உலகத்தில் நிகழ்ந்து விளங்கும்படி செய்து; உய்ய......எய்தினார் உயிர்கள் உய்யும்படி செம்பொன் அம்பலத்தில் எடுத்த திருவடியின் நீழலில் அடைந்தே இறவாத இன்பத் தினை அடைந்தனர். |
(வி-ரை) அடுத்த - தமக்குத் திருவருளால் நேர்பட்ட; திருத்தொண்டு - இச் சரித நிகழ்ச்சி; உலகறிய.....அனையவர் - இத்தொண்டு செய்தற்குரிய ஆண்மை குறித்தது; ஏறு - ஆண்சிங்கம். |
தாம மலர் இதழி - மாலைபோற் சரமாகப் பூக்கும் சரக்கொன்றை; தாமமாகக் கட்டப்பட்ட கொன்றை மாலை என்றலுமாம். |
நிகழச்செய்தலாவது - ஒழுகலாற்றில் விளங்கி வழங்கச் செய்தல். |
இறவா இன்பம் - எஞ்ஞான்றும் கெடாத வீட்டின்பம். “இறவாத வின்ப அன்பு” (1776). 6 |
4126. | செங்கண் விடையார் திருமுன்றில் விழுந்த திருப்பள் ளித்தாமம் அங்க ணெடுத்து மோந்தவதற் கரச ருரிமைப் பெருந்தேவி துங்க மணிமூக் கரிந்தசெருத் துணையார் தூய கழலிறைஞ்சி எங்கு நிகழ்ந்த புகழ்ந்துணையா ருரிமை யடிமை யெடுத்துரைப்பாம். |
(இ-ள்) செங்கண்.....அதற்கு - சிவந்த கண்ணையுடைய இடபத்தினையுடைய இறைவரது திருமுற்றத்தில் விழுந்த திருப்பள்ளித்தாமத்தினை அங்கு எடுத்து மோந்ததற்காக; அரசருரிமைப் பெருந்தேவி.....இறைஞ்சி - அரசரது பட்டத்து உரிமையுடைய பெருந்தேவியாரது பெருமையுடைய அழகிய மூக்கினை அரிந்த செருத்துணையாரது தூய்மையுடைய கழல்களை வணங்கி, (அத்துணை கொண்டு); எங்கும்...உரைப்பாம் - எங்கும் விளங்கிய புகழ்த்துணையாரது உரிமையாகிய அடிமைத் திறத்தின் செயலை எடுத்துச் சொல்லப் புகுவோம். |
(வி-ரை) சரித முடிப்பும் மேல்வருஞ் சரதத் தோற்றுவாயுமாகிய கவிக் கூற்று. |
செங்கண்...அரிந்த - இச்சரித சாரம்; துங்கம் - பெருமை; உயர்வு. |
எங்கு நிகழ்ந்த - இவரது புகழே அன்றி அடிமைத் திறமாகிய அகம்படித்தொண்டும் எவ்விடத்தும் நிகழ்தற்குரியது. உரிமையடிமை - இத்தொண்டு சிவவேதியர்க்கே யுரியது என்பது. 7 |
சரிதச் சுருக்கம்; செருத்துணை நாயனார் புராணம்;- சோழநாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள தஞ்சாவூரிலே வேளாண்குடி முதல்வராய்ச் சிவ பிரான்றிருவடியில் மெய்யன்புடையராய்ச் செருத்துணையார் என்ற ஒரு சிறந்த அடியவர் இருந்தார். அவர் திருவாரூரில் இறைவரது திருக்கோயிலில் திருமுன்றினில் விளங்கும் பணிகளைச் செய்து காலந்தோறும் இறைவரை வழிபட்டு வந்தார். |
ஒருநாள் அரசரது பட்டத்து உரிமைத் தேவி அங்குப் பூமண்டபத்தின் பக்கம் விழுந்த புதுப்பூவை எடுத்து மோந்ததனைக் கண்டனர். அவ்வபராதத்துக்காக வேகத்தால் சென்று கருவிகொண்டு அவளது மூக்கினை அரிந்தனர். இவர், திருத்தொண்டு உலகில் விளங்கச்செய்திருந்து சிவனடி நீழல் சேர்ந்து இன்பமுற்றனர். |