பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்412

4107.    அரியவத் திருத்தொண் டாற்று மரசனா ரளவில் காலம்
மருவிய வுரிமை தாங்கி மாலயற் கரியார் மன்னும்
திருவருட் சிறப்பி னாலே செய்யசே வடியி னீழற்
பெருகிய வுரிமை யாகும் பேரரு ளெய்தி னாரே.                     12
 
     (இ-ள்) அரிய........அரசனார் - அருமையாகிய அந்தத் திருத்தொண்டினை
ஆற்றிய அரசர்; அளவில் காலம்......தாங்கி - பொருந்திய அளவில்லாத நீண்ட காலம்
தமது உரிமையாகிய அரசாட்சியினையும் திருத்தொண்டினையும் தாங்கியிருந்து;
மாலயற்கு...எய்தினாரே - விட்டுணுவுக்கும் பிரமனுக்கும் அரியவராகிய இறைவரது
நிலைபெற்ற திருவருட் சிறப்பினாலே செம்மை தரும் சிவந்த திருவடியி னீழலின்கண்
பெருகிய உரிமையாகும் பெரிய திருவருள் நிறைவினுள் பொருந்தப் பெற்றனர்.
 
     (வி-ரை) அரிய அத்திருத் தொண்டு - செயற்கரும் செயலாகிய அத்
திருத்தொண்டு; சிவாபராதத்தினை மாற்றிய நிலையும், தமது உரிமைத் தனித் தேவி
என்றும் பாராது உலகப்பற்றினை அற எறிந்த நிலையும், அப்பற்றினை எறிந்து
பற்றற்றான் பற்றிய பற்றினைப் பற்றிய நிலையும் திருத்தொண்டு எனப்பட்டன.
 
     உரிமை - உரிய அரசாட்சியும் திருத்தொண்டும்; இவை இவ்வுலகநிலை;
பேல்வரும் உரிமையாகும் என்றது வீடுபேறாகிய சிவனுலக உரிமைநிலை; அந்நிலை,
மற்றற வெறிந்த அன்பர்க்கே உரியது என்றவாறு. “அடிமல ரன்றி வேறொன் றறிவினிற்
குறியா நீர்மை” என்று முன் (4096) உரைத்த இவரது தன்மை பார்க்க.
     செய்ய சேவடி - செய்ய - செம்மை தரும் பண்புடைய. சே - சிவந்த.
 
     பேரருள் - அருள் நிறைவாகிய தன்மை; பேரருளினிறைவில் ஒடுங்குதலே
வீடுபேறு எனப்படும்.                                                 12
 
     பேரர செய்தினாரே - என்பதும் பாடம்.
 
4108.    வையக நிகழக் காதன் மாதேவி தனது செய்ய
கையினைத் தடிந்த சிங்கர் கழலினை தொழுது போற்றி
யெய்திய பெருமை யன்ப ரிடங்கழி யாரென் றேத்தும்
மெய்யரு ளுடைய தொண்டர் செயலினை விளம்ப லுற்றாம்             13
 
     (இ-ள்) வையக நிகழ - உலகத்தில் விளங்க; காதல்......போற்றி - தமது
காதலுடைய பட்டத்தரசியினது கையினைத் தடிந்த சிங்கரது திருவடிகளைத் தொழுது
துதித்து; (அத்துணையாலே); எய்திய......விளம்பலுற்றாம் - பொருந்திய பெருமையுடைய
அன்பராகிய இடங்கழியார் என்று துதிக்கப்படுகின்ற மெய்யருளுடைய திருத்தொண்டர்
செய்த திருத்தொண்டினைச் சொல்லப் புகுகின்றோம்.
 
     (வி-ரை) இது கவிக்கூற்று; சரித முடிப்பும் வருஞ்சரிதத் தேற்றுவாயுமாம்.
 
     வையக.....சிங்கர் - சரிதசாரம்; சிங்கர் - இந் நாயனாரது பெயர்; முன் பெருஞ்
சிங்கனார்
(4097) என்றது காண்க. கையினைத் தடிந்த -“கைதடிந்த” என்ற
முதனூலாட்சி (தொகை).
 
     எய்திய பெருமை - பெருமை இவரைத் தேடி வந்தடைந்தது என்பது குறிப்பு;
இச் சரிதத்துள் ஓரன்பர் தாமே போந்து இவரது பண்டாரத்தின் நெல்லைக் களவு
செய்தேயும் அடியார்க் கமுதளித்த செய்தியும், அதுவேயாறாக நிகழும் செயலும்
குறிக்கக் கூறியது தெய்வக் கவிநயம்; “ஆக்க மதர்வினாய்ச் செல்லும்; (குறள்)” என்ற
கருத்துக் காண்க.