4097. | காடவர் குரிசி லாராங் கழற்பெருஞ் சிங்க னார்தாம் ஆடக மேரு வில்லா ரருளினா லமரிற் சென்று கூடலர் முனைகள் சாய வடபுலங் கவர்ந்து கொண்டு நாடற நெறியில் வைக நன்னெறி வளர்க்கு நாளில், 2 |
4098. | குவலயத் தரனார் மேவுங் கோயில்கள் பலவுஞ் சென்று தவலரு மன்பிற் றாழ்ந்து தக்கமெய்த் தொண்டு செய்வார் சிவபுரி யென்ன மன்னுந் தென்றிரு வாரூ ரெய்திப் பவமறுத் தாட்கொள் வார்தங் கோயிலுட் பணியப்புக்கார். 3 |
4097. (இ-ள்) காடவர்....தாம் - காடவர் குலத்துப் பெரியாராகிய பெரிய கழற்சிங்கனார்; ஆடக.....கொண்டு - பொன்னாலாகிய மேருமலையை வில்லாகவுடைய இறைவரது திருவருளினாலே போர் முகத்துப் போந்து, பகைவர்கள் போரில் அழிய, வடபுலத்தவர்களது நாடுகளைக் கைக்கொண்டு; நாடு.....நாளில் - நாடு நீதி நெறியிலே வைகும்படி நன்னெறியினை வளர்த்து அரசாளுகின்ற நாளிலே; 2 |
4098. (இ-ள்) குவலயத்து......செய்வார் - இந்நிலவுலகத்திற் சிவபெருமான் பொருந்தி விளங்கும் திருக்கோயில்கள் பலவும் சென்று பிறழாத அன்பினால் வணங்கி உண்மைத் திருத்தொண்டுகளைச் செய்வாராகி; சிவபுரி......எய்தி - சிவநகர் என்னும்படி நிலைபெற்ற தென்றிருவாரூரினைச் சேர்ந்து; பவமறுத்து.......புக்கார் - பிறவியினை அறுத்து ஆளாகக் கொள்ளும் இறைவரது திருக்கோயிலுனுள்ளே புகுந்தனர். 3 |
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
4097. (வி-ரை) காடவர் - சோழர்களின் ஒருபிரிவாகிய மரபு. “காடவர் கோன்” என்பது முதனூல்; இம்மரபு பல்லவர்களினின்றும் கிளைத்தது என்பது “பல்லவர்குலத்து வந்தார்” என்றதனால் ஆசிரியர் அறிவித்தமை காண்க. இவர்க்கு மும்முடிவேந்தர்களுட் சேர்த்து எண்ணும் பெருமையின்று என்ற குறிப்பினால் இவரைக் குறுநிலமன்னன் ரைவருள் வைத்து வகுத்தனர் திருத்தொண்டர் புராண வரலாற்றின் ஆசிரியர் உமாபதி சிவனார். |
பெருங்கழற் சிங்கனார் என்க. கழலையணிந்த சிங்கம் போன்றார் எனக் காரணப் பெயராய் வந்தமை தெரியக் கழற் பெருஞ் சிங்கனார் என அடைய இடையில் வைத்தார். கழல் - அடைமொழி; சிங்கன் பெயர்; போரிற் சிங்கம் போன்றவன். |
அருளினால் அமரிற் சென்று - நாடு கொள்ளும் மண்ணாசையானன்றி அரச நீதி முறையிற் சேரும் அருள் கூடியதனால்; அருளினால் கவர்ந்து கொண்டு என்று மேலுங் கூட்டநின்றது; “அடிமலரன்றி வேறொன் றறிவினிற் குறியா நீர்மை” (4096) உடையாராதலின் அருள் வழியே போரில் முனைந்து நாடுகவந்தார் என்பதாம். இவர் சிறந்த சிவபத்தர் என்பது பலவகையாலும் பெறப்படும் உண்மை. |
கூடலர் - பகைவர்கள் - சாளுக்கிய அரசர் நாடு என்பது கருதப்படும். சோழர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் பல நீண்ட ஆண்டுகள் பல போர்கள் நடந்தன என்பது நாட்டு நடப்புச் சரிதத்தால் அறியவரும் உண்மை; வடபுலத்து வாதாவிப் போரினைப் பற்றிச் சிறுத்தொண்ட நாயனார் புராணத்துள்ளும் காண்க. |
அறநெறி - உலகியல் நீதி; நன்னெறி - சிவநெறி; இரண்டும் உடன் வளர. 2 |