பக்கம் எண் :

பெரியபுராணம்387

     தொன்மயிலை - இதன் தொன்மையாகிய பெருமை ஆளுடைய பிள்ளையாரது
திருப் பதிகத்தாலும், அதனால் உலகறிய வெளிப்பட்ட அற்புதத்தாலும் விளங்கும்.
 

     வகை :- மாறா....இருத்தி - மாறாத அருளினையுடைய சிவனை மனமாகிய
கோயிலின்கண்ணே தாபித்து; ஆறா.....ஏற்றி - தணியாத அருளினாலே
அணிவிளக்கினை ஏற்றி; அகமலராம்.....அளித்து - அகப்பூசையில் விதித்த கொல்லாமை
பொறை முதலாகிய மேம்பாடுடைய எண்மலர்களையும் சாத்தி;
அன்பென்னும்...கொடுத்தான் -அன்பு என்னும் சத்தாகிய அமுதத்தினை நிவேதித்தவர்;
வீறார்...விளம்புவரே - பெருமை பொருந்திய திருமயிலாபுரியில் வந்தவரித்த
வாயிலார் என்று சொல்வர் (பெரியோர்).
 
     மயிலையுள் - இருத்தி - ஏற்றி - அளித்துக் - கொடுத்தவரை - வாயிலார் -
என்று விளம்புவர்; விளம்புவர் என்றதற்கெழுவாய் பெரியோர் என்பது அவாய்
நிலையால் வந்தது; இந்நாயனார் சிவயோகத்தமர்ந்து இடையறாது அகப்பூசை செய்து
பேறடைந்தவர் என்பதாம். வகைநூ லாதரவே பெரிதும் கொண்டு ஆசிரியர்
இந்நாயனார் புராண வரலாறும் பண்புங் கூறியருளினர்; (4086) பார்க்க, மனக்கோயில்
மனத்தைக் கோயிலாக்கி; “மறவாமை யானமைத்த மனக்கோயில்”; அணிவிளக்கு -
“உணரும்
ஒளிவிளக்கு”; வீறாமலர் - புறப்பூசைக்கு விதித்த அலரி - நந்தி வட்டம்
முதலிய எண்வகை மலர்களினும் சிறந்தவை யாதலின் வீறாம் என்றார்; வீறார்மயிலை
- செல்வம் - குடி முதலியவற்றின் சிறப்பு; தொகை நூலும் விரிநூலும் பார்க்க.
 
     ஊரும் பெயரும் தொகை நூல் தொகுத்துரைத்தது. அவற்றுடன் அடிமைத்
திறமும் பண்பும் வகை நூல் வகுத்தது.
 
     விரி :- 4079. (இ-ள்) சொல்....பதி - நூல்களில் எடுத்துச் சொல்லும் புகழ்ச்
சொற்கள் விளங்கும் சிறப்புடைய தொண்டை நன்னாட்டிலே வளப்பம் மிகுந்த,
வாய்மையினாற் சிறந்த வளத்தையுடைய பதியாகும்; பல்..திரு மயிலாபுரி - பல
பெருங்குடிகளும் நீடுகின்ற வழிவழி தொடர்ந்து வரும் செல்வம் நிறைந்த
திருமயிலாபுரியாகும்.
 
     (வி-ரை) சொல் விளங்குசீர் - இது பற்றி முன்னர்த் திருக்குறிப்புத் தொண்ட
நாயனார் புராணத்தும், பிறாண்டு முரைத்தவை பார்க்க. சொல் - நூல்; சொல் - புகழ்
என்றலுமாம்.
 
     மல்லல்.....வாய்மைவளம் - மல்லல் - செல்வச் செழிப்பு; வாய்மைவளம் -
ஒழுக்கமேம்பாடு; பெருங்குடி நீடுதல் - பல பெருங்குடி மக்கள் பலவகையினரும்
பெருகுதல்; இது நகரச் சிறப்பு.
 
     பரம்பரை - என்பதனைக் குடி என்பதனுடனும், செல்வம் என்பதனுடனும்
சேர்த்துரைக்க; இடையில் வைத்தது கவிநயம்; பரம்பரை - வழிவழி வரும் தொடர்பு;
வழிவழி வரும் செல்வம் அமைதியுடன் சிறந்து நல்வழிப் படுதலும், புதிதின் வருதல்,
பெரும்பான்மை, அவ்வாறின்றிப் பற்பல கேடுகளுக்குக் காரணமாதலும் உலகியலில்
காணப்படும் உண்மையாதல் குறித்தது.                                   1
 
4080. நீடு வேலைதன் பானிதி வைத்திடத்
தேடு மப்பெருஞ் சேமவைப் பாமென
ஆடு பூங்கொடி மாளிகை யப்பதி
மாடு தள்ளு மரக்கலச் செப்பினால்.                                2