உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
51. வாயிலார் நாயனார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “துறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்” | |
- திருத்தொண்டத் தொகை(8) |
வகை |
| மாறா வருளரன் றன்னை மனவா லயத்திருத்தி ஆறா வருளா லணிவிளக் கேற்றி யகமலராம் வீறா மலரளித் தன்பெனு மெய்யமிர் தங்கொடுத்தான் வீறார் மயிலையுள் வாயிலா னென்று விளம்புவாரே. | |
- திருத்தொண்டர் திருவந்தாதி (61) |
விரி |
4079. | சொல்வி ளங்குசீர்த் தொண்டைநன் னாட்டிடை மல்ல னீடிய வாய்மை வளம்பதி பல்பெ ருங்குடி நீடு பரம்பரைச் செல்வ மல்கு திருமயி லாபுரி. 1 |
புராணம் :- முன் கூறியாங்குக் கொள்க. |
தொகை:- கடற்றுறையிலே அலைகளால் அடித்துக் கொண்டுவரப்பட்ட செம்பவளங்கள் இருளினைப் போக்கும் ஒளி வீசுதற்கிடமாகிய தொண்மை மிக்க திருமயிலாபுரியில் வந்த வாயிலார் நாயனாரது அடியவர்க்கும் நான் அடியேனாவேன். |
துறை - கடற்கரை; செம்பவளம் - அலைகளால் அடித்துக்கொண்டு வரப்பட்ட பவளம்; இங்குப் பவளம் என்றது பவளத்தைக் கொடிபோலக் கட்டிவாழும் அவ்வகை ஒளியுள்ள சிறு பூச்சிகளை; இவை அலைகளின் முகத்தால் அடித்துவரப்பட்டு இரவிலும் ஒளி செய்வன; அலைவிளிம்புகள் இரவினும் சுடர்விட்டுக் காணப்படுதல் இவ்வகைப் பூச்சிகளின் ஒளியாலாவது என்பர்; பவளம் என்றதனால் இனம் பற்றி முத்து முதலியனவுங் கொள்க. இதனை ஆசிரியர் “பன்மணிக டிரையோதம் பரப்பும்” (4078) என்று முன் கூறிப் பொருள் விரித்தருளினர். |