4122. | ஆன வன்பர் திருவாரூ ராழித் தேர்வித் தகர்கோயில் ஞான முனிவ ரிமையவர்க ணெருங்கு நலஞ்சேர் முன்றினிலுள் மான நிலவு திருப்பணிகள் செய்து காலங் களின் வணங்கிக் கூன லிளவெண் பிறைமுடியார் தொண்டு பொலியக் குலவுநாள், 3 |
4123. | உலகு நிகழ்ந்த பல்லவர்கோச் சிங்க ருரிமைப் பெருந்தேவி நிலவு திருப்பூ மண்டபத்து மருங்கு நீங்கிக் கிடந்ததொரு மலரை யெடுத்து மோந்ததற்கு வந்த பொறாமை வழித்தொண்டர் இலகு சுடர்வாய்க் கருவியெடுத் தெழுந்த வேகத் தாலெய்தி, 4 |
4124. | கடிது முற்றி மற்றவடன் கருமென் கூந்தல் பிடித்தீர்த்துப் படியில் வீழ்த்தி மணிமூக்கைப் பற்றிப் “பரமர் செய்யசடை முடியி லேறுந் திருப்பூமண் டபத்து மலர்மோந் திடுமூக்கைத் தடிவ னென்று கருவியினா லரிந்தார் தலைமைத் தனித்தொண்டர். 5 |
4122. (இ-ள்) ஆன அன்பர் - இவ்வாறான அன்பர்; திருவாரூர்......முன்றிலினுள் - திருவாரூரில் ஆழித்தேர் வித்தகராகிய இறைவரது திருக்கோயிலினுள்ளே ஞான முனிவர்களும் தேவர்களும் நெருங்கியிருக்கின்ற நன்மை பொருந்திய திருமுன்றிலினுள்ளே; மான நிலவு.....வணங்கி - பெருமையுடைய திருப்பணிகளைச் செய்து உரிய காலங்களில் வழிபட்டு வணங்கி; கூனல்.....நாள் - வளைந்த இளையபிறையினைச் சூடிய முடியினை உடைய இறைவரது திருத்தொண்டு விளங்க விளங்கியிருக்கும் நாளிலே, 3 |
4123. (இ-ள்) உலகு......பெருந்தேவி - உலகில் அரசுபுரியும் பல்லவர் கோச்சிங்கருடைய பட்டத்துரிமையுடைய பெருந்தேவி; நிலவு....மோந்தற்கு - விளங்கும் திருப்பூமண்டபத்தில் பக்கத்தில் நீங்கிக் கிடந்ததொரு புதுப்பூவை எடுத்து மோந்ததற்காக; பொறாமை - மனம் பொறுக்கமாட்டாமையாலே; வழித் தொண்டர்....வேகத்தால் - அரனெறி வழிவழி வரும் திருத்தொண்டராதலின் விளங்கும் ஒளி பொருந்திய கூரிய வாயினையுடைய கருவியினை எடுத்து எழுந்த வேகத்தோடும்; வந்து எய்தி - வந்து சேர்ந்து, 4 |
4124. (இ-ள்) கடிது.....பற்றி - விரைவிற் சேர்ந்து மற்று அவளது கரிய மெல்லிய கூந்தலைப் பிடித்து இழுத்து நிலத்தில் வீழ்த்தி அழகிய மூக்கினைப் பிடித்து; பரமர்......என்று - இறைவரது சிவந்த சடை முடியின் மேல் அணியும் திருப்பூமண்ட பத்துள் மலரினை எடுத்து மோந்த அபராதம் செய்த மூக்கைத் தண்டிப்பேன் என்று; கருவியினால்....தனித்தொண்டர் - கருவியினாலே தலைமைபூண்ட ஒப்பற்ற தொண்டர் அரிந்தனர். 5 |
இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
4122. (வி-ரை) திருவாருர் ஆழித்தேர் வித்தகர் - ஆழித்தேர் - திரவாரூரில் இறைவரது பெருந்திருத்தேரின் பெயர். ஆழி - உருளை (சக்கரம்); வட்டம்; “திருவாரூர்த் தேரழகு” என்ற பழமொழியாக விளங்க வழக்கும் சிறப்புடையது; “ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே” (தேவா - அரசு). |
ஞானமுனிவர்.......முன்றிலினுள் - திருவாரூர்ப்பூங்கோயிலினுள்; தேவாசிரியமண்டபத்தின் முன் “மாவா ழகலத்து மான்முதல் வானவர், ஓவா தென்றும் நிறைந்துறைந் |