
அமண் சார்பு நீங்கி ஆளுடைய பிள்ளையாரது திரு அருளினாலே சிவச்சார்பில்
மீண்டு தூய்மைபெற்ற நிலையே இவர் திருத்தொண்டர் தொகையுட் போற்றப்பெறும்
தன்மை தந்தது என்பதாம்.
 
     தென்மதுரை - வடமதுரையினின்றும் வேறு பிரிக்கத் தென் என்றார்
என்றலுமாம். தினியைபு நீக்கிய விசேடணம். கடைச்சங்கப் புலவர் சங்கமிருந்து
தமிழாராய்ந்தது உத்தர மதுரையென்று இறையனாரகப்பொருள் உரை கூறும்.
 
     பன் மணிகள் திரை ஓதம் யாப்பும் நெடுங்கடற் படப்பை - பன்மணிகள் -
கடல் படுமணிகளாகிய முத்து பவளம் முதலாயின; இவற்றைத் திரைஓதம்
பரப்புதலாவது அலைகள் வாரிக்கொணர்ந்து கரையில் வீசுதல். ஓதத்திரை - என்க.
அலைநீர் விளிம்பு. படப்பை - பக்கத்துள்ள இடம். ஈண்டுக் கடற்கரை நகரம்
என்றலுமாம்.
 
     பன்மணிகள்....கடல் - “துறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதி” என்ற
திருத்தொண்டத்தொகைக் கருத்தினை விரித்த படி.
 
     “தொன்மயிலை வாயிலார்” - திருத்தொண்டத் தொகை ஆட்சி.
 
     தொழுவாம் - தொழும் வகையாற் சொல்லுவோம். “பெருந்தகையார் தமைப்
போற்றி” (4088) என்று முடித்துக் காட்டுதலும் காண்க. 10
 
     சரிதச்சுருக்கம்: நின்றசீர் நெடுமாறர் புராணம் :- மங்கயர்க்கரசியாரின்
கணவராகிய நெடுமாறனார், சமண் வலையிலக்கப்பட்டிருந்து, ஆளுடைய
பிள்ளையாரருளாலே சைவத்தில் மீண்டு வந்து சிவநெறிபெருகச் செங்கோல்
செலுத்தினார். போரேற்று வந்து எதிர்த்த வடபுல மன்னரை நெல்வேலிச்
செருக்களத்தில் வெற்றி கொண்டனர். சிவனுக் கேற்ற திருத்தொண்டுகள் எல்லாம்
செய்து, நீண்டகாலம் திருநீற்று நெறி விளங்கப் புகழ் பெருக அருள் பெருக அரசாட்சி
செய்திருந்து சிவனுலகடைந்து பணிந்து இன்ப முற்றிருந்தார்.
 
     கற்பனை;- (1) தடுமாறு நெறிசார்ந்தோர் குருவருளால் விடுவிக்கப்பெறுவர்.
 
     (2) உடலை வாட்டுதலே தவமாமென்னும் சமணநெறி நன்னெறியாகாது.
 
     (3) சிவநெறி பெருகச் செங்கோலுய்த்தல் அரசர்க்குச் சிறப்பி்னைத்தரும்
கடமையாகும்.
 
     (4) தாம் போரினை விரும்பி மேற் சொல்லாவிடினும், போரேற்று எதிர்த்து வந்த
பகைவரைப் போர்க்களத்தில் போர்செய்து வெற்றி கொள்ளுதல் அரச நீதியாம்.
 
     (5) மனைவியாரது நன்மை கணவருக்குப் பெருநலத்தை விளைக்கும்.
 
     தலவிசேடம்: மதுரை;- முன் உரைக்கப்பட்டது. III - பக், 1310
 

நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம் முற்றும்.