பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்422

4119. மைதழையு மணிமிடற்றார் வழித்தொண்டின் வழிபாட்டில்
எய்துபெருஞ் சிறப்புடைய விடங்கழியார் கழல்வணங்கி
மெய்தருவார் நெறியன்றி வேறொன்று மேலறியாச்
செய்தவராஞ் செருத்துணையார் திருத்தொண்டின் செயன்மொழிவாம்.  11
 
     (இ-ள்) மைதழையும்.....வணங்கி - விடம் வளர்தற்கிடமாகிய அழகிய
கண்டத்தினையுடைய இறைவரது வழிவழி வரும் திருத்தொண்டின் வழிபாட்டிலே
பொருந்திய பெருஞ் சிறப்பினையுடைய இடங்கழி நாயனாரது திருவடிகளை வணங்கி
அத்துணைகொண்டு; மெய்தருவார்........செயல் மொழிவாம் - சத்தாந் தன்மை
தருவாராகிய சிவபெருமானது நெறியினையன்றி வேறொன்றினையும் மேல் என்றறியாத
செய்தவராகிய செருத்துணையாரது திருத்தொண்டின் செய்கையினைச் சொல்வோம்.
 
     (வி-ரை) சரித முடிபும் வருஞ்சரிதத் தோற்றுவாயுமாம்; கவிக்கூற்று.
 
     வழித்தொண்டின் வழிபாட்டின் - சிறப்பு - அடியார்கள் அரனை வழிபட்டுத்
தொண்டு செய்ய, இவர் அவ்வடியார்களின் வழிபாட்டில் நின்று அதனாற் சிறப்புப்
பெற்றனர் என்று சரிதசாரங் கூறியபடி 4421. பார்க்க. வழிபாட்டின் எய்தும் -
வழிபாட்டினாலே அடைந்த; 5- ம் வேற்றுமை ஏதுப்பொருட்டு.
 
     மெய்தருவார் - மெய் - சத்தாந்தன்மை; மெய்தருவார் - சிவபெருமான்; தமது
சிவமாந்தன்மையினை அடியார்களுக்குச் செய்பவர்; “தான்செய்யுந் தன்மைகளும்
ஆக்கியிடு மன்பர்க் கவன்” (களிறு - 69); நெறி - சைவநெறி;
 
     வேறொன்றும் மேல் அறியா - சிவநெறியின் கடமை செய்வதையன்றி,
வேறொன்றினையும் மேலாகிய பொருளென்று அறிவினிற் குறியா நீர்மை
செருத்துணையார்; சரிதக் குறிப்பாகிய தோற்றுவாயாதல் கண்டு கொள்க. மை -
கருமை;                                                       11
 

     சரிதச்சுருக்கம்: இடங்கழிநாயனார் புராணம் :- கோனாட்டில்
கொடும்பாளூரில் வேளிர்
குலத்து அரசளித்துப் பொன்னம்பலது முகட்டினைக்
கொங்கிற் பொன்னால் அணிந்த ஆதித்தச் சோழரது குலமுதல்வராகிய இடங்கழியார்
என்னும் மன்னவர் சிவனடித் தொண்டினிற் சிறந்திருந்தனர். சிவனடியார்
வேண்டியவற்றைச் செய்வார்.
     அவ்வூரில் சிவனடியார்க்கமுதூட்டும் பணிபூண்ட ஒரு அடியவர் இருந்தார்.
அவருக்கு அடியார்க்கு அமுதூட்டுதற்குரிய பண்டங்கள் ஒரு எவ்வகையாலும்
பெறாமையால் பணிமுட்டும்படி நேர்ந்தது. அதன் பொருட்டு அவர் அரசனது காவல்
மிகுந்த நெற்கொட்டகாரத்தில் நள் இரவிற் சென்று நெல்முகந்தனர்; அவரை முரசெறி
காவலாளர் கண்டுபிடித்து அரசன்முன் கொண்டுவந்தனர்; அரசன் கேட்க, அவர்
அடியார்க் கமுதூட்டும் செயல் முட்டியதனால் இது செய்தேன் என்றனர். அரசர், மிக
இரங்கி அவரை விடுவித்து இவரன்றோ எனக்குப் பண்டாரம் என்று கூறி, எனது
செல்வமுழுதும் அடியார்களுடையதேயாம்; நெற்பண்டார மட்டுமேயன்றி
நிதிப்பண்டாரமானவெல்லாம் அடியார்கள் கொள்ளை முகந்து கொள்க என்று எங்கும்
பறைசாற்றுவித்து அவ்வாறே கொள்ளை யூட்டினர்.
 

     இவ்வாறு தண்ணளியினால் திருநீற்றின் நெறிதழைப்ப நெடுங்காலம்
அருள்புரிந்திருந்து சிவனடி நீழல் சேர்ந்தனர்.
 
     கற்பனை :- (1) குயில்கள் பயிலும் மாஞ்சோலைகளாற் சூழப்படுதலும், மலர்
வாவிகளிருத்தலும் நாட்டின் வளங்குறிப்பன.