மெய் அருள் - மெய்யினது அருள்; என்றும் பொய்க்காத மெய்யாகிய சிவனருள்; 13 |
சரிதச்சுருக்கம்: கழற்சிங்க நாயனார் புராணம் :- இந் நாயனார் தொன்மையாகிய பல்லவர் குலத்தில் வந்தவர்; சிவபெருமான் றிருவடிகளையே யன்றி வேறொன்றினையும் பொருளாக அறிவினிற் குறிக்கொள்ளார்; திருவருளாலே பகைவர் மேற் சென்று அமரியற்றி வென்று வடபுல நாட்டினைத் தமதாக்கி அறநெறி வழுவாது நன்னெறி காத்து அரசாண்டனர். |
சிவதலங்கள் பலவற்றிலும் சென்று வணங்கித் தகும் திருத்தொண்டு செய்வாராயினர். |
திருவாரூரில் வந்து திருக்கோயிலினுட் சென்று வணங்கினார். அப்போது இவரது பட்டத்தரசியார் கோயிலை வலம்வந்து அங்குள்ள பெருமைகளைக் கண்டு சென்றவர் திருப்பூமண்டபத்தில் அருகு விழுந்ததொரு புதுப் பூவை எடுத்து மோந்தனர். அது கண்ட செருத்துணை யன்பர் அது பெருஞ் சிவாபராதமா மென்பது துணிந்து அவளைக் கூந்தலைப் பற்றித் தரையில் வீழ்த்தி அவளது மூக்கினைக் கருவி கொண்டு வார்ந்தனர். அவர் குருதி சோரத் தரையில் வருந்தினர். அப்போது அணுக வந்த அரசனார் இந்த வெவ்வினை அஞ்சாதே யார் செய்தார் என்று வினவச், செருத்துணையார் வந்து, நிகழ்ந்த செயலைக் கூறினார். அரசர், முதலிற் பூவைத் தொட்டு எடுத்த கைதான் முன்னே தண்டிக்கத் தக்கது; அதுவே அடைவு; என்று கூறித் தமது உடைவாளை உருவி அவரது செங்கையினை வளையொடு துணித்தனர்; அரவொலியும் வானதுந்துபி முழக்கமும் மிக்கன; வானவர் பூமழை பெய்தனர். |
அரசர் நெடுங்காலம் சிவன் அன்புடன் கூடிய அரசுரிமை தாங்கியிருந்து சிவனடி நீழலின் உரிமையாகும் பேரருளினை அடைந்தனர். |
கற்பனை :- (1) சிவன்றிருவடிமலரன்றி வேறொன்றினையும் பொருளாக அறிவினிற் குறியா நீர்மையே பற்றற்ற பெரியோர் தன்மையாம். |
(2) அரசர் அமரிற் சேறலும் நாடு கவர்தலும் முதலாகிய உலகியற் செயல்களையும் திருவருளை முன்னிட்டே செய்தல் அவர்களது அடியாராந் தன்மையினாலாவது. |
(3) சிவன் கோயில்கள் சென்று வழிபடுதலும், தமக்கேற்ற பணி செய்தலும் அரசரும் செய்யத் தக்கன. அவ்வாறு செய்தல் தமக்கே யன்றித் தம் கீழ்வாழும் உலகினரையும் அன்பு நெறியின் வழிகாட்டி யுய்விப்பதாகும். |
(4) சிவாலயத்துள் சிவனுக்காக உள்ள பூவை மோத்தலும், அவ்வாறே சிவனுக்குரிய பிற பண்டங்களையும் தாம் நுகர எண்ணுதலும் பாவமும் சிவாபராதமுமாம். |
(5) சிவாபராதம் நிகழக் கண்டபோது அது செய்தார் யாவரே யாயினும் உரியபடி ஒறுத்துத் தண்டம் செய்தல் கடன். |
(6) தமது உரிமைப் பட்டத்தரசி யென்றும் பாராது குற்றத்துக் கேற்ற அடைவே தண்டம் விதித்த சிங்கனார் தன்மை சிவன் பற்றன்றி வேறுபற்றில்லா நிலைமையினைக் காட்டுவது. |
(7) குற்றம் செய்தாருக்குத் தண்டம் இயற்றும் வழிக் குற்றத்தின் அடைவிலேயும், போதிய நிலையிலேயும் தண்டித்தல் அரசர் கடமை. |
தலவிசேடம் - திருவாரூர் :- முன் உரைக்கப்பட்டது. |
கழற்சிங்க நாயனார் புராணம் முற்றிற்று. |