| வருந்தியே தளர்வெய்தி - “கைசோர்ந்து” வகைநூல்; குடம் தாங்கமாட்டாமை - வீழ்ந்து - “கலசம் விழ” வகைநூல். |
4130. (வி-ரை) சங்கரன் - இன்பஞ் செய்பவன்; சிவபெருமான்; இப்பெயராற் கூறியது இங்கு இன்பவருள் செய்யும் நிலைக் குறிப்பு. |
அருளாலோர் துயில்வந்து தமையடைய - சிவபூசை செய்தற்கண் துயில் சோர்வு சோம்பு முதலியன வரத்தகாது; வரின் அது கழுவாய் செய்யத்தக்கது என்பது சிவாகமவிதி; ஆயின் இங்கு வந்த துயில் அதன்பாற்படா தென்பது குறிக்க அருளால் - வந்து - அடைய என்றார். பூசைக்காகக் குளிக்க நின்ற நமிநந்தியடிகள் பாலும் (1891), திருப்புகலூரில் வேண்டிய பொன் பெறாத நிலையில் திருமுன்றிலில் ஒருபாலிருந்த நம்பிகள் பாலும் (3202) உறக்கம் அருளால் வந்த நிலைகள் இங்கு நினைவுகூர்தற்பாலன. |
அங்கணன் - அடியாரிடர் காணமாட்டாது அருள்பவர். |
அருந்துணவு மங்கியநாள் கழிவளவும் - உணவுப் பண்டங்கள் குறைவுபடும் வற்காலம் நீங்குமளவும்; திருவீழிமிழலையில் வறுமைக்காலம் வரவே, எந்தம் பெருமக்களாகி ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய அரசுக ளிருவருக்கும் நித்தம் ஒரோர் காசு, அவ்வறுமைக்காலம் நீங்கி மழைபெய்து உணவுப்பண்டம் செழிக்குமளவும் இறைவர் தந்தருளிய செயல் காண்க. வறுமைக் காலம் உயிர்களின் கன்மானுபவத்தின் பொருட்டும், அக்கன்மத் தொகுதி கூடிய நிலை கழியுமளவும் வரத் தருவது இறைவரருள். ஆனால் அக்கன்மப் பயன்களின் துன்பம் சிவச்சார்புடையாரைச் சாரா என்பதும், அதற்கு இறைவர் தாமே தீர்வு அருளுவர் என்பதும் உண்மைநூற்றுணிபுகள். |
இங்கு நாம் உனக்கு நித்தமும் ஒரு காசு வைப்பது - என்க; வைப்பது ஆகும் - வைப்போம் என்க. காசு - பொற்காசு. 4 |
| 4131. | பெற்றமுகந் தேறுவார் பீடத்தின் கீழொருகா சற்றமடங் கிடவளிப்ப வன்பருமற் றதுகைக்கொண் டுற்றபெரும் பசியதனா லுணங்குமுடம் புடனுவந்து முற்றுணர்வு தலைநிரம்ப முகமலர்ந்து களிகூர்ந்தார். 5 |
(இ-ள்) பெற்றம்.....அளிப்ப - இடபத்தின் மீத மகிழ்தெழுந்தருளும் இறைவர், பீடத்தின்கீழே துன்பம் நீங்கிட ஒரு பொற்காசு அளித்திட; அன்பரும் மற்றது கைக்கொண்டு -அன்பரும் அதனைக் கையில் எடுத்துக் கொண்டு; உற்ற......உவந்து - பொருந்திய பெரும் பசியினாலே வாடிய உடம்புடன் (கூடிய அளவு) மகிழ்ந்து; முற்றுணர்வு......கூர்ந்தார் - பேருணர்வுகூடி நிரம்ப முகமலர்ச்சி பெற்று மகிழ்சிறந்தார். |
(வி-ரை) அளிப்ப - கனவின்கண் உணர்த்தியவாறே அளித்தருள; அளித்தல் - அளியுடன் கொடுத்தல். அற்றம் - சோர்வு; மெலிவு. |
உற்ற.......உவந்து - மகிழ்வதற்குத்தானும் வலியின்றி வாடிய கருவிகரணங்களுடன் கூடியிருந்த நிலையில் கூடிய அளவான் மகிழ்ந்து என்பது. |
முற்றுணர்வு தலைநிரம்ப - உயிர்களின் கன்ம நிலையும், இறைவரது அருணிலையும், பற்றற்று அவரைப் பற்றியபோது அவ்வருள் வெளிப்படும் நிலையும் முதலிய தத்துவ உண்மை உணர்வுகள் முதிர்ந்த நிலை முற்றுணர்வு எனப்பட்டது; பேருணர்ச்சி; தலை நிரம்புதல் - வெளிப்படப் புலனாகுதல்; மிகுதியுமுண்டாதல். |