4104. (வி-ரை) அந்நிலை...போது - தண்டம் செய்த வீரம் எத்துணை, அத்துணை, அரசன்முன் வந்து செய்தி சொன்ன வீரம் என்க; “வீர மென்னால் விளம்பும் தகையதோ? (144); இவ்வாறாகிய தன்மையில், எறிபத்தர், தாம், புகழ்ச் சோழரது பட்டத்து யானையினையும் பாகரையும் படுத்து வீழ்த்திய செயலை அவர்பால் அறிவித்து (590 - 591)ச் சொல்லிய வீரம் இங்கு நினைவுகூர்தற்பாலது. |
அடைவே - முறையே; வரிசையிலே. உலகியல் நிலைபற்றி அரசர்பால் எழுந்த கோபம், அன்பினியலின்முன் உடனே தணிந்த தன்மையே நாயனாரது பெருமை. “நாடற நெறியில் வைக” (4097), “அடிமலரன்றி.....குறியா” (4096) தண்டந் தன்னை - தண்டத்தைச் செய்தலில். 9 |
4105. (வி-ரை) கையாம் முற்படத் துணிப்பது - துணிக்கப்படுவது எனப் பிறவினைப் பொருளில் வந்தது; முற்பட - முன்னே, உடைவாள் - உடையில் செருகியுள்ளவாள். |
தொட்டுமுன் எடுத்த - எடுத்தலால் எனக் காரணக் குறிப்புடன் நின்றது; கை தொட்டு எடுத்துத்தரப் பின் மூக்கு முகர்ந்தது ஆதலின் கையே முதற் குற்றவாளியாம்; அதனையன்றோ முன்னர்த் தண்டித்தல் தகுதி என்றபடி. |
பட்டமும்...குழலாள் - ஏனை யாவராயினும் இந்நிலையிலிருந்தால் இத்தன்மைகளில் மனம்பற்றி, உற்ற செயல் செய்யாது விடுவர் என்ற குறிப்புப்படக் கூறியது இந் நாயனாரது செயற்கருஞ் செய்கையின் மேன்மை தோன்றக் கூறியது; சிவன் பணியின் கடமையின் முன்னர் இவ்வுலக பாசபந்தத் தன்மைகள் வலியற்றொழிந்தன என்பதே அடிமைத்திறம்; இவ்வாறு அரசராற்றண்டிக்கப் பட்டமையின் அவ்வரசி சிவாபராதமாகிய குற்றத்தின் நீங்கி நற்கதியடையக் காரணமாயிற்று; இக் குறிப்புப் பெறப் “பவமறுத்தாட் கொள்வார்” (4098) என்று முன் கூறியது காண்க. உலகியலில் வன்மை போலக் காணப்படினும் இது கருணைச் செயலே என்பதாம்; “நீடுபெரும் பாவமின்றே நீங்குமென நாடி” (போர் - பல்); பட்டமும் - உம்மை உயர்வு சிறப்பு. மட்டு - தேன்; அவிழ் - விரிந்தலைந்த என்ற குறிப்பு. |
கையே - என்பதும் பாடம். 10 |
4106. | ஒருதனித் தேவி செங்கை யுடைவாளாற் றுணித்த போது பெருகிய தொண்ட ரார்ப்பின் பிறங்கொலி புவிமேற் பொங்க இருவிசும் படைய வோங்கு மிமையவ ரார்ப்பும் விம்மி மிருவிய தெய்வ வாச மலர்மழை பொழிந்த தன்றே. 11 |
(இ-ள்) ஒருதனி...போது - தமது ஒப்பற்ற தனித் தேவியின் செங்கையினை அரசர் உடைவாளினாற் றுண்டித்த போது; பெருகிய.......பொங்க - பெருகிய தொண்டர்களின் அர முழக்கமாகிய விளக்கமுடைய ஒலி நிலவுலகின் மேலே பொங்க; இருவிசும்படைய.......விம்மி - ஆகாய முழுதும் கிளம்பும் தேவர்களது முழக்கமும் கூடிப் பெருகி; மருவிய.......அன்றே - பொருந்திய தெய்வமணமுடைய கற்பகம் பூமாரியும் அப்பொழுதே பெய்தது. |
(வி-ரை) ஒரு தனித்தேவி - முன் (4099 - 4105) உரைத்தவை பார்க்க. |
தொண்டர் ஆர்ப்பின் பிறங்கொலி - அரகர முழக்கம். பொங்க - மிக்கோங்க. |
இமையவ ரார்ப்பு - தேவதுந்துபி முதலிய முழக்கு. |
அடைய - நிறைய; முழுதும்; ஓங்கும் - நிறைந்த; விம்மி - பெருகி; விம்முதல் - பெருகுதல். இவை திருத்தொண்டின் விளக்கமும் அருமைப்பாடும் கண்டபோது நிகழ்வன. |
தெய்வ வாசமலர் - மணமுள்ள மந்தார முதலிய தெய்வ மரங்களின் பூக்கள். 11 |