பக்கம் எண் :

பெரியபுராணம்409

     (இ-ள்) புதுமலர்........போதில் - அவ்வாறு புதுப்பூவை மோந்த பொழுதிலே;
செருத்துணை......என்று - செருத்துணையார் என்னும் தூய தொண்டனார், இந்த
மலரினைப் பூமண்டபத் திருமுற்றத்தினுள் எடுத்து மோந்தனளாவாள் என்று துணிந்து;
கதுமென.......பற்றி - விரைவாக ஓடிப்போய்க் கருவியினை எடுத்துக்கொண்டு வந்து
பற்றிக்கொண்டு; மதுமலர்.....வார்ந்தார் - தேன் பொருந்திய தாமரையில் வீற்றிருக்கும்
இலக்குமி போன்ற அவளது மூக்கினைப் பிடித்து அரிந்தனர்.
 
     (வி-ரை) செருந்துணைப் புனிதத் தொண்டர் - செருத்துணை நாயனார்;
தொண்டர் - இவர் செய்த திருத்தொண்டு மேல் இவரது புராணத்துள் விரிக்கப்படுவது.
 
     இதுமலர்.....என்று - இவள் செய்த செயலினைக் கண்டு இது சிவாபராதமாம்.
என்றும், அதனைக் கண்ட போதே தண்டிக்கத் தகுந்ததென்றும் துணிந்து; என்று -
துணிந்து; நிச்சயித்து.
 
     பற்றி - “கூந்தலைப் பிடித்து ஈர்த்துப் படியில் வீழ்த்தி” (4124) என மேல்
விரிப்பார்; இவை செருத்துணையார் செயலாதலின் ஆண்டு விரித்தல் தகுதியாம்
என்பது.
 
     மூக்கினைப் பிடித்து - ஒரு கையினால் மூக்கைப் பிடித்து;
 
     வார்ந்தார் - வார்தல் - அரிதல்
 
     மதுமலர் - தாமரை; திரு - இலக்குமி; அழகும் செல்வமும் நிறைந்த தன்மை
குறித்தது; உருவுவமம்.                                              6
4102.     வார்ந்திழி குருதி சோர மலர்க்கருங் குழலுஞ் சோரச்
சோர்ந்துவீழ்ந் தரற்றுந் தோகை மயிலெனத் துளங்கி மண்ணிற்
சேர்ந்தயர்ந் துரிமைத் தேவி புலம்பிடச், செம்பொற் புற்றில்
ஆர்ந்தபே ரொளியைக் கும்பிட் டரசரு மணைய வந்தார்.       7
 
     (இ-ள்) வார்ந்திழி .....சோர - வார்ந்ததனால் வழிகின்ற குருதி பெருகி வழியவும்,
மலர்சூடிய கரிய கூந்தலும் அவிழ்ந்து அலையவும்; சோர்ந்து...அயர்ந்து -
சோர்வடைந்து விழுந்து அரற்றுகின்ற தோகையையுடைய மயில் போல நடுங்கித்
தரையின் மேல் சேர்ந்து அயர்ந்து; அரிமைத் தேவி புலம்பிட - பட்டத்தரசி
புலம்பியிட; செம்பொற்புற்றுள்...வந்தார் - செம்பொன்னியன்ற புற்றினிடமாக நிறைந்த
பேரொளியாகிய பெருமானைக் கும்பிட்டு அரசரும் அங்கு அணையவந்தனர்.
 
     (வி-ரை) வார்ந்து - வார்ந்ததனால் என்று காரணப்பொருள் தந்தது. இழிதல் -
மிகப் பெருகி வடிதல்; குருதி சோர - இரத்தம் வீழ;
 
     குழல்சோர - கூந்தலைப்பற்றி வீழ்த்தியமையாலும் வருத்தத்தாற்
புரண்டமையாலும் கூந்தல் விரிந்து அலைந்து என்க.
 
     தோகை மயிலென - நீண்ட குழல் அலைதல் தோகை புரள்வது
போலுமென்பது; முன்னர்ச் சாயல் மாமயில் என்றது நிற்குநிலையில் உருவுவமமாய்
நின்றது. இங்குப் புரளு நிலையில் வீழ்ந்தரற்றுந் தோகைமயில் என்றார்.
இவ்விரண்டற்கும் வேறுபாடு கண்டு கொள்க. முன்னர்ப் பெருமிதம்பட மாமயில் என்ற
ஆசிரியர், இங்கு வாளா மயில் என்ற குறிப்பும் காண்க. துளங்குதல் - அசைதல்.
அசைவினால் “மயில்” என்றார்.
 
     செம்பொற் புற்றில் ஆர்ந்த பேரொளி - புற்றிடங் கொண்ட பெருமான்;
பேரொளி - இறைவர் பேர் ஒளி உருவினர் என்பது.