அரசாட்சியின் குறிக்கோள் என்பது கருத்து. முன் (4113) உரைத்தவை பார்க்க. நிறை - உறுதி; பொருட்பற்று நீங்கிய எண்க. |
நெற்பண்டாரமுமன்றிக் குறைவினிதிப் பண்டாரமும் - பண்டாரம் - (பொக்கிசம்) நெல்லும், பொன் - மணி முதலாயினவும், என இருவகையினது; இவ்விருவகையினையும்; எலாம் - எல்லாவகையும்; முற்றும்மை தொக்கது. |
கொள்ளை முகந்து - கொள்ளை - எண்ணில்லாமற் கொள்ளப்படுவது ; அளவு படாதபடி; முகந்து என்பதும் இக்குறிப்புத்தருவது; வாரிக்கொண்டு. கொள் - பகுதி. |
பறையறையப் பண்ணுவித்தார் - பறைசாற்றுவித்தனர்; பறைசாற்றுதலினாலும் வாக்கினால் செரல்லுதலினாலும் இச் செய்தியினை அடியார் தெரியும்படி; |
நெற்...பண்ணுவித்தார் - “திங்கட் சடையான் றமரதென் செல்வ மெனப் பறை போக்கும்” என்பது வகைநூல் ( திருவந் - 65). |
படைத்த - பெற்ற - ஈட்டிய; சேமித்த. |
நிதிப்பயன் - நிதிபடைத்த பயனாவது சிவனுக்கும் அடியாருக்கும் ஆக்குதலாம் என்பது வேத சிவாகமங்களின் துணிபு; முன் பல இடத்தும் உரைத்தவை யெல்லாம் காண்க. குறைவில்நிதி - படைந்தநிதி - முன்னோர் காலமுதல் ஈட்டிவைத்த பெரும்பொருள் என்பது குறிப்பு. |
கொள்வார் - கொள்வாராய்; கொள்வார் - பண்ணுவித்தார் என்று கூட்டுக. வினையாலணையும் பெயராகக் கொண்டு கொள்வாராகிய நாயனார் பண்ணுவித்தார் என்றலுமாம். 9 |
4118. | எண்ணில்பெரும் பண்டார மீசனடி யார்கொள்ள உண்ணிறைந்த வன்பினா லுறுகொள்ளை மிகவூட்டித் தண்ணளியா னெடுங்காலந் திருநீற்றி னெறிதழைப்ப மண்ணிலருள் புரிந்திறைவர் மலரடியி னிழல்சேர்ந்தார். 10 |
(இ-ள்) எண்ணில்...மிகவூட்டி - அளவில்லாத பெரிய சேமநிதிகளை யெல்லாம் இறைவனடியார்கள் கவர்ந்து கொள்ளும்படி மனத்தின் உள்ளே நிறைந்த அன்பினாலே உற்ற கொள்கை நிகழ மிகவும் செய்வித்து; தண் அளியால்....அருள் புரிந்து - குளிர்ந்த அளியினால் நீண்டகாலம் திருநீற்றின் நெறி தழைக்கும்படி உலகில் அருள்புரிந்து; இறைவர்.....சேர்ந்தார் - சிவபெருமானது திருவடி நீழலினை அடைந்தனர். |
(வி-ரை) எண்ணில்......ஊட்டி - பறைசாற்றுவித்த செயலினை முன் கூறினார்; அவ்வாறு பறைசாற்றக் கேட்டுச் சிவனடியார்கள் அனேகராய் வந்தனர்; பறை சாற்றியவாறே தமது பண்டாரங்களை யெல்லாம் திறந்துவிட்டு எல்லா நிதிகளையும் அவர்கள் கொள்ளைபெற முகந்து கொள்ளச் செய்தனர்; இவ்வாறு நிகழ்ந்தது உண்ணிறைந்த அன்பினாலாகியது என்பதாம். |
தண் அளியால்.......அருள் புரிந்து - அளி - கருணை; அருள் புரிந்து - உலகினர் மேல்வைத்த கருணையினாலே திருநீற்றின் நெறிதழைக்கும்படி அரசுசெய்து; திருநீற்றின் நெறி - சைவநெறி; இன் - இனிய; அரசாட்சியினை அருள் புரிந்து என்றது இறைவர் காத்தல்போல இவர் அரச நீதியினை உயிர்கள் உய்திபெறும் நோக்கத்துடன் இயற்றினர் என்பதாம். 10 |