வகை: மாதவத்தோர் தங்கள் வைப்பினுக்கு ஆரூர் மணிக்கு - மாதவத்தோர்களது சேமநிதி போல்வாரும்; திருவாரூரில் மணிபோன்றவருமாகிய நாயகருக்காக; வைத்த.......மூக்கை அரிய - வைக்கப்பட்ட மலரினை எடுத்து மோந்த தமது பட்டத்தரசியினது மூக்கினை(ச் செருத்துணையன்பர்) அரிய; பொற்கை...தடிந்தான் - மலரினைத் தொடுத்து முன் எடுத்த பிழையினை முன்னர்ச் செய்த கையினை முதலிற் சேதித்த பின்னரன்றோ (மூக்கை) அரிவது என்று அங்கு அவளது கையினைத் துணித்தார்; நாத.....கழற்சிங்கனே - பண்ணுடன் மொய்த்துக் கூடி வண்டுகள் திளைக்கும் மாலையினையணிந்த கழற்சிங்கரேயாம். |
மாதவத்தோர்.....வைப்பு - சிவபெருமான்; மணி - மணிபோன்றவர்; இறைவர்; வைப்பினுக்கு - மணிக்கு என இருவகையாகக் கூறியது, பின்னர் இச் சரிதத்தினுள் இருவகை அபராதங்களும் கழுவாய்களும் நிகழும் குறிப்பம்; வைப்பு - சேமநிதி; தேவி - மனைவி; பட்டத்தரசி; அரிய என்பதற்குச் செருத்துணையன்பர் என்ற எழுவாய் வருவிக்க; கை காதி வைத்தன்றோ அரிவது - காதுதல் - துண்டித்தல்; அரிவது - மூக்கினைக் கருவிகொண்டு வார்தல்; காதிவைத்த பின்னரன்றோ என்பது வைப்பு முறையாற் குறிக்கப்பட்டது. நாதம் - பண்பாடும் சத்தம்; ரீங்காரம் என்பர்; கோதை - மாலை. |
மரபும் தொழிலும் பெயரும் தொகைநூல் கூறிற்று; அவற்றுடன், செய்த திருத்தொண்டின் வரலாறும் வகைநூல் வகுத்தது. |
விரி: 4096. (இ-ள்) படிமிசை.....வந்தார் - உலகில் விளங்கிய பழைமையாகிய பல்லவர்களது குலத்தில் வந்தவதரித்தவர்; கடிமதில்......நீர்மை - காவல் பொருந்திய மதில்களையுடைய மூன்று நகரங்களையும் எரித்த, கங்கைதங்கிய நீண்ட சடையினையுடைய இறைவரது செம்மை பொருந்திய திருவடி மலர்களையே யல்லாமல் வேறொன்றினையும் தமது அறிவினில் பொருளாகக் குறியாத தன்மையினையுடைய; கொடி.........என்பார் - வெற்றிக் கொடியினை ஏந்திய நெடிய சேனைகளையுடைய அரசராகிய கோக்கழற்சிங்கர் என்னப்படுபவர். |
(வி-ரை) கோக்கழற்சிங்க ரென்பார் - வந்தார் - என்று கூட்டுக. என்பார் - எனப்படுவார்; படிமிசை......குலம் - முன் காலமுதல் உலகினில் விளங்க அரசாண்ட பழமைக் குலம் பல்லவர் மரபாம் என்பது; பல்லவர் - சோழரது ஒரு தொடர்புடைய பிரிவு. இவர்க்கு இடபக்கொடி உரித்து என்பர். |
கடி - காவல்; கடியப்படும் என்ற குறிப்புமாம். |
அடிமலரன்றி......நீர்மை - அன்றிக்குறியா என எதிர்மறையாற் கூறியது உறுதி குறித்தற்கு. நீர்மை - பெருங்குணமமைந்த; |
அறிவினிற் குறியா - குறிக்கோளாக மனங் கொள்ளாத - சிந்தியாத - சிறந்த சிவபத்தியுடைமை. அறியவேண்டிய மெய்ப்பொருளை அறிந்தாராதலின் எனக் காரணக்குறிப்புப்பட அறிவினில் என்றார். உலகியற் பொருள்கள் பிறவும் புலப்படினும் அவற்றை அறிவினுட் குறிக்கொளமாட்டார் என்பார் அறியா என்னாது குறியா என்றார். |
கொடி - வெற்றிக்கொடி; ஈண்டுச் சோழர்களது புலிக்கொடி; பல்லவரது இடபக் கொடியுமாம். |
கோ - பெருமன்னர் - முடிமன்னர். 1 |