பக்கம் எண் :

பெரியபுராணம்437

     தொகை :- வல்லமையினைக் கொண்ட வேலேந்திய ஆண்மக்களிற் சிறந்த
கோட்புலியார்க்கும் அடியேன்.
 
     வேல் நம்பி - அரசர் சேனாபதி யாதலும், அடல்சூழ்ந்த - அன்பின்
வலிமையும், அதன் நெறியினை நிறைவேற்றலின் வல்லமையும் குறித்தது. சரிதக்குறிப்பு.
தொகைநூல் சரித வரலாற்றுக் குறிப்பும் பெயரும் கூறிற்று.
 
     வகை :- பெற்ற முயர்த்தோன்......கோன் - இடபக் கொடியினை உயர்த்த
இறைவரது “திருவிரையாக்கலி” என்னும் ஆணையினைப் பிழைத்தவர்களாகிய தமது
சுற்றம் முழுதும் அறுக்கும் தொழிலையுடைய திருநாட்டியத்தான் குடியின் தலைவர்;
குற்றமறுக்குங் கோட்புலி - குற்றத்தினை அறுத்துப் போக்குகின்ற கோட்புலியார்;
நாவல் குரிசிற்....பெருந்தகையே - திருநாவலூரராகிய ஆளுடைய நம்பிகளுடைய திரு
அருள் பெற்ற அருட்கடல் போன்றவர் என்று உலகவர் ஏத்தும் பெருந்தகையே.
 
     கோட்புலி - தமது சுற்ற மறுக்கும் தொழிற்கோன்; அருட் கடல்; என்று உலகு
புகழும் பெருந்தகையாராவர்.
 
     விரையாக்கலி - சிவனது ஆணை; விரையாக்கலி எனும் ஆணை; “பொய்தீர்,
விரையாக் கலியெனு மாணையும்” (கோயினான் - 4) பிழைத்தல் - அவ்வாணையினை
மீறிப் பிழைசெய்தல்; சுற்றமறுக்கும் - குற்றமறுக்கும் - சுற்றத்தைக் கொன்ற
வகையினாலே அவர்கள் செய்த சிவாபராதமாகிய குற்றத்தினுக்குக் கழுவாய்
வகுத்தலைக் குறித்தது. நாவற்குரிசில் - திருநாவலூரராகிய ஆளுடைய நம்பிகள்;
அருட்கடல் - இவர் செயல் வன்கண்மையுடன் கூடிய மிகக்கூடிய தொன்றாகக்
காணப்படினும், அஃது உண்மையில் அச்சுற்றத்தாரது சிவாபராதப் பெரும்பிழையினைத்
தண்டம் செய்து அறுக்கும் கருணையினை உட்கொண்டது. “உன்னுடைய கைவாளால்
லுறுபாச மறுத்த கிளை, பொன்னுலகின் மேலுலகம் புக்கணைய” (4144) என்பதும்,
இயற்பகையார் சரிதமும் காண்க. கோன் - கோட்புலி - பெருந்தகை என்று கூட்டுக.
தொகைநூல் கூறியவற்றுடன் திருத்தொண்டின் வரலாறும் வகைநூல் கூறியது.
 
     விரி :- 4134. (இ-ள்) நலம் பெருகும்.....பெயரார் - நன்மை பெருகுகின்ற
சோழநாட்டில் திருநாட்டியத்தான் குடியில் வேளாளர் குலம் புகழால் மிகப் பெருகும்
படி வந்து அக்குலத்தில் அவதரித்தவர் கோட்புலியார் என்னும் பெயரினை யுடையவர்;
தலம்பெருகும்...விளைப்பார் - உலகில் பெரு ஆட்சி நிகழ்கி்ன்ற புகழினையுடைய
சோழமன்னரது சேனாபதியாராகிப் பகையரசரது நாட்டவர்க்கு மிக்க துன்பம்
விளையும்படி போர் செய்து புகழ் விளைப்பாராய்,                         1   
     
 
     4135. (இ-ள்) மன்னவன்பால்......வளமெல்லாம் - அரசனிடம் அத்தொழிலிற்
பெறுகின்ற சிறந்த வளங்களை யெல்லாம்; மதியணியும்....திருப்பணியே - சந்திரனை
அணிந்த இறைவரது கோயில்கள் தோறும் திருவமுதுக்குரிய படித்தரம்
பெருகுவதற்காகச் செந்நெல்லினை மலைச்சிகரம் போலக் குவித்துச் செய்துவரும்
திருப்பணியினையே; பன்னெடு.....ஓங்குநாள் - பல நீண்ட காலங்கள் செய்துவருகின்ற
ஒழுங்கு பெறும்படி செய்து பணிசெய்து சிறந்து வாழும் நாளிலே.             2
 
     4136. (இ-ள்) வேந்தன்....செல்கின்றார் - அரசனது ஏவலினாலே பகைவர்களது
கொடிய போரின் மேற் செல்கின்றாராகிய அந்நாயனார்; பாந்தள்.....கட்டி -
பாம்பினையே பூணாக அணிந்த இறைவர்க்குத் திரு அமுதுக்குரியபடியாகப் பெருமை
யுடைய அவர்தாம் வரும் வரையில் வேண்டிய அளவு செந்நெல் பொருந்திய நெற்