பக்கம் எண் :

பெரியபுராணம்425

    கழி - கடற்கழி; மொழி - புகழ்ந்து சொல்லப்பட்ட; குமிழ் - குமிழம்பூ; மூக்கிற்
குவமை கூறப்படும் பொருள்களுள் ஒன்று; “குருவளர் பூங்குமிழ்” (கோவை); மருகல்
நாட்டு
- வேறு தஞ்சையும் உள்ளமையால் பிறிதினியைபு நீக்கிய விசேடணம்;
 

     ஊரும் பெயரும் தொகைநூ லுணர்த்திற்று; அவற்றுடன், செய்த தொண்டின்
றிறமும் வகைநூல் வகுத்தது.
 
     விரி :- 4120. (இ-ள்) தெள்ளும்........தஞ்சாவூர் - தெளிந்த அலைகள்
மதகுகள்தோறும் சேல்மீன்களையும் கயல்மீன்களையும் செழுமணிகளையும் தள்ளுகின்ற
காவிரிபாயும் நீர்நாடு என்கின்ற சோழநாட்டிலே மருகல் நாட்டில் உள்ள தஞ்சாவூர்
என்பது; உள்ளும்....பதியாம் - அகமும் புறமும் குலமரபின் வரும் ஒழுக்கத்தினின்றும்
வழுவாத ஒருமையாகிய நெறியினைக் கொள்ளும் இயல்பினையுடைய பழங்குடி முதன்
மக்கள் நிறைந்த செல்வம் பொருந்திய பெருமைப் பதியாகும்.
 
     (வி-ரை) உள்ளும்.....வழுவா - தத்தமக்குள்ளேயும் புற உலகியல்
நிலையிலேயும் தத்தமது குலமரபின் வழிவழிவந்த ஒழுக்கத்தினின்றும் பிறழாத, இதனை,
உள்ளும் புறம்பும் குலவொழுக்கம் வழுவி ஒழுகுவதே முறை என்னும் ஒழுக்கமுடைய
இந்நாளின் மாக்களினத்துடன் ஒப்பிட்டு உண்மை உயர்வு தாழ்வு காண்க.
 
     குலப்பதி - விளக்கமுடைய பதி; பெருமையுடைய ஊர். குலம் - உயர்ச்சி;
 
     தள்ளும் - மதகில் சிறியவழியாதலின் நீர் வேகமாகச் செல்வதால் தள்ளும்
என்றார்.
 
     சேலும் கயலும் செழுமணியும் - இரண்டனுருபுகள் விரிக்க.
 
     தெள்ளும் திரை - தெள்ளுதல் - தெளிதல்.
 
     மருகல் நாடு - சோழநாட்டின் உட்பிரிவுகளுளொன்று. தலவிசேடம் பார்க்க.
 
     செம்பொன்றரளஞ் செழுமணியும் - என்பதும் பாடம்.                    1
 
4120. சீரின் விளங்கு மப்பதியிற் றிருந்து வேளாண் குடிமுதல்வர்
நீரின் மலிந்த செய்யசடை நீற்றர் கூற்றி னெஞ்சிடித்த
வேரி மலர்ந்த பூங்கழல்சூழ் மெய்யன் புடைய சைவரெனப்
பாரி னிகழ்ந்த செருத்துணையார் பரவுந் தொண்டி னெறிநின்றார்.            2
 
     (இ-ள்) சீரின்......முதல்வர் - சிறப்புடன் விளங்கும் அப்பதியில் திருந்துகின்ற
வேளாளர் குடியின் முதல்வர்; நீரின்....சைவரென - கங்கை நிறைந்த சிவந்த
சடையினையும் திருநீற்றினையும் உடைய இறைவரது இயமனை மார்பி லுதைத்த தேன்
பொருந்திய பூங்கழல்களையே எண்ணுகின்ற மெய்யன்புடையசைவர் என்று;
பாரின்.....நெறிநின்றார் - உலகில் விளங்கிய செருத்துணையாரென்பார் போற்றுகின்ற
திருத்தொண்டின் நெறியிலே ஒழுகிவந்தனர்.
 
     (வி-ரை) திருந்து - உலகம் திருந்துதற் கேதுவாகிய; நீற்றர் - திருநீற்றின்
முதல்வர்; சிவபெருமான்.
 
     நெஞ்சிடித்த - மார்பில் உதைத்த; “காலனை யுயிர்செக வுதைகொண்ட மலர்ந்த
பாதங்கள்” (திருவிசைப்பா.) இடித்த - தகரும்படி உதைத்தருளிய;
 
     சைவர் - சிவசம்பந்த முடையவராய்ச் சிவநெறி வாழ்பவர். சைவர் - என
வழங்கும் உலக வழக்குக்குப் பொருள் விரித்த அரிய ஆட்சி.
 
     சூழ்தல் - சிந்தித்தல். வேரிமலர்ந்த - என்பதும் பாடம்.                  2