தோள்களையுடைய ஒப்பற்றவரும் தலைவருமாகிய மணமுடைய மலர்மாலை சூடிய கோட்புலியாரது செயலினைச் சொல்வோம். |
(வி-ரை) பந்தனையும் மெல்விரலாள் - பந்தாடும் செயலினை உடைய விரல்கள் என அவற்றின் செயலுக்குரிய மென்மை யியல்பு குறித்தது. |
பாதம் வந்தணையு மனத்துணையார் - வெளிப்பட்டு வந்து அருளுதற்கிடமாகிய மனத்தின் துணைகொண்டவர். இறைவர் இவரது கனாவிலுணர்த்திய சரிதக் குறிப்பு; சரிதசாரம். மனத்துணையார் - மனத்துள் நையார் என்றலுமாம். |
அலங்கல் - குவளைமாலை; கொத்து - கொத்து. |
தனிவீரராந்தலைவர்...செயல் - வருஞ்சரிதத் தோற்றுவாயாகிய குறிப்பு - இப்பாட்டு இச்சரித முடிப்பும் வருஞ்சரி்தத் தோற்றுவாயுமாகிய கவிக்கூற்று. |
7 |
சரிதச்சுருக்கம் - புகழ்த்துணை நாயனார் புராணம் :- செருவிலி புத்தூரிலே சிவவேதியர் திருமரபிலே சிவனது அகம்படிமைத் தொண்டிற் சிறந்தவர் புகழ்த்துணையார். அவர் சிவபெருமானைத் தத்துவ நெறியில் சிவாகம விதிப்படி வழிபட்டு வந்தார். அக்காலத்தில் வற்கடம் வந்தது. அவர் பசியால் வாடினர். அப்போதும் இறைவரை விடுவேனல்லேன் என்று இரவும் பகலும் விடாது பூவும் நீரும் கொண்டு பூசித்து வந்தனர். ஒருநாள் பசியால் வாடி இறைவரை திருமஞ்சன மாட்டும் பொழுது திருமஞ்சனக் குடத்தைத் தாங்க மாட்டாமையால் கைதவறிக் குடத்தினை இறைவர் திருமுடிமேல் விழுத்திட்டு நடுங்கி வீழ்ந்தனர். அப்போது இறைவரது திருவருளால் துயில் வந்தது. இறைவர் அவர் கனாவில் தோன்றி உணவுப் பொருள் மங்கியகால முழுதும், நாள் ஒருகாசு நாம் தருவோம் என்று அருளினர். புகழ்த்துணையார் துயிலுணர்ந்து எழுந்து பீடத்தின் கீழ்ப் பொற்காசு கண்டு கைக்ெ்காண்டு களித்தனர். அவ்வாறு வற்கடம் நீங்கும்வரை இறைவர் நாடோறும் அளித்த காசு கொண்டே துன்பம் நீங்கியிருந்து, இறைவரது வழிபாடு செய்து வாழ்ந்திருந்து பின் சிவனடி சேர்ந்தனர். |
கற்பனை :- (1) சிவமறையோர் திருக்குலம் சிவனுக்கு வழிவழி யடிமையே செய்யும் சிறப்புடையது. |
(2) சிவபூசை வழிபாடு செய்தல் தவமாம். அது தத்துவத்தின் வழிச் சிவாகம விதிவழியே செய்யத்தக்கது. |
(3) வற்கடம் வந்து பசிப்பிணியால் வாடியபோதும் சிவபூசை விடாது செய்யத் தக்கது. |
(4) பசிப்பிணியால் வருந்திடினும் உடல் தளர்ந்து வீழ்வளவும் பூசைசெய்தல் வேண்டும்; அந்நிலையில் இறைவர் அருள் புரிந்து காத்து வழிபாட்டினை முட்டாமற் செய்யத் தருவது திண்ணம். |
(5) சிவ வழிபாடு வீடுபேற்றுக்குச் சாதனமாம். |
தலவிசேடம் - செருவிலிபுத்தூர் :- மூவர்பாடலும் பெற்ற திருப்பதி; அரிசிற்கரைப் புத்தூர் என்றும், அழகாத்திரிப் புத்தூர் என்றும், அழகார்புத்தூர் என்றும் வழங்குவது. காவிரித்தென்கரை 66 - வது பதி; சுவாமி - படிக்காசு வைத்த பரமர்; அம்மை - அழகம்மையார்; பதிகம் 3; 2301 பாட்டின்கீழ்ப் பார்க்க. |
கும்பகோணத்துக்குத் தெற்கில் 4 நாழிகையளவில் குடவாயிலுக்குச் செல்லும் பெருவழிக் கற்சாலையில் உள்ளது. |
56. புகழ்த்துணை நாயனார் புராணம் முற்றும். |