பக்கம் எண் :

பெரியபுராணம்399

வனாராகிய சிவபெருமானது திருவருளினாலே அடையப் பெற்ற சிவலோகத்தில்
அமர்ந்து மீளாத உரிமையினைப் பொருந்தினார்; முற்ற.......முன்னுடையார் - வெற்றி
பொருந்தப் போர் செய்த காரணத்தால் முனையடுவார் என்னும் திருப்பெயரினைச்
சிறக்க வழங்கப்பெற்ற பெரியார்.
 
     (வி-ரை) இந்நிலைமை - முன் கூறிய இந்த நிலையையுடைய
திருத்தொண்டினை;
     வழி உற்ற அன்பின் செந்நெறி - வழிவழி பொருந்திய அன்பினாலாகிய
செம்மை நெறி - சிவநெறி.
 
     பிரியா உரிமை - எனறும் மீளாத தன்மை; சிவலோகத் தமர்ந்து பிரியா
உரிமை
- சாலோகப் பதவி.
 
     முற்ற உழந்த - முற்றுதல் - போர் வென்று கடத்தல்; உழத்தல் - முனைந்து
போர் புரிதல்; உழந்த - உழத்தலால்.
 
     உழந்த முனையடுவார் என்னு நாமம் - இப்பெயர் காரணத்தால் வந்தது;
முன்னுடையார். முன் - சிறப்பாக; இவரது இயற்பெயர் இஃதன்று என்பது; இதனாலே
இவரது பெயரை இப்புராணத்துள் முன்னே ஆசிரியர் கூறவில்லை.              5
 
4094. யாவ ரெனினு மிகலெறிந்தே யீச னடியார் தமக்கின்ப
மேவ வுளிக்கு முனையடுவார் விரைப்பூங் கமலக் கழல்வணங்கித்
தேவர் பெருமான் சைவநெறி விளங்கச் செங்கோன் முறைபுரியுங்
காவல் பூண்ட கழற்சிங்கர் தொண்டி னிலைமை கட்டுரைப்பாம்.            6
 
     (இ-ள்) யாவரெனினும் இகல் எறிந்தே - எதிர்ப்பவர் யாவரே யாயினும் போரில்
வெற்றி கொண்டே (அவ்வூதியங்களை); ஈசன்.....வணங்கி - இறைவனடியவர்களுக்கு
இன்பம் பொருந்த அளிக்கும் முனையடுவார் நாயனாரது மணம் பொருந்திய பூங்கமலக்
கழல்களை வணங்கி, (அத்துணையாலே); தேவர் பெருமான்....கட்டுரைப்பாம் தேவர்
தலைவராகிய சிவனது நெறியினை உலகில் விளங்கும்படி செங்கோல் அரசு புரியும்
காவல் பூண்ட கழற்சிங்க நாயனாரது திரத்தொண்டின் நிலைமையினைச்
சொல்கின்றோம்.
 
     (வி-ரை) இது இச்சரித முடிப்பும் மேல் வருஞ் சரிதத்தோற்றுவாயுமாகிய
கவிக்கூற்று,
     யாவரெனினும் - எத்தகைய வல்லமையுடையோராயினும். கூலி பேசி அமர்
ஏற்றபின், எதிர்ப்பவர், தமக்கு நட்பு உறவு முதலிய எவ்வகையால்
தொடர்புடையோராயினும் பாராது என்ற குறிப்புமாம்.
 
     இகல் எறிந்து - போர் வென்று; இகல் - போர் ; எறிதல் - வெற்றி பெறுதல்;
 
     கழல் - தானியாகு பெயராய்த் திருவடியை உணர்த்திற்கு. சிறந்த வீராதலால்
கழல் கூறினார்.
 
     யாவரெனினும்...அளிக்கும் - இச்சரிதசாரம்.
 
     சைவ நெறிவிளங்க - முறைபுரியும் - வருஞ்சரித உள்ளுறையாகிய
தோற்றுவாய். சைவம் சிறந்தோங்கும் பொருடடு அரசாட்சியை மேற் கொண்ட;
 
     செங்கோல் முறைபுரியும் காவல் - அரசாட்சி.                        6