பக்கம் எண் :

பெரியபுராணம்419

     புரியும் வினை தெரியாது - தாம் செய்ய எண்ணிய தொழில் திருட்டாகும்
என்ற இழிபினை யறியாமல். இன்னது செய்வது என்ற வழியறியாமல் என்றலுமாம்.
ஒருவருக்கு ஒருபொருள்மேல் பெருவிருப்பு மூண்டிடின் அதுபற்றிச் செய்யும்
வினையின் ஏற்றத்தாழ்வு நாடாது செய்வர் என்பது உலகியல் உண்மை; பெருவிருப்பும்
பெருஞ்சினமும் அறிவினை அழிக்கும் தன்மையனவாம்; ஆதலின் “காய்த லுவத்த
லகற்றி யொருபொருட்கண், ஆய்த லறிவுடையார்க் கண்ணதே” என்றனர் பிற்காலத்து
நீதிநூலார்.                                                        6
 
     4115. (வி-ரை) பண்டாரம் - பொக்கிசம் - நிதிகள் சேமிக்குமிடம்; செல்லும்
பெருஞ்செல்வத்துள் சேர்த்தெண்ணப்படும். 4117 - பார்க்க.
 
     அந்நாட்டின் நெற்கூட்டின் - அந்நாட்டின் இறைப்பொருளாய் வந்த
நெற்கூட்டின்; அரசரின் கீழ்ப் பல நாடுகளிருத்தலின் அவ்வந்நாட்டு இறைப்பொருள்
நெற்கூடுகள் அங்கங்கும் அமைக்கப்படுவன என்பது. நிலை - வரிசை.
 
     புரிபலவாம் நிலைக்கொட்டகாரம் - மதில் வகையால் பற்பலபுரிகளாக அரண்
அமைக்கப்பட்ட கொட்டகாரம்; புரி - போர்கள்; கொட்டகாரம் - பண்டங்கள்
சேமிக்கும்படி அமைந்த பெரு வீடு.
 
     புரை செறி நள் இருள் - மிக்க நள்ளிருள் இடை.
 
     முரசெறி காவலர் - யாமத்தின் அளவுஇரவு கடிகை தெரிப்ப இரவு முழுதும்
முறைப்படுத்தி முரசெறிந்து காவல்புரியும் காவலாளர் - (Night guards) ; முரசு -
நாழிகைப்பறை;
 
4116. மெய்த்தவரைக் கண்டிருக்கும் வேன்மன்னர் வினவுதலும்
“அத்தனடி யாரையா னமுதுசெய்விப் பதுமுட்ட
இத்தகைமை செய்தே” னென் றியம்புதலு மிகவிரங்கிப்
பத்தரைவிட் “டிவரன்றோ பண்டார மெனக் ”கென்பார்,                8
 
4117. நிறையழிந்த வுள்ளத்தால் “நெற்பண்டா ரமுமன்றிக்
குறைவினிதிப் பண்டார மானவெலாங் கொள்ளைமுகந்
திறைவனடி யார்கவர்ந்து கொள்க” வென வெம்மருங்கும்
பறையறையப் பண்ணுவித்தார் படைத்தநிதிப் பயன்கொள்வார்.          9
 

     4116. (இ-ள்) மெய்த்தவரை.....வினவுதலும் - காவலாளர் பிடித்துவந்த அந்த
மெய்யடியவரை அரச கொலுவீற் றிருக்கும் வேலேந்திய அரசர் கண்டு வினவுதலும்;
அத்தன்.....இயம்புதலும் - இறைவனது அடியவர்களை யான் அமுது செய்விக்கும்
தொழில் முட்டுப்பட்டமையாலே இவ்வாறு செய்தேன் என்று அவர் சொல்லுதலும்; மிக
இரங்கி.....என்பார் - அதற்கு மிகவும் இரங்கி, அடியவரைக் காவலினின்று விடுவித்து,
இவரன்றோ எனக்குப் பொக்கிசமாவார் என்று சொல்வாராகி,                8
            
 

     4117. (இ-ள்) நிறையழிந்த உள்ளத்தால் - நிலையழிந்த உள்ளத்தினாலே;
நெற்பண்டாரமுமன்றி.......கொள்க என - நெற்பண்டாரம் மட்டுமே யன்றிக்
குறைவில்லாத நிதிகளின் பொக்கிசங்களாகிய எல்லாவற்றையும் கொள்ளையாக முகந்து
இறைவனடியார்கள் கவர்ந்து கொள்க என்று; எம்மருங்கும்.....பயன் கொள்வார் -
எல்லாப்