4098. (வி-ரை) அரனார் கோயில்கள் பலவும் சென்று - சிவத்தலயாத்திரையினை மேற்கொண்டனர். இது இவர் சிறந்த சிவபத்தராதலினாலும் அரசராதலானும் மேற்கொண்ட நிலை. |
தவலுறுதல் - பிறழ்தல். |
தக்க மெய்த்தொண்டு - தக்க - தமக்குத் தகுதியான; மெய்த்தொண்டு - உண்மை நெறியினிற்கும் தொண்டு; மெய் - உடம்பு, உடலாலாகிய தொண்டு என்ற குறிப்பு முடையது. |
சிவபுரி என்ன மன்னும் - சிவலோகம் இது என்று சொல்லும்படி; திருவாரூர்ப் பிறந்தார்களெல்லாரும் பிறவியற முத்தியிற் செல்வார் என்றலால் சிவபுரி எனத் தகுவது. |
தென் - திருவாரூர் - இறைவர் எழுந்தருளிய பூங்கோயில் தென்றிருவாரூரில் உள்ளது. தென் - பிறிதினியையு நீக்கிய விசேடணம். “தென் றிருவாரூர் புக்கு எல்லை மிதித்தடியேன்” (நம்பி). |
பவம் அறுத்து ஆளவல்லார் - பிறவி வேரினை அறுத்துத், தம் அடிமையாக வைப்பவர்; புற்றிடங் கொண்டார் - தியகேசருமாம். |
பணிய - வணங்குதற் பொருட்டு. இவரது பட்டத்துத் தனித்தேவி பணிதலில் உடன் நில்லாது கோயிலின் பெருமை கண்டுவந்தனள் என்றும், இறைவர்க்காக வைத்த புதுப்பூவை மோந்து பின்னர்க் குற்றம் செய்தனள் என்றும், வருவது சரிதமாதலின், அரசர் பணியச் சென்றார் என்று, வேறாக விதந்து கூறினார். 3 |
4099. | அரசிய லாயத் தோடு மங்கணர் கோயி லுள்ளால் முரசுடைத் தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில் விரைசெறி மலர்மென் கூந்த லுரிமைமெல் லியலார் தம்முள் உரைசிறந் துயர்ந்த பட்டத் தொருதனித் தேவி மேவி, 4 |
4100. | கோயிலை வலங்கொண் டங்கட் குலவிய பெருமை யெல்லாம் சாயன்மா மயிலே போல்வா டனித்தனி கண்டு வந்து தூயமென் பள்ளித் தாமந் தொடுக்குமண் டபத்தின் பாங்கர் மேயதோர் புதுப்பூ வங்கு விழுந்ததொன் றெடுத்து மோந்தாள். 5 |
4099. (இ-ள்) அரசியல்.....போதில் - முரசுகளையுடைய சேனை மன்னர் ஐவகைக் குழுக்கள் சூழ இறைவருடைய கோயிலினுள்ளே சென்று முதல்வராகிய புற்றிடங் கொண்டாரை வணங்கும் பொழுது; விரைசெறி.......மேவி - மணமிக்க மலர்களை யணிந்த மெல்லிய கூந்தலையுடைய உரிமைத் தேவியர்களுள்ளே புகழாற் சிறந்து உயர்ந்த பட்டத்துத் தனித்தேவி வந்து; 4 |
4100. (இ-ள்) கோயிலை....கண்டுவந்து - சாயலினால் மயிலே போல்வாளாகிய அத்தேவி கோயிலை வலமாக வந்து அங்கு உள்ள பெருமைகளை யெல்லாம் தனித்தனியே பார்த்து வந்து; தூய....பாங்கர் - தூய்மையுடைய மெல்லிய பள்ளித்தாமங்களைத் தொடுப்பதற்குரிய மண்டபத்தின் பக்கத்திலே; மேயதோர் .....மோந்தாள் - பொருந்தியதோர் புதியபூ அங்கு விழுந்ததொன்றினை எடுத்து மோந்தனள். 5 |
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |