பக்கம் எண் :

பெரியபுராணம்395


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

52. முனையடுவார் நாயனார் புராணம்

_ _ _ _ _
 

தொகை
 

“அறைக்கொண்ட வேனம்பி முனையடுவார்க் கடியேன்”

- திருத்தொண்டத் தொகை (8)
 

வகை
 

“என்று விளம்புவர் நீடூ ரதிபன் முனையடுவோன்
என்று மமரு ளழிந்தவர்க் காக்கூலி யேற்றெறிந்து
வென்ற பெருஞ்செல்வ மெல்லாங் கனகநன் மேருவென்னுங்
குன்றம் வளைத்த சிலையான் றமர்க்குக் கொடுத்தனனே”

- திருத்தொண்டர் திருவந்தாதி (62)
 

விரி
 

4089. மாறு கடிந்து மண்காத்த வளவர் பொன்னித் திருநாட்டு
நாறு விரைப்பூஞ் சோலைகளி னனைவாய் திறந்து பொழிசெழுந்தேன்
ஆறு பெருகி வெள்ளமிடு மள்ளல் வயலின் மள்ளருழும்
சேறு நறுவா சங்கமழுஞ் செல்வ நீடூர் திருநீடூர்.
 
     புராணம் :- முன் உரைத்தாங் குரைத்துக் கொள்க.
 
     தொகை :- வெட்டி வீழ்க்கும் தன்மையுடைய படைகளையேந்திய சிறந்த
ஆண்மகனாராகிய முனையடுவார் நாயனாருக்கு அடியேனாவேன். அறை - வெட்டுதல்
முதலியனவாய் அறுதலைச் செய்யும் தன்மை; வேல் - இங்கு ஆயுதப்
பொதுமையுணர்த்திற்று; நம்பி - ஆண்மக்களுட் சிறந்தவன்; முனையடுவார் -
நாயனாரது தொழில் பற்றி வந்த காரணப்பெயர். இவரது இயற்பெயர் விளங்கவில்லை;
இயற்பகையார் - எறிபத்தர் என்பன போல; தொழில் வரலாறும் பெயரும் தொகைநூல்
பேசிற்று.
 
     வகை :- நீடூர் அதிபன் - திருநீடூரில் வந்தவதரித்த தலைவர்; முனையடுவோன்
- முனையடுவார் நாயனாரெனக் காரணப் பெயர் பூண்டவர்; என்றும்....எறிந்து -
போரில் வலிமையின்றித் தோற்றவர்களுக்காக எந்நாளும் கூலி ஏற்றுக்கொண்டு சென்று
அவரது மாற்றாரை வென்று; வென்ற...கொடுத்தனனே - அவ்வாறு ஈட்டிய பெருஞ்
செல்வங்களை யெல்லாம் பொன்மலையாகிய மேரு என்னும் குன்றத்தை வளைத்த
வில்லாகவுடைய சிவபெருமானடியவருக்குக் கொடுத்தனன்; என்று விளம்புவர் - என்று
அறிந்தோர்கள் கூறுவார்கள். (ஏ - அசை).