பக்கம் எண் :

பெரியபுராணம்391

பெறும்படி வந்தவதரித்தனர்; தன்மை....தபோதனர் - உயர் தன்மை பெற்ற வாயிலார்
என்னும் பெயரினையுடைய தவப்பேறுடையவர்.
 
     (வி-ரை) தொன்மை நீடிய...தொல்குலம் - தொன்மை - தொல் என்ற
அடுக்கு மிகுதி குறித்தது; மேல் நன்மை சான்ற நலம் - என்றது மிவ்வாறே மிகுதிக்
குறிப்பாம். மிகப் பழைமை என்பதும், நன்மைகளுள் எல்லாம் மிக்க நன்மையாகிய
செம்மைப் பண்பு என்பதும் கருத்து. நீடிய - நீடித்து வாழ்கின்ற;
 
     சூத்திரத் தொல்குலம் - வேளாளர் குலம்; உமாபதி சிவாசாரியர்
திருத்தொண்டர் புராண வரலாற்றினுள் இந்நாயனாரை வேளாளர் பதின்மூவருள்
வைத்து வகுத்துப் போற்றி யிருத்தல் காண்க. “வேளாளர் பதின்மூவர் மூர்க்கர்
செருத்துணையார் வாயிலார் கோட்புலியார் சத்தி” (39). சூத்திரர் என்ற பெயர் இழிபுப்
பொருள் கொண்டதென்றும், இதனை வேளாளர்க்கு இட்டு வழங்கிப் பார்ப்பனர் இழிவு
படுத்தினர் என்றும் கொண்டு, இந்நாளில் இதுபற்றிப் பெரும் பூசலும் பகைமையும்
விளைகின்றன; அப்பெயர் இழிவுப் பொருள் கொண்டதன்று ஆசிரியர் முதலிய
பெரியோர் வழக்கினால் அறியப்படும். உயர்வு இழிவு என்ற இருபொருளும் அது
பெறவழக்கினும், இழிவை விடுத்து, உயர்வையே கொள்ளுதல் மரபிலக்கணம். சூத்திரன்
என்பதற்கு திட்பநுட்பம் அமைந்த மந்திராதிகாரமுடையவன் என்பது பொருளாம்;
இதுபற்றி முன் “நம்பு வாய்மையி னீடு சூத்திர நற்குலம்” (440) என்ற
விடத்துரைத்தவை பார்க்க. (1 - பக் 546)
 
     குலம் - நலம்பெற - குலம் விளங்க. குலமானது இவர் அதனில் வந்தமையால்
நன்மை பெற என்க. நலம் - சிவநலம்.
 
     தன்மை வாயிலார் என்னும் - நற்றகுதிப்பான்மை காரணமாக வாயிலார்
என்னும் காரணப் பெயர் பெற்ற; வாயிலார் - அடைந்து நன்மை பெறுதற்கு வாயில் -
வழி - யாகவுள்ளவர் என்பது பொருள். தன்மை - நற்குணமமைந்த.
 
     தபோதனர் - தவத்தையே செல்வமாக உடையவர். வடசொற்றொடர்.
தபோதனர் - தோன்றினார் என்று இயைக்க. “தோன்றி்ற் புகழொடு தோன்றுக” (குறள்).                                                          6
           
 
4085. வாயி லாரென நீடிய மாக்குடித்
தூய மாமர பின்முதற் றோன்றியே
நாய னார்திருத் தொண்டி யைப்புறு
மேய காதல் விருப்பின் விளங்குவார்,                            7
 

வேறு
 

4086. மறவாமை யானமைந்த மனக்கோயி லுள்ளிருத்தி
யுறவாதி தனையுணரு மொளிவிளங்குச் சுடரேற்றி
இறவாத வானந்த மெனுந்திருமஞ் சனமாட்டி
யறவாணர்க் கன்பென்னு மமுதமைத்தர்ச் சனைசெய்வார்.             8
 
4087. அகமலர்ந்த வர்ச்சனையி லண்ணலார் தமைநாளு
நிகழவரு மன்பினா னிறைவழிபா டொழியாமே
திகழநெடு நாள்செய்து சிவபெருமா னடிநிழற்கீழ்ப்
புகலமைத்துத் தொழுதிருந்தார் புண்ணியமெய்த் தொண்டனார்.        9